Published : 17 Oct 2016 10:21 AM
Last Updated : 17 Oct 2016 10:21 AM
ரீடெய்ல் துறையின் முகம் தொடர்ந்து மாறிக்கொண்டே வருகிறது. ஆரம்ப காலத்தில் மளிகைக் கடைகள் இருந்தன. அதனைத் தொடர்ந்து சூப்பர் மார்க்கெட், ஹைப்பர் மார்க்கெட்கள் சந்தைக்கு வந்தன. இப்போது ஆன் லைன் மளிகைக் கடைகள் வந்துள்ளன. ரீடெய்ல் துறையில் இருக்கும் பல ஆன்லைன் நிறுவனங்கள் காணாமல் போவது ஒரு புறம் இருக்க, பெரிய பெரிய ஹைப்பர் மார்க்கெட்டுகளும் மூடப்பட்டு வருகின்றன.
சென்னையில் இயங்கி வந்த ஸ்டார் பஜார் இப்போது இல்லை. அதேபோல மும்பை மற்றும் பெங்களூருவில் உள்ள டாடா குழுமத்தின் அங்கமான ஸ்டார் பஜார் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக பணியாளர்களின் எண்ணிக்கை பாதிக்கும் மேல் குறைந்திருக்கிறது. டாடா குழுமத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறும்போது ஹைப்பர் மார்க்கெட் கடைகளால் பெரிய லாபத்தை சம்பாதிக்க முடியவில்லை. அதனால் சிறிய மற்றும் நடுத்தர கடைகளில் கவனம் செலுத்துகிறோம் என்று கூறினார்.
காரணம் என்ன?
இது போன்ற ஹைப்பர்மார்க்கெட் கடைகள் தோல்வியடைய சில காரணங்கள் இருக்கின்றன. முதலாவது ரியல் எஸ்டேட் அதாவது இடத்துக்கான வாடகை. ஹைப்பர் மார்க்கெட் அமைக்க பெரிய இடம் தேவைப்படும், அதுவும் தரைதளத்தில். மால்களில் வாடகை அதிகமாக இருக்கக்கூடிய சூழலில், மற்ற தளங்களைவிட தரைத்தளத்தில் இன்னும் அதிகமான வாடகை இருக்கும். அதிக இடத்தை பராமரிக்க அதிக பணியாளர்கள் தேவைப்படும்.
தவிர வாடிக்கையாளர்களுக்கு இப் போது அதிக வாய்ப்புகள் இருக்கின் றன. ஆன்லைன் வாய்ப்பை விட்டு விடுவோம். இதுபோன்ற ஹைப்பர் மார்க்கெட்களில், ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள், இறைச்சி, பேக்கரி உள்ளிட்ட பல பொருட்களும் இருக்கின்றன. ஆடைகள் வாங்கு வதற்கென பிரத்யேகமான கடைகளுக்கு செல்லவே மக்கள் விரும்புவார்கள், தவிர இறைச்சி, பேக்கரி போன்ற அடிக்கடி வாங்கும் பொருட்களுக்காக மட்டும் வாடிக்கையாளர்கள் ஹைப்பர் மார்க்கெட் செல்ல மாட்டார்கள்.
மேலும் ஒவ்வொரு ஹைப்பர் மார்க் கெட்டுக்கும் குறிப்பிட்ட சுற்றளவில் இருந்துதான் மக்கள் வருவார்கள். சிறு மளிகைக் கடைகள், ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு பிறகு கடைசி தேர்வுதான் இதுபோன்ற ஹைப்பர் மார்க்கெட்டுகள் இவ்வளவு தடைகளுக்கு பிறகே மக்கள் ஹைப்பர் மார்க்கெட்டுகளுக்கு வருகின்றனர்.
இனி ஹைப்பர்மார்க்கெட் எதிர்காலம்?
டாடா குழும நிறுவனங்களே ஹைப்பர் மார்க்கெட்களை மூடிவிட்ட சூழலில் ஹைப்பர் மார்க்கெட்டுகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என இந்திய ரீடெய்ல் சங்கத்தின் தலைவர் குமார் ராஜகோபாலனிடம் கேட்டோம். ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை பற்றிய கருத்தை கூற முடியாது என்றவர் பொதுவான விஷயங்களை பகிர்ந்துகொண்டார். கடைகள் மூடுவதும் இன்னொரு நிறுவனம் தொடங்குவதும் வழக்கமான ஒன்றுதான். கடந்த வாரம் சென்னையில் உள்ள பெரிய ஹைப்பர் மார்க்கெட்டுக்கு சென்றிருந்த போது வியாபாரம் நன்றாகத்தான் இருந்தது.
சில நிறுவனங்கள் தங்கள் விரிவாக்கப்பணிகளை நிறுத்தி இருக்கின்றன. சில நிறுவனங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. தவிர ஒரு கடையை மூடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஹைப்பர் மார்க்கெட் அமைத்திருக்கும் இடத்தில் பல விஷயங்கள் உள்ளன. ஆனால் ஒரு ஹைப்பர் மார்க்கெட்டை மூடிய நிறுவனங்கள் அதற்கு பதிலாக நான்கு கடைகளைத் திறந்த சம்பவங்கள் உள்ளன. தவிர ஒரு குழுமம் ஒரே விதமான யுத்தியை கையாளுவதில்லை. `மல்டி சானல் ரீடெய்ல், இப்போது அதிகரித்து வருகிறது. ஒரு ஹைப்பர் மார்க்கெட், சூப்பர் மார்க்கெட், சிறிய கடைகள் என இடத்துக்கு தகுந்தது போல யுத்திகளை நிறுவனங்கள் மாற்றி வருகின்றன.
ஆன்லைன் வந்ததால் ரீடெய்ல் நிறுவனங்கள் பொலிவிழந்துவிட்டன என்பதும் அதனால்தான் கடைகள் மூடுப்படுகின்றன என்பதும் தவறு. மக்களும் பல வகையில் பொருட் களை வாங்குகின்றனர் ஒரு முறை ஆன்லைனில் வாங்குகின்றனர். சமயங்களில் கடைக்கு செல்கின்றனர். ரீடெய்ல் நிறுவனங்களுக்கு ஆன்லைன் நிறுவனங்கள் அச்சுறுத்தல் இல்லை என்றார்.
வாடிக்கையாளர்களை யார் தக்க வைத்துக்கொள்கிறார்கள் என்பதில் இருக்கிறது வெற்றி. இது ரீடெய்ல் நிறுவனங்களுக்கு மட்டுமல்ல.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT