Published : 10 Oct 2016 01:07 PM
Last Updated : 10 Oct 2016 01:07 PM
பழமைக்கு உள்ள மவுசு என்றும் குறையாதது. கடந்த வாரம் கோவாவில் நடைபெற்ற வின்டேஜ் பைக் மற்றும் கார் பேரணி இதை நன்கு உணர்த்தியது.
கோவாவின் தெருக்களில் அணிவகுத்து வந்த பழங்கால கார் மற்றும் மோட்டார் பைக்குகள் பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தியது.
இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க வந்திருந்த கோவா யூனியன் பிரதேச சுற்றுலாத்துறை அமைச்சர் திலீப் பாருலேகர் இதை ஆண்டுதோறும் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்தப் பேரணியில் 83 பழங்கால கார்களும் 40 மோட்டார் சைக்கிளும் பங்கேற்றன. இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேரணி உள்ளூர் மக்களை மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது. 1921-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மாடல் கார்களிலிருந்து 1971-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மாடல் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர்கள் இடம்பெற்றிருந்தன.
நீண்ட தொலைவு பயணித்த பழங்கால கார்களுக்கான பரிசை 1946-ம் ஆண்டு மாடல் ஃபோர்டு ஜீப், 1965-ம் ஆண்டின் மெர்சிடஸ் பென்ஸ், 1965-ம் ஆண்டு மாடலான விஎப்ஜே ஜோங்கா, 1964 மாடல் ஸ்டாண்டர்ட் ஹெரால்ட் கார்கள் பெற்றன.
பழங்கால மோட்டார் சைக்கிளில் நீண்ட தொலைவு பயணித்ததற்காக 1965-ம் ஆண்டு தயாரான பிஎம்டபிள்யூ ஆஎஸ்ஓ மோட்டார் சைக்கிள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
சிறந்த வின்டேஜ் காருக்கான பரிசை 1921-ம் மாடல் சிட்ரோயன் காரும், சிறப்பாக பராமரிக்கப்பட்ட வின்டேஜ் மோட்டார் சைக்கிளாக 1942-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட நார்டன் 16ஹெச் மோட்டார் சைக்கிளும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதேபோல சிறப்பாக பராமரிக்கப்பட்ட கார்களுக்கான பரிசை 1961-ம் ஆண்டு பியட் 500 டி கார் மற்றும் 1965-ம் ஆண்டின் லாம்பிரெட்டா எல்ஐ 150 ஸ்கூட்டரும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
சிறந்த இந்திய புராதன காருக்கான பரிசை 1964-ம் ஆண்டின் ஸ்டாண்டர்டு ஹெரால்டு தட்டிச் சென்றது. அதேபோல 1962-ம் ஆண்டு தயாரான ஜாவா மோட்டார் சைக்கிள் சிறந்த மோட்டார் சைக்கிளுக்கான விருதைப் பெற்றது.
அனைவரது கவனத்தையும் கவர்ந்த காராக 1968-ம் மாடல் ஃபோக்ஸ்வேகன் 1600 எல் காரும் தேர்வு செய்யப்பட்டன.
பிரத்யேகமான காருக்கான விருதை 1941-ம் ஆண்டு தயாரான ஃபோர்டு ஆர்டிலரி டிரக்கும், 1959-ம் ஆண்டின் மோரிஸ் மினி மைனர் காரும் பெற்றன.
சீறிப் பாயும் கார்கள் நவீன தொழில்நுட்பத்தில் வந்தாலும் `ஓல்டு ஈஸ் கோல்டு’ என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த பேரணி இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT