Published : 16 May 2016 01:27 PM
Last Updated : 16 May 2016 01:27 PM
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணமாக அமைவது அந்நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்கள். மின்சாரம், சாலை வசதி, அணைகட்டுகள், நகர்புறங்களை மேம்படுத்துவது, பாலங்கள், விமான நிலையங்கள் போன்றவைதான் உள்கட்டமைப்புத் திட்டங்கள். இவைதான் நாட்டின் வளர்ச்சியை துரிதப்படுத்தக்கூடியது. ஆரம்பத்திலிருந்தே இந்தியா உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
மிகப்பெரிய அணைகளை கட்டியது, தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்தது போன்ற திட்டங்களை செயல்படுத்தி நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் என பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் வந்தாலும் அதை நிறைவேற்றுவதில் ஏற்படும் காலதாமதத்தால் பெரும் பணம் வீணடிக்கப்படுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் உடனடியாக நிறைவேற்றுவதற்குரிய உத்திகளை வகுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தியாவின் உள்கட்டமைப்புத் திட்டங்களை பற்றிய சில தகவல்கள்…
விஜய் ஹேல்கர் கமிட்டி
இந்தியாவின் உள்கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அதிக நிதி தேவைப்படுவதால் மத்திய அரசு தனியாரின் பங்களிப்புடன் திட்டங்களை நிறைவேற்றுகிறது. உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்தவும் பொது தனியார் கூட்டு அமைப்பில் சீர்திருத்தங்கள் கொண்டு வரவும் டாக்டர் விஜய் கேல்கர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. நம் நாட்டில் விமானநிலையம், நெடுஞ்சாலை என உள்கட்டமைப்புத் திட்டங்களை மேம்படுத்துவதற்கு 1.7 டிரில்லியன் டாலர் முதலீடு தேவைப்படுவதாக இந்த கமிட்டி பரிந்துரைத்துள்ளது. இந்தப் பணத்தில் குறைந்த அளவு பணம் முதலீடாக கிடைத்தாலே இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியடையும்.
மெட்ரோ ரயில் திட்டம்
1984-ம் ஆண்டு முதன் முதலில் கொல்கத்தாவில் கொண்டு வரப்பட்டது. தற்போது டெல்லி, மும்பை, சென்னை, ஹைதரபாத என முக்கிய நகரங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்தை மிகப்பெரிய தனியார் அரசு கூட்டு திட்டமாக சர்வதேச உள்கட்டமைப்பு தலைவர்கள் பேரவை அறிவித்துள்ளது.
பனிஹால் காஸிகந்த் சுரங்கப்பாதை
இந்தியாவின் நீண்ட ரயில் சுரங்கப்பாதை திட்டம். ஆசியாவின் இரண்டாவது நீண்ட சுரங்கப்பாதை திட்டம். காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பிச்லெரி பள்ளத்தாக்கையும் காஸிகந்த் பள்ளத்தாக்கையும் இணைக்கிறது. இந்த திட்டத்தை முடிப்பதற்கு 7 வருடங்கள் ஆனது. 1,700 கோடி ரூபாய் மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
சோலார் பூங்கா
இந்தியாவின் முதல் சோலார் பூங்கா. குஜராத் மாநிலம் சரன்கா கிராமத்தில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் மிக முக்கியமான உள்கட்டமைப்பு திட்டமாகும். 5,000 ஏக்கரில் உள்ள இந்த சோலார் பூங்கா ஆசியாவின் மிகப்பெரிய சோலார் பார்க் ஆகும். 500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறனுடையது. சர்வதேசமே வியக்கும் அளவுக்கு இந்தியா உள்கட்டமைப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் சில முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள்
யமுனா அதிவேக சாலை
டெல்லி ஆக்ரா இடையே போடப்பட்டுள்ள இந்த சாலை ஆறு வழிகளை கொண்டது. இதை 8 வழிகளாகவும் விரிவுப்படுத்தி கொள்ள முடியும். இந்த திட்டத்திற்கு உண்டான செலவுத் தொகை ரூ. 8,52,672 கோடி. உலகின் 100 புதுமையான உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றாக இந்த திட்டம் இருக்கிறது.
தேசிய உள்கட்டமைப்பு நிதி (NIIF)
# 2015-ம் ஆண்டு பொது பட்ஜெட்டில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.
# உள்கட்டமைப்புத் திட்டங்கள் மூலம் நாட்டினுடைய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்த திட்டம் நிதி முறை கொண்டு வரப்பட்டது.
# உள்கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக நீண்ட கால நிதியாக மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ.40,000 கோடி .
காலதாமதத்திற்கு காரணங்கள்
# ஒழுங்குமுறை ஒப்புதல்
# நிதி ஆதாரங்கள்
# நிலம் கையகப்படுத்துதல்
# சுற்றுச்சூழல் அனுமதி
# நீதிமன்ற வழக்குகள்
# 2016-17ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒதுக்கியுள்ள தொகை ரூ. 2,21,446 கோடி
# 1,071 திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ. 12,66,248 கோடி. ஆனால் இந்த 1,071 திட்டங்களை செயல்படுத்துவதற்கு தற்போது கூடுதலாக ஆன செலவுத் தொகையின் மதிப்பு ரூ. 5,66,058 கோடி
# அதாவது திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட அதிகமாக 39.67% தொகை செலவிடப் பட்டுள்ளது
# இதில் ஒதுக்கப்பட்ட தொகையை விட அதிகமாக சென்ற திட்டங்களின் எண்னிக்கை 238.
# நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்காமல் கால தாமதம் ஆன திட்டங்களின் எண்ணிக்கை 341.
# 236 திட்டங்களை முடிப்பதற்கு ஏற்பட்ட கால தாமதத்தால் ஒதுக்கிய தொகையை விட அதிகமாக செலவிடப்பட்ட தொகை ரூ. 1.6 லட்சம் கோடி.
# மத்திய அரசின் 10 உள்கட்டமைப்புத் திட்டங்களில் 4 திட்டங்களை நிறைவேற்றுவதற்கு கால தாமதம் ஏற்படுகின்றன.
# நிலுவையில் உள்ள உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைவாக செயல்படுத்தினால் 8% வளர்ச்சியை விரைவாக அடையமுடியும் என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT