Last Updated : 17 Oct, 2016 11:30 AM

 

Published : 17 Oct 2016 11:30 AM
Last Updated : 17 Oct 2016 11:30 AM

இந்திய கூட்டாட்சி அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஜி.எஸ்.டி

சரக்கு மற்றும் சேவை வரியைத் (ஜிஎஸ்டி) தீர்மானிக்கும் குழு ஏற்கெனவே இரு முறை கூடி இருக்கிறது. இந்த குழுவின் அடுத்த கூட்டம் இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு நடக்க இருக்கிறது. ஏப்ரல் 1-ம் தேதிக்குள் அமல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் நடைமுறையில் பல சிக்கல்கள் இருக்கின்றன.

இந்திய அரசியல் சட்டத்தின் 101-வது சட்ட திருத்தம் நாடாளுமன்ற இரு அவைகளிலும், 17 மாநிலங்களின் சட்டமன்றங்களிலும் நிறைவேற்றிய பின்பு குடியரசுத் தலைவர் அதற்கு இசைவு தந்துள்ளார். இதன் மூலம் ஜி.எஸ்.டி. என்ற புதிய வரியை விதிக்கும் அதிகாரத்தை மத்திய, மாநில அரசுகள் பெறுகின்றன. ஜி.எஸ்.டி. இந்திய பொருளாதாரத்தில் கவனிக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்றாலும், இந்திய கூட்டாட்சி அரசியலிலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது.

1991-ம் ஆண்டிற்குப் பிறகு வந்த பொருளாதார சீர்திருத்தம், பொருளாதார நிர்வாகத்தில் மாநில அரசுகளின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது. எல்லா மாநிலங்களும் போட்டி போட்டுக்கொண்டு வரி விலக்கும், கட்டமைப்பு வசதிகளையும் அளித்து எல்லாத்துறைகளிலும் தனியார் முதலீடுகளை ஈர்க்கின்றன. நாடு முழுவதிலும் பொருட்களின் மீதான வரி ஒரே மாதிரியாக இருப்பது அவசியம் என்பதினால் ஜி.எஸ்.டி. வரி விதிக்க எல்லா மாநிலங்களும் ஒப்புகொண்டன. ஆனால், ஜி.எஸ்.டி வந்ததினால் மாநிலங்கள் வரி விதிக்கும் அதிகாரத்தை இழப்பதுடன், கணிசமாக வரி வருவாயையும் இழக்க நேரிடும் என்று அ.தி.மு.க. வெளிப்படையாக தெரிவித்தது. ஜி.எஸ்.டி. செயல்படுத்தும் முறை மத்திய-மாநில அரசுகளுக்கிடையே உள்ள அரசியல் உறவையும் அவ்வப்போது சோதித்து பார்க்கக்கூடியதாக இருக்கும்.

ஜி.எஸ்.டி. என்னும் இரட்டை வரி முறை

அரசியல் சட்ட திருத்தம் ஜி.எஸ்.டி. என்னும் வரியை விதிக்க அதிகாரம் அளிக்கின்றதே தவிர, அந்த வரிக்கான சட்டங்களை இனிமேல்தான் இயற்றி மக்கள் மன்றங்களில் நிறைவேற்ற வேண்டும். மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் கிட்டத்தட்ட 17 விதமான வரிகளுக்கு பதில் இனி ஜி.எஸ்.டி என்ற ஒரே வரி இருக்கும். இந்த 17 வரிகளில் 3 முக்கிய வரிகளை பற்றி கூறவேண்டும். மத்திய அரசு விதிக்கும் சேவை வரி இனி ஜி.எஸ்.டி வரியாக இருக்கும். அதே போல் பொருட்கள் உற்பத்தி மீது மத்திய அரசு விதிக்கும் உற்பத்தி வரி, மாநிலங்கள் விதிக்கும் மதிப்பு கூட்டு வரி (வாட்) இருக்காது, இவற்றிற்கு பதில் ஜி.எஸ்.டி வரி இருக்கும்.

ஆனால், பெட்ரோலிய பொருட்கள், மதுபான வகைகள் மீது உள்ள உற்பத்தி வரி, விற்பனை வரி இப்போது உள்ளது போலவே தொடரும். இந்த இரண்டு பொருட்களும் ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு வராது. மாநில அரசுகளின் வரி வருவாயில் இவை கணிசமான (30% முதல் 40% வரை) பங்களிப்பை செய்கின்றன. ஜிஎஸ்டி வரம்புக்குள் வந்தால் வரிவருவாய் இழப்பு ஏற்படுமோ என்று மாநிலங்கள் அஞ்சுகின்றன.

ஜி.எஸ்.டி என்ற வரியை மத்திய, மாநில அரசுகள் ஒரே நேரத்தில் எல்லா பொருட்கள், சேவைகள் மீது விதிக்க அரசியல் சட்ட திருத்தம் அதிகாரம் அளிக்கிறது. எனவே ஜி.எஸ்.டி என்பதை இரட்டை வரி (Dual Tax) என்கின்றனர். உதாரணமாக 10% ஜி.எஸ்.டி என்று வைத்துக்கொள்வோம். இதில் 5% மத்திய ஜி.எஸ்.டி எனப்படும் CGST க்கு செல்லும், மற்றொரு 5% மாநில ஜி.எஸ்.டி என்ற SGST க்கு செல்லும். ஒரு மாநிலத்தில் உள்ள வியாபாரி மற்றொரு மாநில நுகர்வோருக்கு பொருளை விற்கும் போது, 5% CGST க்கும் மற்றொரு 5% IGST என்ற தொகுப்பு நிதியத்திற்கு சென்று, பிறகு நுகர்வோரின் மாநிலத்திற்கு சென்றுவிடும். உதாரணமாக தமிழக வியாபாரி கேரள வியாபாரிக்கு ஒரு பொருளை விற்றால், அதன் மீது 10% வரி வசூலித்து, அதில் 5% CGST கணக்கிலும் 5% IGST கணக்கிலும் செலுத்திவிடுவார். பின்பு அந்த IGST வரி பணம் கேரள அரசுக்கு சென்றுவிடும்.

இப்போது ஜி.எஸ்.டி க்கு மூன்று சட்டங்கள் தேவைப்படுகிறது அதாவது CGST, SGST, IGST என்ற சட்டங்கள் தேவை. இவற்றில் CGST சட்டம் பாராளுமன்றத்திலும், SGST, IGST சட்டங்கள் சட்டமன்றங்களிலும் நிறைவேற்றப்பட வேண்டும். மேலும், ஜி.எஸ்.டி, கீழ் வரும் பொருட்கள், சேவைகள் என்ன, எந்தெந்த பொருட்களுக்கு, சேவைகளுக்கு வரி விலக்கு அளிப்பது, பெட்ரோலிய பொருட்களை எப்போது ஜி.எஸ்.டி கீழ் எடுத்துவருவது, எந்த அளவில் வரி விகிதங்கள் இருக்கவேண்டும். என்றெல்லாம் நிர்ணயிக்க வேண்டும். இந்த சிக்கலான வேலைகளைச் செய்ய ஜி.எஸ்.டி குழு (GST Council - இந்திய அரசியல் சட்டம் பிரிவு 279A) ஒன்றை அரசியல் சட்டத்திலேயே ஏற்படுத்தி உள்ளனர்.

ஜி.எஸ்.டி, குழு அமைப்பு

அரசியல் சட்ட நிறுவனமாக இருக்கும் ஜி.எஸ்.டி குழு ஒரு நிரந்தர அமைப்பாகும். இதில் மத்திய நிதி அமைச்சர் தலைவராகவும், மத்திய துணை நிதி அமைச்சர், 29 மாநில நிதி/வர்த்தக வரி அமைச்சர்கள், 2 யூனியன் பிரதேச நிதி/வர்த்தக வரி அமைச்சர்கள் உறுப்பினர்களாக இருப்பர். மொத்தம் 33 உறுப்பினர்களை கொண்ட இந்த ஜி.எஸ்.டி குழு பரிந்துரைக்கும் வரி விகிதங்கள், வரி வசூலிக்கும் முறைகள் எல்லாவற்றையும் மத்திய, மாநில அரசுகள் தங்கள் மக்கள் மன்றங்களில் சட்டங்களாக நிறைவேற்றி செயல்படுத்தவேண்டும்.

ஜி.எஸ்.டி குழுவின் பரிந்துரைக்கு மாறாகவோ, அல்லது ஜி.எஸ்.டி குழுவால் பரிந்துரைக்காத எதையும் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக் கூடாது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே அல்லது மாநில அரசுகளுக்கு இடையே பிரச்சினைகள் வந்தாலும், ஜி.எஸ்.டி குழு தீர்வு காணவேண்டும்.

ஜி.எஸ்.டி குழு முன் உள்ள சவால்கள்

ஆரம்பத்திலேயே இதில் சிக்கல்கள் துவங்கிவிட்டன. கேரள நிதி அமைச்சர் ஐசக் தாமஸ் இப்போதுள்ள நடைமுறையில் சில குறைகளை சுட்டிக்காட்டியுள்ளார். ஜி.எஸ்.டி குழுவில் உறுப்பினராக உள்ள ஒரு அமைச்சர் தனக்கு பதிலாக வேறு ஒரு அமைச்சரை குழு கூட்டத்திற்கு அனுப்பமுடியாது. அதே போல், அமைச்சர்கள் வரமுடியாத நேரத்தில், குழு கூட்ட அரங்கில் கூட மாநில அரசு அதிகாரிகளை அனுமதிக்காததும் விவாதத்தை முன்னெடுத்து செல்லத் தடையாக இருக்கும் என்றும் கூறுகிறார்.

வருவாய் இழப்பீடு செய்யும் முறை

ஜி.எஸ்.டி வரி அமல்படுத்துவதால், மாநில அரசுகளுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படும் என்பதை மத்திய அரசு ஒப்புக்கொண்டு, அதற்கான இழப்பீட்டுத் தொகை வழங்க அரசியல் சட்டத்திலேயே உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால், இழப்பை கணக்கிடும் முறை, எவ்வளவு ஆண்டுகளுக்கு முழுமையான இழப்பீடு தொகை வழங்கலாம் என்பதை ஜி.எஸ்.டி குழு தீர்மானிக்கவேண்டும்.

வருவாய் இழப்பீட்டை கணக்கிடுவதிலும் சிக்கல் உள்ளது. எதன் அடிப்படையில் வரி வருவாய் இழப்பை கணக்கிடுவது? கடந்த ஐந்து ஆண்டுகளில் உயர்ந்த வரி வருவாய் உள்ள மூன்று ஆண்டுகளின் சராசரியின் அடிப்படையிலா; கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரி வரி வருவாய் அதிகரிப்பின் அடிப்படையிலா; எல்லா மாநிலங்களின் கடந்த ஐந்து ஆண்டு வரி வருவாய் அதிகரிப்பை ஒவ்வொரு மாநிலத்தின் வரி வருவாய் அதிகரிப்பாக கொண்டு அதன் அடிப்படையிலா என்று பல சூத்திரங்களை அறிஞர்கள் கேட்கின்றனர். இதில் எது எந்த மாநிலத்திற்கு அதிக வருவாய் இழப்பை கொடுக்கும், எந்த சூத்திரம் மத்திய அரசின் செலவைக் குறைக்கும் என்பதை விவாதித்து ஜி.எஸ்.டி குழு முடிவு செய்யவேண்டும்.

விலக்கு அளிக்க வேண்டிவை

சில அத்தியாவசிய பொருட்கள், சேவைகள், சிறு வியாபார நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். மத்திய அரசின் உற்பத்தி வரி துறையில் 300 பொருட்களுக்கு வரி விலக்கு உண்டு, மாநில விற்பனை வரி விலக்கு 100 பொருட்களுக்கு உண்டு. இவற்றை இணைத்து புதிய பட்டியல் தயாரிக்கவேண்டும். அதே போல் உற்பத்தி வரி துறையில் ஆண்டிற்கு ரூ. 50 லட்சம் வரை வியாபாரம் செய்பவர் சிறு வியாபாரி, ஆனால் மாநில விற்பனை வரி துறைக்கு ரூ.10 லட்சம் வரை வியாபாரம் செய்பவர் மட்டுமே சிறு வியாபாரி. மாநில அரசின் அளவுகோலை ஒப்புக்கொண்டால், பல வியாபாரிகள் மத்திய அரசு வரி விதிப்புக்கு கீழ் வருவர். மத்திய அரசு அளவுகோலை ஒப்புக்கொண்டால், மாநில அரசுக்கு வரி விதிப்பிலிருந்து பல வியாபாரிகள் விடுபட்டு மாநிலத்திற்கு வருவாய் இழப்பு அதிகரிக்கும். இவற்றையும் முடிவு செய்வது ஜி.எஸ்.டி குழுதான்.

சட்டம் மற்றும் செயல் முறை

வரி விதிப்பு எளிமையாக இருக்கவேண்டும் என்பதுதான் ஜி.எஸ்.டி.-யின் குறிக்கோள் என்றால், ஒவ்வொரு வியாபாரியும் ஏதாவது ஒரு வரி அதிகாரிக்கு கட்டுப்பட்டாலே போதுமானது. சிறு, மற்றும் நடுத்தர வியாபாரிகளை மாநில வரி அதிகாரியின் கண்காணிப்பில் இருக்கவேண்டும் என்றும், பெரிய வியாபாரிகள் மத்திய அரசின் கண்காணிப்பில் இருக்கவேண்டும் என்றும் ஒரு யோசனை உள்ளது. இதற்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம். இந்த சிக்கலான பிரச்னைக்கு ஜி.எஸ்.டி குழு என்ன தீர்வு காணும் என்பதை பார்க்கவேண்டும்.

ஜி.எஸ்.டி வரியின் முக்கியமான செயல் முறைகளில் ஒன்று, “பொருள்/சேவை அளிக்கும் இடம்”(Place of Supply) என்பதை வரையறை செய்வதாகும். இணையதளம் மூலம் செய்யப்படும் வியாபாரத்தில் “பொருள்/சேவை அளிக்கும் இடம்” மிக முக்கியமானதாகும். ஏனெனில், எந்த இடத்தில் (மாநிலத்தில்) வியாபாரம் நடைபெறுகிறதோ அங்குதான் வரி வசூலிக்கப்படவேண்டும்.

வரி விகித நிர்ணயம்

ஜி.எஸ்.டி வரி விதிப்பிலிருந்து விலக்கவேண்டிய பொருட்களை கவனமாக தேர்ந்தெடுக்கவேண்டும். புகையிலை போன்ற பொருட்களின் மேல் அதிக வரி விகிதம் இருக்கலாம். அதே போல் பெட்ரோலிய பொருட்கள், மதுபான வகைகளை ஜி.எஸ்.டி-யின் கீழ் கொண்டுவரும்போது ஒட்டு மொத்த வரி விகிதம் குறைவாக இருக்கும். இதனையும் ஜி.எஸ்.டி குழு முடிவு செய்யவேண்டும்.

எல்லா மாநிலங்களும் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படாத வகையில் வரி விகிதம் இருக்கவேண்டும் என்று நினைக்கின்றன, இதனை RNR (Revenue Neutral Rate) என்பர். எந்த ஒரு மாநிலத்திற்கும் RNR அளவை கணக்கிடுவது கடினம், அதற்கான புள்ளிவிவரங்களும் இல்லை. ஜி.எஸ்.டி வரி விகிதம் மிக அதிகமாக இருந்தால் எல்லா மாநிலங்களுக்கும் வரி வருவாய் இழப்பு ஏற்படாது. ஆனால், வரி விகிதம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் பணவீக்கம் உயரும். அரசின் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம், சாதாரண பொருட்களுக்கு 15% வரி விகிதமும், மற்ற பொருட்களுக்கு 20% இருக்கலாம் என்று கூறுகிறார். காங்கிரஸ் கட்சி ஜி.எஸ்.டி விகிதம் 18 சதவீதத்தை தாண்டக்கூடாது என்று கூறுகிறது. ஜி.எஸ்.டி குழு இதில் எந்த முடிவை எடுக்கும், எந்த வரி விகிதத்திற்கு எந்த மாநிலம் ஆதரவு தரும் என்ற அரசியல் விளையாட்டு ஆரம்பமாகியுள்ளது.

சர்ச்சை தீர்வு மையம்

ஜி.எஸ்.டி என்பது ஒரு வரி, ஆனால் அதற்கு மூன்று சட்டங்கள் இருக்கும். இவற்றால் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் சர்ச்சை ஏற்படலாம்; அதே போல் மாநில அரசுகளுக்கிடையே சர்ச்சைகள் ஏற்படும். இந்த சர்ச்சைகளுக்கு தீர்வு காண தனியாக ஒரு ‘சர்ச்சை தீர்வு மையத்தை’ (Dispute Resolution Centre) ஜி.எஸ்.டி குழு உருவாக்கவேண்டும் என்று அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி குழு என்பதே ஓர் அரசியல் சட்ட அமைப்பாக இருப்பதால், அது உருவாக்கும் ‘சர்ச்சை தீர்வு மையமும்’ உயர்நீதி மன்ற அளவில்தான் இருக்கவேண்டும்.

மேலும் ஜி.எஸ்.டி வரி செலுத்தும் முறை கணினி மயமாக்கப்பட்டு அதற்கான ஒரு நிறுவனத்தை மத்திய மாநில அரசுகள் நிதி நிறுவனத்துடன் சேர்ந்து ஏற்படுத்தியுள்ளன. இதற்கு GSTNetwork என்று பெயர். எனவே ஜி.எஸ்.டி வரி வசூலிக்கும் முறை, வரி கணக்கு சமர்ப்பிக்கும் முறை, இவற்றிற்கான தகவல் தொழில்நுட்பம் வளர்க்கப்படுகிறது, இதில் உள்ள சிக்கல்களையும் ஜி.எஸ்.டி குழு களையவேண்டும்.

ஜி.எஸ்.டி குழுவின் வாக்கெடுப்பு முறை

ஜி.எஸ்.டி குழுவில் மொத்தம் 33 உறுப்பினர்கள் உள்ளனர், இதில் இரண்டு மத்திய அமைச்சர்களின் வாக்குகளுக்கு 33% மதிப்பும் 31 மாநில அமைச்சர்களின் வாக்கிற்கு 67% மதிப்பும் உள்ளன. ஒரு முடிவை எடுக்க ஜி.எஸ்.டி குழு 75% மதிப்புள்ள வாக்குகளை பெறவேண்டும். எனவே, 33% மதிப்புள்ள வாக்குகளை வைத்துக்கொண்டு மத்திய அமைச்சர்களோ அல்லது 67% மதிப்புள்ள வாக்குகளை வைத்துக்கொண்டு மாநில அமைச்சர்களோ தன்னிச்சையாக எந்த ஒரு முடிவையும் எட்டமுடியாது. எனவே ஜி.எஸ்.டி குழுவில் மத்திய, மாநில அரசுகள் கூட்டாகவே செயல்படவேண்டிய கட்டாயம் உள்ளது. மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட முடிவுக்கு வாக்களிக்கிறது என்றால் அந்த முடிவுக்கு 33% மதிப்புள்ள வாக்குகள் உள்ளன, கூடுதலாக 42% மதிப்புள்ள வாக்குகளை உடைய 19 மாநிலங்கள் அந்த முடிவுக்கு வாக்களித்தால் போதும். தற்போது மத்தியில் உள்ள NDA ஆட்சி, அதன் தோழமை கட்சிகளுடன் 13 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. எனவே பல அரசியல் விளையாட்டிற்கு பிறகே முக்கியமான முடிவுகளை எடுக்கவேண்டிய சூழலில் ஜி.எஸ்.டி குழு உள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரி நடைமுறைக்கு வரும் மத்திய அரசு கூறிவரும் நிலையில், இந்திய கூட்டாட்சி அரசியல் முன் இருக்கும் மிக பெரிய சவால் இதுவாகத்தான் இருக்கும்.

seenu242@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x