Published : 24 Oct 2016 11:09 AM
Last Updated : 24 Oct 2016 11:09 AM

அனைவரையும் கவர்ந்த ரெனால்ட் டிரஸோர்!

ஆட்டோமொபைல் கண்காட்சி இத்துறையினரை மட்டுமின்றி பொது மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ஒரு நிகழ்ச்சி. சர்வதேச கண்காட்சிகளில் இது மிகவும் மதிப்பு மிக்க நிகழ்வாகவே கருதப்படுகிறது. இதனாலேயே ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது எதிர்கால தயாரிப்புகளை இக்கண்காட்சிகளில் காட்சிப்படுத்தி மக்களின், பிற நிறுவனங்களின் கவனத்தை ஈர்க்க பெரிதும் முயற்சி செய்கின்றன.

பாரீஸில் நடந்து முடிந்த சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்த கார்களில் முதலிடத்தைப் பிடித்தது ரெனால்ட் நிறுவனத்தின் டிரஸோர்.

முற்றிலும் பேட்டரியால் இயங்கும் இந்த காரை தனது எதிர்கால தயாரிப்பாக ரெனால்ட் நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது.

ரெனால்ட் கார் வடிவமைப்புகளின் தலைவரான லாரன்ஸ் வான் டென் ஆகெர், புதிதாக வடிவமைத்துள்ள டிரஸோர் குறித்து பேசுகையில், ரெனால்ட் மாடல் கார்களில் இது முற்றிலும் புதியது என்று தெரிவித்துள்ளார்.

மிகவும் நீளமான பானட், இருவர் மட்டுமே சவுகர்யமாக பயணிக்கக் கூடிய வடிவமைப்பு, உள்புறம் முழுவதும் கருஞ் சிவப்பு நிறத்தாலான தோலினால் ஆன இருக்கைகள் உள்ளன. இதன் மேற்கூரை திறந்து மூடும் வகையில் உள்ளது. இதைத் திறந்துதான் காரினுள் நுழைய வேண்டும். வேறு கதவுகள் கிடையாது.

இதில் மிகவும் திறன் வாய்ந்த மோட்டார் உள்ளது. இது 350 பிஎஸ் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இதனால் 4 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்ட முடியும். இதில் உள்ள இரண்டு பேட்டரிகளில் ஒன்று முன் புறத்திலும் மற்றொன்று பின்புறத்திலும் வைக்கப்பட்டுள்ளன. பேட்டரி வெப்பமாவதைத் தடுக்க பிரத்யேக குளிர்விப்பு வசதியும் உள்ளது. பேட்டரிகள் முன்புறம் மற்றும் பின்புறங்களில் உள்ளதால் வாகனத்தின் எடை சரி சமமாக பகிர்ந்து வாகன செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. பிரேக் பிடிக்கும்போது விரயமாகும் சக்தியை மீண்டும் பயன்படுத்தும் வகையிலான நுட்பம் இதில் உள்ளது.

அனைவரையும் கவர்ந்த இந்த கார் எப்போது சந்தைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பை பெரிதும் ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x