Published : 31 Oct 2016 11:04 AM
Last Updated : 31 Oct 2016 11:04 AM
திருமணத்துக்கு முன்பாகவே தனக்கான தொழிலைத் தேர்வு செய்து, அதில் வெற்றிபெற்றுவிடும் தொழில்முனைவோர்கள் சிலர்தான். அதில் ஒருவர் கலைவேந்தன். சொந்த ஊர் பழனி. கோயம்புத்தூரில் உலர் காய்கள், பழ பவுடர்கள் என பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் தொழிலை மேற்கொண்டுவருகிறார். அவரது தொழில் அனுபவம் இந்த வாரம் ``வணிகவீதி’’-யில் இடம் பெறுகிறது.
எனது குடும்பத்தில் முதல் தலைமுறையாக கல்லூரி சென்றது நான்தான். அதிலும் இப்போது சொந்த தொழிலில் வருமானம் ஈட்டுகிறேன் என்பதுகூட சாதாரண விஷயமல்ல என தனது தொழில் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.
ஊரிலிருந்து படிப்பதற்காகத்தான் இங்கு வந்தேன். அரசு கலைக் கல்லூரியில் பிபிஎம் படித்தேன். அதற்கு பிறகு இங்கேயே எம்பிஏ சேர்ந்தேன். எம்பிஏ படித்துவிட்டால் நல்ல வேலை கிடைக்கும், நமது நிலைமைகள் எல்லாம் மாறிவிடும் என்கிற ஆசைதான் எனக்கும் இருந்தது. ஆனால் படித்து முடித்து வெளியில் வந்ததும்தான் நிலைமை அப்படியில்லை என புரிந்தது. ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்பது ஒருபக்கம் என்றால், கிராமப்புற மாணவன் என்பதால் இயல்பாகவே எனக்குள்ளும் ஒரு தயக்கம் இருக்கத்தான் செய்தது. இதனால் ஏதாவது ஒரு வேலை கிடைத்தால்கூட போதும் என்கிற நிலைமையை உணர்ந்தேன். அப்படியும் வேலை கிடைக்கவில்லை என்பதால் ஊருக்குச் சென்றுவிட்டேன்.
சில நாட்களில் ஒரு நண்பனின் திருமணத்துக்காக ஊரிலிருந்து கோவை வந்திருந்தபோது ரிலையன்ஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் வேலைக்கு நேர்காணல் நடப்பது கேள்விப்பட்டு கலந்து கொண்டேன். அந்த வேலை கிடைத்தது. அங்கு 11 மாதங்கள் பணியாற்றிய நிலையில், வாசன் ஐகேர் நிறுவனத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. இதனால் ரிலையன்ஸ் வேலையை ராஜினாமா செய்தேன். ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகும் வேலையில் சேர்த்துக் கொள்ளாமல் இழுத்தடித்ததால், பேப்பர் இறக்குமதி செய்யும் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்.
அங்கு வேலைபார்த்துக் கொண்டிருந்த நாட்களில் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு இருக்கிறது என உறவினர் ஒருவர் குறிப்பிட்டார். எனக்கும் ஆசை இருந்ததால் அதற்கு தயாரானேன். ஆனால் அந்த வேலைக்காக விசா எடுக்க ஏஜெண்டிடம் பணம் கட்டி ஏமாந்ததுதான் மிச்சம்.
மீண்டும் கோவை வந்து, உணவு பதப்படுத்தும் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு சில மாதங்கள் வேலை செய்த நிலையில் துபாயில் மார்க்கெட்டிங் வேலை கிடைத்தது. துபாயில் ஒரு ஆண்டு இருந்துவிட்டு ஊருக்கு வந்திருந்த நாட்களில், திரும்ப செல்லும் சூழ்நிலை வீட்டில் இல்லை. நான் இங்கேயே இருக்க வேண்டிய சூழல் உருவானது. இதனால் திரும்பவும் கோவையில் பழைய நிறுவனத்துக்கே வேலைக்குச் சென்றேன். இப்படியாக நான்கு ஆண்டுகளில் பல வேலை அனுபவம், ஏமாற்றம், விரக்தி என வாழ்க்கை சுழன்றடித்தது.
பழைய நிறுவனத்திலேயே வேலை கிடைத்தாலும் அங்கு முன்பு போல பிசினஸ் இல்லை. பலரும் வேலையை விட்டு சென்றுவிட்டனர். ஆனால் நான் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். அங்கு நிறுவனத்தின் கணக்குகள் முதல் டெஸ்பாட்ச் வரை அனைத்து வேலைகளையும் கற்றுக் கொண்டேன். அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களும் கைவிட்டு போகும் நிலையில் நான் தனியாக தொழிலில் இறங்கலாம் என முடிவெடுத்தேன். இதற்கேற்ப பல வாடிக்கையாளர்களும் ஊக்கம் கொடுத்தனர்.
ஏற்கெனவே எனக்கு மார்க்கெட்டிங் அனுபவம் இருந்ததால் புதிய வாடிக்கை யாளர்களையும் கொண்டுவந்தேன். உணவுப் பொருள் தயாரிப்பவர்களுக்கு நேரடியாகவே விற்பனை செய்வதால் மொத்த விற்பனை, சில்லரை விற்பனை சார்ந்த நடைமுறை சிக்கல்கள் கிடையாது. ஆனால் சிறிய வயது என்பதால் ஆளைப் பார்த்து சில இடங்களில் மரியாதை கூட குறைய இருக்கும். ஆனால் ஒருமுறையில் சந்திப்புக்கு பிறகு பலரும் என்னை உற்சாகப்படுத்தவே செய்கிறார்கள்.
இப்போது 5 நபர்கள் வேலை செய் கிறார்கள். நானும் என்னை மார்க்கெட்டிங் ஹெட் என்றுதான் சொல்லிக் கொள்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த தொழில் கொடுத்துள்ள மரியாதையும், வருமானமும் என்னை தலைநிமிரவும், தன்னம்பிக்கை உள்ளவனாகவும் மாற்றி யுள்ளது. எனது குடும்பத்துக்கு இதை விடவும் சிறந்த மகிழ்ச்சியை என்னால் கொடுத்துவிட முடியாது என்றார்.
vanigaveedhi@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT