Last Updated : 11 Jan, 2016 11:05 AM

 

Published : 11 Jan 2016 11:05 AM
Last Updated : 11 Jan 2016 11:05 AM

குறள் இனிது: அங்கே இது வேலைக்கு ஆகாதுங்க..!

கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்

நாவாயும் ஓடா நிலத்து (குறள் 496)



சுமார் 30 வருடங்களுக்கு முந்தைய நிகழ்ச்சி இது. எனது வங்கிக் கிளை யின் மேலாளர் குமாருக்கு (மாற்றிய பெயர்தான்) முதுநிலை மேலாளராகப் பதவி உயர்வுடன் அடிதடிக்குப் பெயர் பெற்ற ஒரு வடமாநிலத்தில் போய்ச் சேருமாறு உத்தரவும் வந்தது.

குமார் மென்மையானவர் எப்பொழுதும் ஸ்டைலாக இன்ஸர்ட் செய்து பெல்ட் போட்டு, ஷுவுடன் டிப் டாப்பாக இருப்பார். அவரை வழியனுப்ப நண்பர்கள், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குச் சென்றிருந்தோம்.

குளிர் சாதன வகுப்பு. அவரது விலையுயர்ந்த விஐபி சூட்கேஸை பெர்த்திற்குக் கீழே வைக்க முயன்றோம். ஆனால், ஏற்கெனவே அங்கே இடம் முழுக்க பல பழைய கனமான பெட்டிகள் இருந்தன. அவற்றை அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதம் செய்து, அகற்றச் சொல்லி குமாரின் சூட்கேஸை வைத்து விட்டோம்.

எதிரில் இருந்தவர்கள் எங்களை ஏளனமாய்ப் பார்த்து, ‘இதெல்லாம் எவ்வளவு தூரம் பார்க்கலாம்’ என்றார்கள். ஒரு வழியாய் ரயில் கிளம்பியது.

6 மாதங்கள் கழித்து குமார் சென்னை வந்தது அறிந்தோம். நடுவில் பார்க்க முடியாததால், மீண்டும் ரயில் ஏற்றிவிடச் சென்றோம். அவசரமாக பிளாட்பாரத்தில் ஓடி அவரை கண்டுபிடித்தால், மனிதனை அடையாளமே தெரியவில்லை! ஆள் ஒன்றும் மெலியவில்லை. இன்னும் குண்டாகியிருந்தார்! முன்பு, ஜெமினி கணேசன் மீசையாக இருந்தது, இப்போது வீரப்பன் மீசையாக மாறியிருந்தது. குரலில் அவ்வளவு கரகரப்பு எப்படித்தான் வந்ததோ தெரியவில்லை. கைகுலுக்கினால் தோள் வரை வலித்தது.

மகானுபாவன தோற்றமளிக்கும் வகையில் பெரிய ஜிப்பாவும், பைஜாமாவும் அணிந்திருந்தார்; அவரே, இரண்டு பெரிய துத்தநாகப் பெட்டிகளை உள்ளே அமுக்கிக் கொண்டிருந்தார்; ‘என்ன ஆளே மாறிவிட்டீர்களே’என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே, ‘நண்பர்களே, நான் போகும் இடத்திற்கு தகுந்தபடி நடந்து கொள்கிறேன். இந்த ஏசி, முன்பதிவு எல்லாம் இன்னும் 10 மணி நேரம் வரைதான். பின்னாடி யார்; வேண்டுமானாலும் ஏறிக் கொள்வார்கள். முன் பதிவு என்று சொல்லிப் பயனில்லை.

அங்கு நமது தோற்றம் கரடு முரடாக இருந்தால்தான் நல்லது. எனவேதான், நடை உடை பாவனைகளையும் மாற்றிக் கொண்டேன். முதலில் நான், அங்கு சென்ற பொழுது பலரும் என்னிடம் உரத்த குரலில் அதட்டும் தோரணையிலேயே பேசினர்.

நான் மெதுவாய்ப் பேசினால் எடுபடாது. ஆனால், இப்போது எனது குரலைக் கேட்டு, மற்றவர்கள்தான் அஞ்சுவார்கள். நான் நல்லவனாகவே இருக்கிறேன். ஆனால், வலிமையானவன் நெஞ்சுறுதி மிக்கவன் என்பதையும் சொல்லாமல் சொல்ல வேண்டியிருக்கிறது’ என்றார்.

போரில் நாம் கையில் எடுக்கும் ஆயுதம் நமது பகைவனால் முடிவு செய்யப்படுகிறது என்று சொல்வார்கள். நமது அன்றாட வாழ்க்கையிலும் சரி, வணிகத்திலும் சரி, நமது அணுகுமுறை இடத்துடன் பொருந்தினால்தான், வெற்றி சாத்தியம்!. வலிமையான தேர், கடலில் ஓடாது, அதுபோலக் கப்பலும் நிலத்தில் செல்லாது என்கிறது குறள்.

சமீபத்திய சென்னை வெள்ளத்தில் மக்கள் சாலையிலேயே படகில் பயணித்தது ஞாபகம் வருகிறதா?

somaiah.veerappan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x