Published : 31 Oct 2016 11:10 AM
Last Updated : 31 Oct 2016 11:10 AM
பணியிடச் சூழல் சிறப்பானதாக இருந்தால் பணியாளர்களின் தொழில்திறன் மேம்படும் என்பது கார்ப்பரேட் உலகம் பின்பற்றிவரும் உத்திகளில் ஒன்று. பணியாளர்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்க அனுமதிக்கும் முறைக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் வந்துவிட்டாலும், அலுவலகச் சூழலை சிறப்பாக அமைத்துக் கொடுக்கவும் முக்கியத்துவம் கொடுக்கின்றன.
ஆனால் அலுவலகச் சூழல் சிறப்பாக அமைந்தாலும் பணியாளர்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்த முடியாத மன அழுத்தங்களுடன் அலுவலகத்துக்கு வருகிறார்கள் என்கிறது ஆய்வுகள். வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு புறப்படும்போது அவர்களிடம் காணப்படும் மனநிலை, அலுவலகம் வந்தடையும்போது இருப்பதில்லை என்கிறது. இதற்கு காரணம் அவர்கள் போக்குவரத்துக்காக செலவிடும் நேரம்.
பொதுவாக அனைத்து துறைகளி லுமே இது நிலவுகிறது. அலுவலகம் ஒரு இடம் என்றால், வீடு இன்னொரு மூலையில் இருக்கிறது. வீட்டுக்கும் வேலையிடத்துக்குமான தூரம் சராசரி யாக 20 கிலோமீட்டர்களாக இருக்கிறது. மாநகரங்களில் 30 கிமீ தூரத்தில் உள்ள அலுவலகம் செல்லவேண்டும் என்றால், காலை, மாலை நேரங்களில் குறைந்தபட்சம் 1 மணி நேரம் ஆகிறது. இதனால் பணியாளர்களின் நேரமும் ஆற்றலும் வீணாகிறது என்கிறது அந்த ஆய்வு.
இதற்கு ஒரு தீர்வைக் கண்டுள்ளது புதுடெல்லியைச் சேர்ந்த ஏடபிள்யூஎப்ஐஎஸ் (Awfis) ஸ்பேஸ் சொல்யூஷன் நிறுவனம். இந்த நிறுவனம் சமீபத்தில் வேலை செய்வதற்கு ஏற்ற அலுவலக சூழல் கொண்ட ஒரு வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனம் அலுவலக அமைப்புடன், இணைய தொடர்பு வசதிகள், காணொளி வசதி, பிரிண்டர் என ஒரு அலுவலகத்தில் உள்ள அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது. இதை அறிமுகப்படுத்தி பேசியுள்ள இந்த நிறுவனத்தின் நிறுவனர் அமித் ரமணி, எதிர்காலத்தில் இந்த நகரும் அலுவலகங்கள்தான் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் ஊழியர்களுக்கான தீர்வாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாகனத்தை தற்போது புதுடெல்லி - குர்காவ்ன் இடையே இயக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏனென்றால் இந்த சாலை மார்க்கம்தான் இந்தியாவிலேயே அதிக போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறுகிறது. 30 கிமீ தூரத்தை சாதாரணமாக கடக்க 3 மணி நேரம் ஆகிறது. இதனால் ஊழியர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வர முடிவதில்லை என்கிற சிக்கல் உருவாகியுள்ளது.
இதனால் இந்த வாகனத்தை வாடகைக்கு அமர்த்திக் கொண்டால், வேலைகளை செய்து கொண்டே அலுவலகம் சென்று விடலாம். இதனால் பயணமும் சிக்கல் இல்லை, வேலையும் தடைபடாது என்பதே இந்த வாகனத்தை உருவாக்குவதற்கு முக்கிய காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலைகளை முடிக்க வேண்டும் என இலக்கு வைத்து செயல்படும் நிறுவனங்கள், பணியாளர்களுக்கு இது சரியான தீர்வாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் டிரைவர் இல்லாத கார்களுக்கான முயற்சிகள் நடந்து வருவதால், அடுத்தடுத்த ஆண்டுகளில் டிரைவர் இல்லாத இது போன்ற வாகனங்களை கொண்டுவரவும் சாத்தியம் உள்ளது என்கிறார் இவர். அலுவலகத்துக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல வேண்டும் என தனித் தனி கார்களில் வருபவர்களுக்கு இந்த வாகனம் பொருத்தமானது என்கிறார். இது போன்ற வாகனங்கள் அதிகரிக்கும்போது போக்குவரத்து நெரிசலும் குறையும். இந்த நிறுவனத்தில் யெஸ் வங்கியின் நிறுவனரான ராணா கபூரின் மகள் ராதா கபூர் முதலீடு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த நிறுவனத்தில் உறுப்பினர்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த வாகனம் அளிக்கப்படுகிறது.
இந்த நிறுவனம் ஏற்கெனவே இது போன்ற வாடகை அலுவலக இடங்களை நடத்தி வருவதில் அனுபவம் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஒரு மணி நேரம் முதல் ஒரு ஆண்டு வரையில் வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் இவர்கள் அமைத்துள்ள அலுவலக இடங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். பெங்களூரு, புணே, மும்பை, புதுடெல்லி, ஹைதராபாத் போன்ற நகரங்களில் 20 இடங்களில் இது போன்று பொது அலுவலகங்களை நடத்தி வருகிறது. இதை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்வதுடன், ஊழியர்களும் வாடகை அடிப்படையில் பயன்படுத்துகிறார்கள். சொந்த அலுவலகம் இல்லாத சிறு நிறுவனங்கள் மட்டுமல்ல, பிஎன்பி பரிபாஸ், ஓஎல்எக்ஸ், ஸ்நாப்டீல் போன்ற பெரிய நிறுவனங்களும் பயன்படுத்தி வருகின்றன.
இட வசதி இல்லாதவர்களுக்கு வாடகை அலுவலகம் தீர்வாக அமைந்ததைப் போல, போக்குவரத்து நெரிசலில் சிக்கும் பணியாளர்களுக்கு இது போன்ற நகரும் அலுவலகங்கள் புதிய தீர்வாக அமையலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT