Published : 30 May 2016 01:34 PM
Last Updated : 30 May 2016 01:34 PM
இந்திய நிறுவனங்களின் ஆண்டு சம்பள உயர்வு விகிதம் சராசரி யாக 10 சதவீதமாகத்தான் இருக்கிறது என்கிற நிலையில், இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலை மைச் செயல் அதிகாரியான (சிஇஓ) விஷால் சிக்காவின் சம்பளம் கடந்த ஆண்டில் 10 மடங்கு அதிகரித் துள்ளது.
2014 நிதியாண்டில் அவர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சேர்ந்த போது ரூ.4.56 கோடியாக இருந்த சம்பளம் கடந்த நிதியாண்டில் ரூ.48.70 கோடியாக உயர்ந்துள்ளது. பங்கு கள், போனஸ் மற்றும் ஊக்கத்தொகை என்கிற வகைகளில் இந்த ஊதிய உயர்வு இருந்தாலும் தலைமை செயல் அதிகாரிகளுக்கு மட்டும் இவ்வளவு சம்பளம் அளிக்கலாமா என்ற கேள்வி எழுகிறது.
இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர்களின் ஆண்டு சம்பள உயர்வு விகிதம் சராசரியாக 6 முதல் 10 சதவீதம்தான் இருக்கிறது என்கிற நிலையில் சிக்காவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சம்பளம்?
சிஇஓ-களுக்கான ஊதிய விஷயத்தில் இன்ஃபோசிஸ் நிறுவ னம்தான் இந்தியாவுக்கே முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிக்கலை இன்ஃபோசிஸ் நிறுவனத் தின் நிறுவனர் நாராயணமூர்த்தியும் எதிர்கொண்டிருக்கிறார் என்பது முக்கியமானது.
நிறுவனர்களே தலைமைச் செயல் அதிகாரிகளாக பணியாற்றும் போது சம்பளமாக பெரும் தொகை ஒதுக்கப்படுவதை முதலீட்டாளர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்கிற கேள்வி எழுந்தபோது இதற்கு முதன் முதலில் இன்ஃபோசிஸ் நிறுவனம் ஒரு திட்டத்தை முன் வைத்தது.
நிறுவனர்களின் ஊதியம் மூத்த அதிகாரிகளைவிட குறைவாக இருக்க வேண்டும் என வரையறுத் தது. அதுபோல தலைமைச் செயல் அதிகாரிகளுக்கான சம்பள வரை முறையை பொறுத்தவரை நிறுவனத் தின் குறைந்த வருமான பணி யாளரை விட 20 முதல் 22 மடங்கு மட்டுமே அதிகமாக இருக்க வேண்டும் என்று முறைப்படுத்தியது.
இது நிறுவனர்களே தலைமைச் செயல் அதிகாரிகளாக இருந்த வரை யில் நடைமுறையில் இருந்திருக் கலாம். இப்போது விஷால் சிக்கா நிறுவனர் அல்லாத தலைமைச் செயல் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போதும் இவரது அடிப்படை சம்பளம் 5.96 கோடி ரூபாய்தான். 33 லட்ச ரூபாய் ஓய்வுக்கால நிதி ஆகும்.
மீதமுள்ள 42.44 கோடி ரூபாயும் போனஸ் மற்றும் ஊக்க தொகையாக கிடைத்ததாகும். அதுபோல நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி யூபி பிரவீண் ராவின் சம்பளம் 52.6 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் இவரது சம்பளம் ரூ.9.28 கோடியாக இருந்தது.
தலைமைச் செயல் அதிகாரிகள் என்பவர்கள் வெறும் பணியாளர்கள் மட்டுமல்ல, சர்வதேச அளவில் நிறுவனம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்க வேண்டிய இடத்தில் இருப்பவர்கள். இப்போதும் இந்திய அளவில் ஐடி ஏற்றுமதியில் இரண்டாவது பெரிய நிறுவனமாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தை சிக்கா தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட நிறுவனம் வளர்ச்சி அடைந்துள்ளது. 2016 நிதியாண்டில் வருமானம் 9 சதவீதம் அதிகரித்துள்ளது.
தற்போது 950 கோடி டாலர் அளவுக்கு உள்ள நிறுவனத்தின் வருமானத்தை 2020-ம் ஆண்டுக்குள் 2,000 கோடி டாலராக உயர்த்துவதுதான் சிக்காவுக்கு உள்ள இலக்கு அதற்குத்தான் இவ்வளவு சம்பளம் என்கிறார்கள்.
அதுபோல டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சந்திரசேகரின் 2016 நிதியாண்டு சம்பளம் ரூ. 25.60 கோடியாக அதிகரித் துள்ளது. இவரது அடிப்படை சம்பளம் ரூ. 2.28 கோடி. போனஸ், ஊக்கத் தொகைகள், கமிஷன், இதர அலவன்ஸ்கள் என ரூ. 23.32 கோடி அளிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் ஒரு நடுத்தர சம்பளம் வாங்கும் பணியாளரை விட 459 மடங்கு அதிகமாக இவரது சம்பளம் உள்ளது. இதே காலகட்டத்தில் டிசிஎஸ் நிறு வன பணியாளர்களின் சம்பள உயர்வு 9.2 சதவீதம்தான் என்கிறது புள்ளி விவரங்கள்.
தலைமைச் செயல் அதிகாரிகள் என்பவர்கள் வெறும் பணியாளர்கள் மட்டுமல்ல என்பது உண்மைதான். ஆனால் அவர்களுக்கான சம்பள விஷயத்தில் என்ன அளவுகோல் இருக்கிறது என்பதை இந்திய நிறுவனங்கள் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால் உழைப்பின் பலன் அனைத்து பணியாளர்களுக்கும் கிடைப்பது குறையும் அல்லது ஒரே பக்கமாக அதிகரித்தபடியே இருக்கும். இந்த பாரபட்சத்துக்கு ஒரு பார்முலா இல்லாமல் இருப்பது வளர்ச்சிக்கு உகந்ததல்ல.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT