Published : 03 Oct 2016 12:35 PM
Last Updated : 03 Oct 2016 12:35 PM

முதல் முறையாக...

ரிசர்வ் வங்கி வரலாற்றில் நாளை (அக் 4) ஒரு முக்கியமான நாளாக இருக்கும். இதுவரை ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் துணை கவர்னர்கள் கூடி கடனுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்தனர். ஆனால் நாளை முதல்முறையாக நிதிக்கொள்கை குழு கூடி விவாதித்து அதன் பிறகு வட்டி விகிதத்தை முடிவு செய்யும் புதிய முறை செயல்படுத்தப்படுகிறது.

புதிய முறை எப்படி?

புதிதாக அமைக்கப்பட்ட குழுவில் ரிசர்வ் வங்கியின் சார்பில் மூவரும், மத்திய அரசின் சார்பில் மூவரும் இருப்பார்கள். வட்டி விகிதம் குறித்து விவாதிக்கப்படும். ரிசர்வ் வங்கி சார்பாக கவர்னர் உர்ஜித் படேல், துணை கவர்னர் ஆர்.காந்தி மற்றும் ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநர் மைக்கேல் பாத்ரா ஆகியோர் இருப்பார்கள்.

மத்திய அரசு சார்பில் இந்திய புள்ளியியல் கழகத்தின் பேராசிரியர் சேதன் கதே, டெல்லி பொருளாதார கல்லூரியின் இயக்குநர் பாமி துவா மற்றும் ஐஐஎம் அகமதாபாத் பேராசிரியர் ரவீந்திர தோலகியா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். ஆறுபேர் இருக்கும் குழுவில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஓட்டு. முடிவெடுப்பதில் சமநிலை ஏற்பட்டால் ரிசர்வ் வங்கி கவர்னர் முடிவெடுப்பார்.

தவிர முன்பெல்லாம் ரிசர்வ் வங்கியின் கவர்னர் கூடி விவாதித்து காலை 11 மணிக்கு வட்டி விகிதம் குறித்த முடிவுகளை அறிவிப்பார்கள். ஆனால் இந்த குழு இரண்டு நாள் விவாதிக்கும். அக்டோபர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் விவாதிக்கும். 4-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு தனது முடிவுகளை அறிவிக்கும்.

3.30 மணிக்கு பங்குச்சந்தை முடிவடையும், 5 மணிக்கு கரன்ஸி சந்தை முடிவடையும் என்பதால், ரிசர்வ் வங்கியின் முடிவுகள் சந்தையில் உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தும். மதியம் முடிவுகள் அறிவித்தாலும் காலையில் அறிவித்தாலும் பெரிய மாற்றம் ஏற்படாது. சந்தை முடிந்த பிறகு அறிவிக்கும் பட்சத்தில்தான் அடுத்த நாள் வர்த்தகத்தில் பெரிய ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகம் தொடங்கும். மதியம் அறிவிப்பதால் பெரிய பிரச்சினை இல்லை என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து 2.45 மணிக்கு செய்தியாளர்களின் சந்திப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொது அரங்கில் அதிகம் பேசாத, பேச விரும்பாத உர்ஜித் படேல் முதல் செய்தியாளர்கள் சந்திப்பை எப்படி எதிர்கொள்ள போகிறார் என்ற ஆர்வம் இந்த துறை வல்லுநர்களிடம் உருவாகி இருக்கிறது.

விவாத தகவல்கள் வெளியிடப்படுமா?

இதுவரை ரிசர்வ் வங்கி குழு கூடி முடிவெடுக்கும். ஆனால் பிரத்யேகமாக நிதிக்கொள்கை குழு உருவாக்கப்பட்ட பிறகு முதல் கூட்டம்தான் இனி நடக்க இருக்கும் கூட்டங்களுக்கு முன்மாதிரி. இதன் காரணமாகவும் அக்டோபர் 4-ம் தேதி நடக்க இருக்கும் கூட்டம் முக்கியமானது. இந்த கூட்டத்தில் வல்லுநர்கள் மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் விவாதம் பொது சுற்றுக்கு அனுப்பப்படுமா, எந்தெந்த விஷயங்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன, அதில் குழு உறுப்பினர்களின் கருத்து என்ன என்பது குறித்த தகவல் வெளியிடப்படுமா என்பதும் உறுதியாகவில்லை.

ஒரு வேளை விவாதிக்கப்பட்ட தகவல் கள் வெளியிடப்படும் போது, அவை குறித்து பொருளாதார அறிஞர்கள் விவாதிப்பதற்கும், முடிவெடுப்பதில் வெளிப்படைத்தன்மை இருப்பதால் பங்கு மற்றும் கரன்ஸி சந்தைக்கும் நல்லது என்றும் வல்லுநர்கள் தெரிவிக் கின்றனர். முடிவெடுப்பதில் வெளிப் படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகதான் இந்த குழு உருவாக் கப்பட்டது. ஆனால் விவாதிக்கப்பட்ட தகவல்கள் வெளிப்படையாக அறிவிக் கப்படுமா என்பது இன்னும் வெளியாக வில்லை.

அமெரிக்கா வட்டியை உயர்த்த திட்டமிட்டிருக்கிறது. அதே சமயத்தில் இங்கிலாந்து ஜப்பான் ஆகிய நாடுகள் ஊக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்து இதுவரை 1.50 சதவீதம் வட்டி குறைக்கப்பட்டுவிட்டது. ஆனால் வங்கிகள் சராசரியாக 0.50 சதவீதம் அளவுக்கு மட்டுமே வட்டியை குறைத்திருக்கின்றன. ஏழாவது சம்பள கமிஷன், ஜிஎஸ்டி, பணவீக்கத்துக்கு நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கு, மத்திய அரசுக்கு தேவையான ஜிடிபி வளர்ச்சி என பல முரண்களை கையாள வேண்டிய நிலையில் இருக்கிறார் உர்ஜித் படேல்.

நிச்சயமாக இவருக்கு இது ஒரு சவால்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x