Last Updated : 31 Oct, 2016 11:14 AM

 

Published : 31 Oct 2016 11:14 AM
Last Updated : 31 Oct 2016 11:14 AM

மிஸ்திரி-க்கு டாடா!

ஒப்பந்த தொழிலாளர் முறை வந்துவிட்ட பிறகு எந்த தொழிலாளர்களின் பணியும் நிரந்தரமில்லை என்பது தெரிந்ததுதான் என்றாலும் டாடா சன்ஸ் தலைவர் பதவியும் நிரந்தரமல்ல என்பதை ஜீரணிப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அது நடந்துவிட்டது. கடந்த திங்கள்கிழமை பங்குச்சந்தை வர்த்தகம் முடிந்த பிறகு சைரஸ் மிஸ்திரியை நீக்குவதாக டாடா சன்ஸ் இயக்குநர் குழு அறிவித்தது. இடைக்கால தலைவராக ரத்தன் டாடா நான்கு மாதங்களுக்கு நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அதற்குள் புதிய தலைவரை கண்டுபிடிக்க டாடா சன்ஸ் இயக்குநர் குழுவினர் சிலர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சைரஸ் மிஸ்திரி நீக்க விவகாரம் கார்பரேட் உலகில் பெரும் விவாதமாக உருவாகி இருக்கிறது. ஏன் அவரை நீக்க வேண்டும், அவரை நீக்க முடியுமா, அடுத்த தலைவர் யாராக இருக்க முடியும் என பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பல வகையான யூகங்கள் உலவினாலும் உண்மை நிலவரம் ரத்தன் டாடாவுக்கு மட்டுமே வெளிச்சம்.

தலைவரை நீக்க முடியுமா?

சட்ட ரீதியில் பார்த்தால் டாடா சன்ஸ் தலைவரை பதவி நீக்கம் செய்ய முடியும். டாடா குழும நிறுவனங்களின் தாய் நிறுவனம் டாடா சன்ஸ். ஆனால் டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66 சதவீத பங்குகள் ரத்தன் டாடா அறக்கட்டளை மற்றும் சர்.தோராப்ஜி டாடா டிரஸ்ட் (Sir Dorabji Tata Trust) வசம் இருக்கின்றன. இந்த இரு அறக்கட்டளைகளின் தலைவர் ரத்தன் டாடா. இவர் டாடா சன்ஸ் இயக்குநர் குழுவின் ஒப்புதலோடு தலைவரை மாற்ற முடியும். தவிர டாடா சன்ஸ் நிறுவனத்தில் சைரஸ் மிஸ்திரி குடும்பத்துக்கு 18.5 சதவீத பங்குகள் இருந்தாலும் இது பட்டியலிடப்படாத நிறுவனமாக இருப்பதால் இந்த நீக்கம் விரைவாக நடந்துவிட்டது.

எப்படி தேர்வானார் மிஸ்திரி?

1991-ம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவராக ரத்தன் டாடா நியமனம் செய்யப்பட்டார். 2002-ம் ஆண்டு தன்னுடைய 65-வயதிலேயே ஓய்வு பெற திட்டம் தீட்டினார். அப்போதே அடுத்த தலைவரைத் தேடும் பணி தொடங்கியது. ஆனால் சரியான தலைமை கிடைக்காததால் ரத்தன் டாடாவின் பணிக்காலம் நீட்டிக்கப்பட்டு வந்தது. தினசரி அலுவல்கள் அல்லாத இயக்குநர்களின் பதவிக் காலம் 75 ஆக உயர்த்தப்பட்டதை அடுத்து 2012 வரை தலைமைப் பொறுப்பில் இருந்தார். அப்போது புதிய தலைமையை தேடும் குழுவில் சைரஸ் மிஸ்திரியும் இருந்தார்.

அப்போது இந்திரா நூயி, அருண் சரின், நிகேஷ் அரோரா, விக்ரம் பண்டிட் ஆகியோர் பரிசீலனையில் இருந்தனர். ஆனால் தேர்வுக்குழுவால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. இதனை அடுத்து, ரத்தன் டாடா கேட்டுக்கொண்டதன் பேரில் தேர்வுக்குழுவில் இருந்த சைரஸ் மிஸ்திரி டாடா சன்ஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். நவம்பர் 2011-ம் ஆண்டு துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டார். 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரத்தன் டாடா ஓய்வுபெற்ற பிறகு தலைவராக சைரஸ் பொறுப்பேற்றுக்கொண்டார். யாரால் கொண்டுவரப்பட்டாரோ அவராலேயே நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் சைரஸ்.

ரத்தன் டாடா மறுநியமனம் சரியா?

சைரஸ் மிஸ்திரி நீக்கத்துக்கு சமமாக ரத்தன் டாடாவின் மறு நியமனமும் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இன்போசிஸ் நிறுவனத்தின் நாராயணமூர்த்தியும் இதேபோல ஓய்வு பெற்ற பிறகு மீண்டும் தலைமை பொறுப்புக்கு வந்தார். அதேபோல இவரும் தலைமைபொறுப்புக்கு வந்திருக்கிறார். அடுத்த தலைவரை உருவாக்கும் பணியில் நிறுவனங்கள் ஈடுபடுவதில்லையா அல்லது தலைமைக்கு சரியான நபர்கள் இல்லையா என்னும் விவாதத்தை உருவாக்கி இருக்கிறது.

தவிர அவர்கள் (ரத்தன், மூர்த்தி) தலைவராக இருந்த சூழ்நிலை வேறு, இப்போது இருக்கும் சூழ்நிலை வேறு என்பதை இயக்குநர் குழு உணர மறுக்கிறதா என்னும் கேள்வியும் எழுந்திருக்கிறது. டாடா சன்ஸ் போன்ற மதிப்புமிக்க நிறுவனம் இதுபோன்ற முடிவுகளை எடுக்கும் பட்சத்தில் மற்ற நிறுவனங்களும் இதனை பின்பற்றுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என மணிப்பால் குளோபல் எஜூகேஷன் நிறுவனத்தின் தலைவர் மோகன்தாஸ் பாய் தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே பல மாத கால அவகாசம் இருந்த சூழ்நிலையிலேயே சரியான தலைவரை தேர்ந்தெடுக்க முடியாத சூழலில் நான்கு மாத அவகாசத்தில் எப்படி புதிய தலைவரை இயக்குநர் குழு தேர்ந்தெடுக்க போகிறது!

நீக்கத்துக்கு என்ன காரணம்?

டாடா குழுமம் 10,300 கோடி டாலருக்கு மேல் மதிப்பிருந்தாலும் டிசிஎஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் ஆகிய இரு நிறுவனங்களை தவிர மற்ற நிறுவனங்களின் செயல்பாடு சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பது நீண்ட காலமாக இருக்கும் விமர்சனம். அதாவது சைரஸ் மிஸ்திரியின் செயல்பாடுகள் காரணமாகவே அவர் நீக்கப்பட்டிருக்கிறார் என்பது அவர் மீது மறைமுகமாக வைக்கப்படும் குற்றச்சாட்டு. ஆனால் இதெல்லாம் டாடா குழுமத்தில் நீண்ட காலமாக இருக்கும் பிரச்சினைகள் என்று சைரஸ் மிஸ்திரி டாடா சன்ஸ் குழுமத்தின் இயக்குநர் குழுவுக்கு எழுதிய ஐந்து பக்க கடிதத்தில் கூறியிருக் கிறார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருக்கும் பல விஷயங்கள் சந்தையில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. டாடா சன்ஸ் தலைவராக எனக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படவில்லை. இயக்குநர் குழு கூட்டம் நடக்கும் நேரத்தின் இடையிலேயே ரத்தன் டாடாவிடம் பேசுவதற்காக இரண்டு இயக்குநர்கள் வெளியேறி இருக்கின்றனர். தவிர டாடா நானோ காரை லாபம் ஈட்டும் பிராண்டாக கொண்டு வரமுடியவில்லை. அதனை மூடுவதை தவிர வேறு வழி இல்லை. ஆனால் அதன் மீது உணர்வு பூர்வமாக இருக்கும் பந்தம் அதற்கு தடையாக இருக்கிறது என்கிறார். சைரஸ் சொல்வது போல டாடா நானோ மாதத்துக்கு 1000 கார்கள் கூட விற்பதில்லை. தவிர கடந்த 2009முதல் 2014-ம் ஆண்டு வரை டாடா மோட்டார்ஸ் புதிய ரக கார்களை அறிமுகம் செய்யவில்லை.

விமான போக்குவரத்தில் ஈடுபடுவது குறித்து சைரஸ் சிந்திக்கவே இல்லை. ஆனால் ரத்தன் டாடாவுக்கு இருக்கும் தனிப்பட்ட விருப்பம் காரணமாக ஏர் ஏசியா மற்றும் விஸ்தாரா ஆகிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. தவிர ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட முதலீட்டுக்கு அதிகமாகவும் முதலீடு செய்தோம். முடிவு ஏற்கெனவே எடுக்கப்பட்ட நிலையில், செயல்பட முடியாத தலைவராக தான் இருந்ததாக சைரஸ் கூறியிருக்கிறார்.

டாடா சன்ஸில் 66 சதவீத பங்குகள் வைத்திருக்கும் இரு அறக்கட்டளைகளுக்கும் டிவிடெண்ட் மட்டுமே வருமானம். அந்த டிவிடெண்டை தொடர்ந்து சைரஸ் மிஸ்திரி குறைத்ததாகவும், அதனால் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு செலவிட முடியவில்லை என அறக்கட்டளை இயக்குநர் குழு உறுப்பினர் வி.ஆர்.மேத்தா கூறியிருக்கிறார். காரணங்கள் ஆயிரம் இருந்தாலும் 103 கோடி டாலரை நிர்வகிக்கும் தலைவரை தடாலடியாக நீக்குவது தவறான முன் உதாரணமாகும் என்பது குறித்து ரத்தன் டாடா யோசிக்கவில்லையா?

அடுத்து யார்?

சர்வதேச அளவில் செயல்பாடுகளை கொண்டிருக்கும் டாடா குழுமத்துக்கு சர்வதேச அனுபவம் கொண்ட ஒருவரை நியமிக்க வேண்டும் என்பது போன்ற கருத்துகள் உருவானாலும், புதிதாக வருபவர் டாடா குழுமத்தை புரிந்துகொள்ளவே பல மாதங்கள் எடுத்துக்கொள்ளும். டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி என்.

சந்திரசேகரன் (2019 வரை நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்) மற்றும் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ரால்ப் ஸ்பெத் (Ralf Speth) ஆகிய இருவரும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர்களாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் புதிய தலைவர் ஆகக்கூடும். அதே சமயம் குழுமத்துக்கு அதிக வருமானம் கொடுப்பது டிசிஎஸ். அந்த நிறுவனத்தின் தலைவரை குழும தலைவராக மாற்றும் பட்சத்தில் டிசிஎஸ்ஸுக்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்பட வேண்டும்.

எம்பிஏ மாணவர்களுக்கு புதிய கேஸ் ஸ்டெடி எழுதும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. எப்படி முடிக்கப்போகிறார்களோ?

-வாசு கார்த்தி
karthikeyan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x