Published : 30 May 2016 01:32 PM
Last Updated : 30 May 2016 01:32 PM

கார் வாங்கினாலும் வரி, விற்றாலும் வரி! - குழப்பத்தில் தவிக்கும் டீலர்கள்

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது புதிதாக எதற்கு வரி விதிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு சாமானிய மக்களைக் காட்டிலும் தொழில்துறையினர் மத்தியில் அதிகம் இருக்கும்.

கடந்த பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஆட்டோமொபைல் துறைக்கு விதித்த வரி விதிப்பு இத்துறையினரை கடுமையான குழப்பத்துக்கு உள்ளாக்கியுள்ளது. ரூ.10 லட்சத்துக்கு மேலான வாகனங்களை வாங்கினாலும், விற்பனை செய்தாலும் ஒரு சதவீத வரி செலுத்த வேண்டும். இத்தகைய பிரீமியம் கார்களை விற்பனை செய்யும் டீலர்கள் இந்த ஒரு சதவீதத் தொகையை வாடிக்கையாளர்களிடமிருந்து பிடித்தம் செய்து (டிடிஎஸ்) ஆக செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக வரி விதிக்கப்படும்போது அந்தப் பொருளின் விலை உயரும். ஆனால் ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள இந்த புதிய வரி விதிப்பு மிகவும் குழப்பமானதாக உள்ளது. அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் விற்பனையக விலை ரூ. 10 லட்சத்துக்கு அதிக மான கார்களுக்கு 1 சதவீத வரி விதிக்கப்படு கிறது. இந்த வரியை டீலர்கள் கார் வாங்குபவரி டமிருந்து வசூலித்து அரசிடம் கட்ட வேண்டும். அவ்விதம் செலுத்தப்பட்ட வரித் தொகை, கார் வாங்கும் நபர் வரி தாக்கல் செய்யும் போது சமன் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது இந்த வரி விதிப்பு ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமான கார்களுக்கு மட்டுமே பொருந்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த வரி விதிப்பு அனைத்து வாகனங்களுக்கும் அதாவது ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் அதாவது லாரி, பஸ் மற்றும் உயர் ரக இரு சக்கர வாகனங்களுக்கும் பொருந்தும் என தெரியவந்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் (சியாம்) துணை இயக்குநர் ஜெனரல் சுகாதோ சென் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி புதிய கார் அல்லது ரூ. 10 லட்சம் மதிப்பிலான எந்த வகையான வாகனமாக இருந்தாலும் அது பழைய வாகனமாக இருந்தாலும் ஒரு சதவீத வரி விதிப்புக்குள்ளாகும் என்று நிதி மசோதா 2016-ல் விதிமுறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதேபோல ரூ. 2 லட்சத்துக்கும் மேலான விலையில் ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை வாங்கினாலும் ஒரு சதவீத வரியை பிடித்தம் செய்து கட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட போது, வாடிக்கையாளரிடமிருந்து இந்த வரி வசூலிக்கப்படும் என நினைத்தது, தற்போது டீலர்களே வசூலித்து கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளது பணியை மேலும் சிக்கலாக்குவதாக அமைந்துள்ளது என டீலர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக வாகனங்கள் மீது உற்பத்தி வரி, மத்திய விற்பனை வரி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வரி, கல்வி வரி, மதிப்பு கூட்டு வரி, மாநில நுழைவு வரி, தேசிய பேரிடர் தடுப்பு வரி, சாலை வரி, ஸ்வாச் பாரத் வரி என பலவிதங்களில் வரி விதிக்கப்படுகிறது. இப்போது ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் வாங்கும்போது விதிக்கப்பட்ட ஒரு சதவீத வரி மேலும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

வரி விதிப்பு என்பது மலரிலிருந்து தேனை வண்டு உறிஞ்சுவதைப் போல மென்மையானதாக இருக்க வேண்டும். அட்டை போல ரத்தத்தை உறிஞ்சினால் எலும்புக்கூடுதான் மிஞ்சும். இதை மத்திய அரசும், நிதி அமைச்சரும் உணர வேண்டும்.

ஆன்லைன் மூலம் வரி செலுத்தும் வசதி வந்துவிட்ட இந்தச் சூழலில் விற்பனையாளர் வரியைப் பிடித்தம் செய்து அதை செலுத்துமாறு நிர்பந்திக்கும் விதிமுறை வரி விதிப்பில் நிலவும் குழப்பமான சூழலையே காட்டுகிறது. குழப்பங்களைத் தவிர்த்து, வரி விதிப்பில் எளிய அணுகுமுறை இருந்தால் மட்டுமே வரி வசூல் அதிகரிக்கும், தொழில்துறையும் தழைக்கும்.

ஆன்லைன் மூலம் வரி செலுத்தும் வசதி வந்துவிட்ட இந்தச் சூழலில் விற்பனையாளர் வரியைப் பிடித்தம் செய்து அதை செலுத்துமாறு நிர்பந்திக்கும் விதிமுறை வரி விதிப்பில் நிலவும் குழப்பமான சூழலையே காட்டுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x