Published : 24 Oct 2016 11:22 AM
Last Updated : 24 Oct 2016 11:22 AM
மாறிவரும் சூழல், மக்களின் எதிர்பார்ப்பு, சூழல் பாதுகாப்பு, புதிய தொழில்நுட்பம் என பல அம்சங்களைக் கருத்தில் கொண்டு வாகனங்களைத் தயாரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.
பெரிய நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களின் உதவியோடு மட்டும் இதைப் பூர்த்தி செய்ய முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது.
புத்தாக்க சிந்தனைகள், புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்த மாற்று வழிகளைத் தேடும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு இப்போது புகலிடமாக உருவெடுத்து வருகிறது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்.
இளம் தொழில் முனைவோர்கள், புதிய சிந்தனைகளோடு தொடங்கும் ஸ்டார்ட்அப்-களைக் கையகப்படுத்து வது அல்லது அந்நிறுவனங்களில் பகுதியளவு முதலீடு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இறங்கியுள்ளன.
சொகுசு கார்களைத் தயாரிக்கும் ஜெர்மனியின் பிஎம்டபிள்யூ, அமெரிக் காவின் ஃபோர்டு, ஜெனரல் மோட் டார்ஸ் மற்றும் டெய்ம்லர் ஆகிய நிறுவ னங்கள் டெக்னாலஜி ஸ்டார்ட் அப் நிறுவனங்களோடு கை கோர்த்துள்ளன.
இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அனைத்தும் தொழில்நுட்ப ரீதியிலான செயலி உருவாக்கம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றன. இதில் டிரைவர் கண்காணிப்பு அமைப்பு, டிரைவருக்கு உதவுவது, பயணிகள் காரை பகிர்ந்து கொண்டு பயணிப்பது, உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது உள்ளிட்ட நுட்பங்களும் அடங்கும்.
வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டு மின்றி இந்திய ஆட்டோமொபைல் ஜாம் பவான்களும் இத்தகைய கைகோர்ப்பில் பின்தங்கியிருக்கவில்லை. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 20-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனத்தோடு கைகோர்த்துள்ளது. இவற்றில் முக்கிய மானது புணேயைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான மொபிலியா என்ற நிறுவனமாகும். இது இன்ஃபோடெயின் மென்ட் சிஸ்டம் அளிக்கிறது. இது காரினுள் உள்ள வழக்கமான பாடல் களோடு புதிய பாடல்களை கேட்கும் வசதியை அளிக்கிறது. இதேபோல பயண வழிகாட்டிக்கு மேப் மை இந்தியா நிறுவனத்தின் நுட்பத்தை டாடா மோட்டார்ஸ் பயன்படுத்திக் கொண்டுள்ளது.
இதுபோன்ற புதிய முன்னோடித் தொழில்நுட்பங்கள் ஸ்டார்ட் அப் மூலம் கிடைத்தவை என்று டாடா மோட்டார்ஸின் பொருள் வடிவமைப்பு நுட்பப் பிரிவின் தலைவர் டிம் லெவர்டன் குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனத்திற்குள்ளேயே உள்ள தொழில்நுட்ப, புத்தாக்க யோசனை களைக் காட்டிலும் ஸ்டார்ட் அப் நிறுவ னங்களின் கண்டுபிடிப்புகள் மிகவும் உபயோகமானவையாக உள்ளன. மேலும் இவற்றைப் பயன்படுத்திக் கொள்வதில் நிறுவன ரீதியான நடை முறைகள் தேவையில்லாமலிருப்பதும் மிகவும் வசதியாக இருப்பதாக லெவர்டன் குறிப்பிட்டுள்ளார்.
இதைப் போல மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் சான்பிரான்ஸிஸ்கோவில் இயங்கி வரும் ஸ்கூட் நெட்வொர்க்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. நகர்ப்புற வாகன புழக்கத்துக்குத் தீர்வு காண்பதற்காக ஸ்கூட் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. அத்துடன் மட்டுமின்றி வெறுமனே செயலி மூலம் வாடகை டாக்ஸிகளை இயக்கும் ஓலா நிறுவனத்துடன் ரூ. 2,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
சொந்தமாகக் காரை வைத்திருக்கும் முறை இப்போது பரவலாக மாறி வருகிறது. பெரும்பாலும் காரை வைத்து பராமரிப்பதற்குப் பதிலாக சவுகர்யமாக பயணம் செய்யும் போக்கு அதிகரித்து வருவதன் எதிரொலியே ஓலா, உபெர் போன்ற வாடகைக் கார்களின் அதிகரிப்பு. இதை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உணர்ந்து இத்தகைய நிறுவனங்களோடு கைகோர்க்கத் தயாராகிவருகின்றன.
இவை அனைத்துக்கும் மேலாக டிரைவர் இல்லாத வாகனங்களை செயல் படுத்திப் பார்க்கும் முயற்சிகளும் பல நாடுகளில் தீவிரமாகியுள்ளன. கூகுள், டெஸ்லா போன்ற நிறுவனங்கள் மட்டுமின்றி பிற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இதற்கான முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன.
2013-ம் ஆண்டிலேயே ஃபோர்டு நிறுவனம் டெட்ராய்டில் இயங்கி வரும் லிவியோ என்ற சாஃப்ட்வேர் நிறுவனத்தைக் கையகப்படுத்தி கார் ஒருங்கிணைப்பு தீர்வுகளை அளிக்க முயற்சித்தது. கடந்த செப்டம்பரில் ஸ்பாஷியல், ஹெச்ஏஏஎஸ், அலெர்ட் மற்றும் கார்கோ எனும் நான்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்களோடு கை கோர்த்துள்ளது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஐவெஞ் சர்ஸ் நிறுவனம் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஸ்கூப் டெக்னாலஜீஸ் நிறுவனத் தில் முதலீடு செய்துள்ளது. ஸ்மார்ட் போன் மூலம் கார்களை இணைக்கும் சேவையை அளிக்க இந்த ஏற்பாட்டை பிஎம்டபிள்யூ செய்துள்ளது. டெய்ம்லர் ஏஜி நிறுவனம் ரைட்ஸ்கவுட் எனும் செயலி நிறுவனத்தைக் கையகப்படுத்தி யுள்ளது.
மற்றொரு அமெரிக்க நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் லிஃப்ட் எனும் செயலி உருவாக்க நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. இந்நிறுவனம் உபெர் நிறுவனத்துக்குப் போட்டியாகும்.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் பிற ஸ்டார்ட் அப் நிறுவனங்களோடு கைகோர்ப்பது மட்டுமின்றி தனியாக ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனத்தின் வேளாண் கருவிகள் தயாரிப்பு நிறுவனம் வாடகைக்கு கருவிகளை விடுவதற்காக டிரிங்கோ எனும் செயலியை உருவாக்கியுள்ளது.
ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை புதிய நுட்பங்க ளோடு அளிப்பதன் பின்னணியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் பெரும் பங்காற்றுகின்றன.
புதிய யோசனை, புதிய நுட்பத்துக்காக ஸ்டார்ட் அப் நிறுவனங்களோடு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கைகோர்ப்பதன் பலனை வாடிக்கையாளர்கள் அனுபவிப்பது நிச்சயம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT