Published : 17 Oct 2016 10:17 AM
Last Updated : 17 Oct 2016 10:17 AM

உன்னால் முடியும்: இயற்கை கூரைகள் கொடுத்த மகிழ்ச்சியான வாழ்க்கை

புதுச்சேரி அருகே உள்ள வில்லியனூரைச் சேர்ந்தவர் முகம்மது ஹூசைன். விவசாயக் குடும்பம். புதுச்சேரியில் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு ஒரு விதை தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர். அங்கிருந்த நெருக்கடிகள் காரணமாக வெளியேறி சொந்த தொழில் தொடங்கி இன்று வெற்றிகரமான தொழில்முனைவோராக வளர்ந்து நிற்கிறார். அவரது அனுபவம் இந்த வாரம் `வணிக வீதி’-யில் இடம்பெறுகிறது.

படித்து முடித்ததுமே விதைகள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் வேலை கிடைத்தது. அங்கு மூன்று ஆண்டுகள் வேலைபார்த் தாலும் கடுமையான பணிச்சுமை காரண மாக தொடர்ந்து அந்த வேலையிலேயே இருப்பது நம்பிக்கை கொடுக்கவில்லை. அதனால் வேறு வேலை தேடுவது அல்லது சொந்தமாக தொழில் செய்வது என்கிற முடிவில் அந்த வேலையை விட்டு விட்டேன். அந்த நேரத்தில் சென்னையில் ஒரு கட்டுமான நிறுவனத்தினருக்கு செங்கல் உற்பத்தி செய்து கொடுக்க எனது உறவினர் ஒருவர் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தார்.

அதற்கான முன்பணம் மற்றும் தொழில் தொடங்குவதற்கான ஆரம்ப நிதித் தேவைகளையும் அந்த நிறுவனம் கொடுத்தது. நான் எனது ஊரிலேயே ஒரு இடத்தை குத்தகைக்கு எடுத்து செங்கல் தயாரிப்பு வேலைகளில் இறங்கினேன். முதலில் அவர்களது ஆர்டரை முடித்து கொடுத்ததும் திரும்ப வும் ஆர்டர் கொடுத்தனர். பின்பு வெளி யிலும் விற்கத்தொடங்கினேன். செங்கல் தவிர, சுற்றுச் சூழல் சார்ந்த பசுமை வீடுகள் கட்டுபவர்களிடமிருந்து வயர்கட் பிரிக்ஸ் கேட்டும் ஆர்டர்கள் வந்தது.

அந்த கற்களை வாங்கியவர்கள் சிலர் பசுமைக் குடில்களைக் கட்டுவதற்கான உதவிகள், யோசனைகளைக் கேட்பார்கள். பெங்களூருவுக்கு ஒரு முறை இந்தவகையிலான கற்களை அனுப்பியபோது, அவர்கள் பசுமைக் குடில் அமைத்து தர முடியுமா என்று கேட்டனர். கீற்று, வைக்கோல் கொண்டு கூரைகள் அமைப்பது போல ஒருவகை தடிமனான கோரையைக் கொண்டு அமைத்துக் கொடுத்தேன். நம் ஊர்பக்கம் ஏரிகளில் இந்த கோரைகள் விளைகிறது. இதில் கூரை அமைத்தால் பத்து ஆண்டுகள் வரை தாக்கு பிடிக்கும். இந்த முதல் ஆர்டரை செய்வதற்கு முன் இது குறித்து இணையதளங்களில் தேடியபோது, இதற்கான இடத்தை தற்போது சிந்தடிக் கூரைகள் ஆக்கிரமித்துள்ளது தெரிந்தது.

சிந்தடிக் கூரைகளின் நன்மைகள் என்று விளக்குகிறபோது, இயற்கை கூரைகளில் உள்ள நெகட்டிவ்களைத்தான் குறிப்பிடுகின்றனர். இந்த நெகட்டிவ் தன்மைகளை எப்படி சரிசெய்யலாம் என யோசித்து பல முயற்சிகளை செய்து முதல் ஆர்டரை சிறப்பாக முடித்து கொடுத்தேன். அதற்கு பிறகு அந்த நிறுவனத்தின் மூலமே மும்பை மரைன் இன்ஜினீயரிங் நிறுவனத்தினரிடமிருந்து பெரிய ஆர்டர் கிடைத்தது. இங்கிருந்து பொருட்கள். ஆட்கள் கொண்டு சென்று அங்கு தங்கியிருந்து வேலைபார்த்து முடித்து கொடுத்தேன். அதற்கு பிறகு செங்கல் உற்பத்தியிலிருந்து விலகி இந்த தொழிலையே முழுநேரமாக செய்யத் தொடங்கினேன்.

ஏரிகளில் புதர்போல மண்டும் கோரைகளுக்காக இங்குள்ள ஒரு ஏரியை குத்தகைக்கு எடுத்துள்ளேன். அதுபோல மூங்கில் மற்றும் மரப் பலகை தேவைகளுக்கான மரங்களாக வாங்கி தேவைக்கேற்ப பலகைகளை தயார் செய்து இங்கிருந்துதான் எடுத்துச் செல்கிறேன். தற்போது இயற்கை கூரைகள் மட்டுமில்லாமல் மர வீடுகளை அமைத்து கொடுக்கவும் செய்கிறேன்.

இந்தத் துறைக்கு மூலப் பொருட்கள் தாராளமாகக் கிடைத்தாலும் ஆட்கள் கிடைப்பதில்லை. வடிவமைப்புக்கு ஏற்ப பலகைகளை அறுத்து தயார் செய்யும் முதல் ஆள் கடைசி வரைக்கும் இருப்பதில்லை. வெளியூரில் தங்கி வேலை செய்ய வேண்டும் என்றால் வரத் தயங்குகின்றனர். நாம் வெளியூரில் நமக்கு ஏற்ற ஆட்களையும் தேடிக் கொள்ள முடியாது. ஆனாலும் வேலைகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப 10 முதல் 25 ஆட்களுக்கு வேலை கொடுத்து வருகிறேன். அடுத்த கட்டமாக ஒரு இடத்தை வாங்கி இது போன்ற மரவீடுகள், கூரை வீடுகளை அமைத்து காட்சிப்படுத்த வேண்டும் என்கிற யோசனையில் உள்ளேன்.

vanigaveedhi@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x