Published : 31 Oct 2016 10:53 AM
Last Updated : 31 Oct 2016 10:53 AM
ஹாலிவுட் கிளாசிக் கதாநாயகன் மார்லன் பிராண்டோவை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்கமுடியாது. 1972-ம் ஆண்டு வெளியான `தி காட்பாதர்’ படத்தில் விட்டோ கார்லியோன் என்ற கதாபாத்திரத்தில் தனது உச்சபட்ச நடிப்பு திறனை வெளிப்படுத்தியிருப்பார். மரியோ புசோவின் நாவலை திரையில் நேரடியாக பார்த்தது போல் இருக்கும். 1951-ம் ஆண்டு முதல் 1964-ம் ஆண்டு வரை ஹாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்தவர் மார்லன் பிராண்டோ. இந்த கிளாஸிக் நாயகன் கொடிக்கட்டி பறந்த காலக்கட்டத்திலேயே இன்னொரு மோட்டார் சைக்கிள் உலகம் முழுவதும் விற்பனையில் கொடிக்கட்டி பறந்தது. மார்லன் பிரண்டோவுக்கு மிக மிக பிடித்த மோட்டார் சைக்கிள் வரிசைகளில் இந்த மோட்டார் சைக்கிளும் உண்டு.
மார்லன் பிராண்டோ மட்டுமல்ல மிகப் பெரிய திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என அந்த பைக்கிற்கு ரசிகர்கள் ஏராளம். அந்த மோட்டார் சைக்கிள்தான் `போனவில்’.
நூற்றாண்டுகளை கடந்து ஆட்டோமொபைல் துறையில் மிகப் பெரிய நிறுவனமாக வலம்வரும் டிரையம்ப் நிறுவனத்தின் தயாரிப்புதான் போனவில். 1959-ம் ஆண்டு `போனவில் டி120’ என்ற மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியது டிரையம்ப் நிறுவனம். 1954-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட `டைகர் 110’ என்ற மாடலை அடிப்படையாகக் கொண்டு 650 சிசி திறன் 46 குதிரை திறன் ஆகியவற்றுடன் இரண்டு நான்கு ஸ்டிரோக்
இன்ஜினுடன் போனவில் டி120 உருவாக்கப்பட்டது. அன்றைய நாட்களில் இருந்த மோட்டார் சைக்கிள்களில் அதிக வேகத்தில் செல்லக்கூடியதாக டி120 இருந்தது. அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே போனவில் டி120 அனைவரையும் ஈர்த்தது. அதுவரை எந்த நிறுவனம் கண்டிராத அளவுக்கு விற்பனையில் சாதனை படைத்தது. அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதற்காகவே டி120ஆர் என்ற மேம்படுத்தப்பட்ட மாடலை வடிவமைத்தது.
போனவில் டி140
அடுத்தெடுத்து பல்வேறு மாடல்களில் டிரையம்ப் மோட்டார் சைக்கிள்கள் புதிதாக வந்து கொண்டிருந்தாலும் போனேவிலே மாடலுக்கென்று தனி வாடிக்கையாளர்கள் இருந்து வந்தனர். இதை கருத்தில் கொண்ட டிரையம்ப் நிறுவனம் 1970-ம் ஆண்டு போனவில் டி140 என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்தியது. 750சிசி திறனுள்ள இன்ஜின், ஐந்து கியர்பாக்ஸ், டிரம் பிரேக்ஸ் ஆகியவற்றுடன் போன்வில் டி140 வெளிவந்தது. அதன் பிறகு டி140 மாடல்களிலேயே பல்வேறு மாறுதல்களை செய்து தொடர்ந்து புதிய மோட்டார்சைக்கிளை கொண்டுவந்து கொண்டே இருந்தது.
குறிப்பாக 1981-ம் ஆண்டு நடந்த சார்லஸ் - டயானா திருமணத்தையொட்டி போனவில் டி140எல்இ என்ற புதிய மாடலை அறிமுகம் செய்தது. எலெட்ரிக் ஸ்டார்ட் செய்யும் வசதி உட்பட பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன் டி140 எல்இ வெளிவந்தது. வாடிக்கையாளர்கள் மத்தியில் இதற்கு பெரும் வரவேற்பும் இருந்தது.
2000-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெர்மனில் நடந்த முனிச் மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் போனவில் டி790 மாடலை அறிமுகப்படுத்தியது. 790 சிசி திறன் கொண்ட இன்ஜின் இதில் பயன்படுத்தப்பட்டிருந்தது. 2007-ம் ஆண்டு வரை இந்த மாடலிலேயே மேம்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 2007-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டி790 மாடல் 855 சிசி திறன் கொண்டது.
மாறிக்கொண்டு வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப போனவில் தன்னை புதுப்பித்துக் கொண்டே வருகிறது. அதனால்தான் தொடர்ந்து 57 வருடங்களாக சர்வதேச அளவில் மக்கள் மனதிலும் இடம்பிடித்து வருகிறது. போனவில் மாடலில் டி100 என்ற மோட்டார் சைக்கிளை தற்போது டிரையம்ப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற போனவில் டி100 மோட்டார் சைக்கிளை டிரையம்ப் நிறுவனம் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்துள்ளது. அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிளில் 900சிசி திறனுள்ள இரட்டை என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இது 54 குதிரை திறன் கொண்டது. நடுத்தர வகையுடன் ஒப்பிடுகையில் இது 22 சதவீதம் அதிகத் திறனுடையது. 5 கியர்களைக் கொண்ட இந்த பைக்கின் டேங்க் 14.5 லிட்டர் எரிபொருள் நிரப்பும் திறன் கொண்டது. இந்த பைக்கின் எடை 213 கிலோவாகும். இதன் விலை ரூ.7.78 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல சிறபம்சங்கள் கொண்டு வந்திருக்கும் இந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதற்கு முன்பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டனர் மோட்டார் சைக்கிள் பிரியர்கள். கிளாஸிக் நாயகனின் வெற்றி தொடர்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT