Published : 23 May 2016 11:51 AM
Last Updated : 23 May 2016 11:51 AM
பொதுவாக ஒரு குறிப்பிட்ட பொருளைத் தயாரிக்கும் நிறுவனம் அது சார்ந்த பிற பொருள்களைத் தயாரிக்க ஆர்வம் காட்டும். பன்முக குழுமமாக இருக்கும் நிறுவனங்கள்தான் பல தரப்பட்ட பொருள் தயாரிப்பில் இறங்கும்.
இந்தப் பிரிவில் ஒவ்வொரு நாட்டிலும் விரல் விட்டு எண்ணக் கூடிய நிறுவனங்களே உள்ளன. இந்தியாவில் டாடா குழுமம் போல சீனாவைச் சேர்ந்த லெஷி இன்டர்நெட் இன்பர்மேஷன் அண்ட் டெக்னாலஜி எனும் நிறுவனம் ஸ்மார்ட்போன், டிவி உள்ளிட்டவை தயாரித்து வந்த நிலையில் தற்போது சூப்பர் காரைத் தயாரித்துள்ளது.
லெகோ என சுருக்கமாக அழைக்கப்படும் இந்நிறுவனம் ஜியா ஒயுடிங்என்பவரால் 2004-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இந்நிறுவனம் லீ பிராண்ட் என்ற பெயரில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இந்நிறுவனம் தயாரித்த லெ மாக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனை ஆப்பிள் ஐ போன் விற்பனையை மிஞ்சியது. அடுத்த கட்டமாக டிவி தயாரிப்பில் ஈடுபட்ட இந்நிறுவனம், சுற்றுச்சூழல் காப்பு பொருள்களை தயாரிக்க முற்பட்டது.
டிரைவர் இல்லா கார்
டிரைவர் இல்லாமல் தானியங்கி முறையில் செயல்படும் கார் தயாரிக்கும் பணியில் கடந்த ஆண்டு இறங்கியது. கடந்த ஏப்ரல் மாதம் இந்நிறுவனம் லெசீ (LeSEE) எனும் சூப்பர் காரை பெய்ஜிங்கில் அறிமுகப்படுத்தியுள்ளது.
பேட்டரி கார்
பேட்டரியால் இயங்கும் லெஎகோ என்ற பெயரிலான கார் பெய்ஜிங் ஆட்டோ கண்காட்சியில் இடம்பெற்றது.
இந்த காரின் முன்புறத்தில் மிகப் பெரிய திரை (எல்இடி) உள்ளது. அதில் எந்தப் பாதையில் கார் செல்கிறது என்பதைக் காண்பிக்கும். இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 209 கி.மீ. ஆகும்.
தானியங்கி முறையில் செயல்படும் இந்தக் காரில் ``செல்ப் பார்கிங்’’ எனப்படும் தானாக இடத்தைத் தேர்வு செய்து பார்க் செய்யும் வசதி உள்ளது. குரல் வழி ஆணை மூலம் இது செயல்படும். முகங்களை அடையாளம் காண்பது, வழியை அறிவது, உணர்வுகளை அறிவது உள்ளிட்ட நுட்பமும் இதில் உள்ளன.
அமெரிக்காவின் டெஸ்லா பேட்டரி காருக்கு போட்டியாக இந்த சூப்பர் கார் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் காரில் பயணிக்கும் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப இசையைக் கேட்டு மகிழலாம். இது மற்றவர்களுக்கு எவ்வித தொந்தரவையும் ஏற்படுத்தாது.
பேட்டரியில் இயங்கும் சூப்பர் காரை விரைவில் சந்தைக்குக் கொண்டு வருவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது லெகோ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT