Published : 16 May 2016 01:12 PM
Last Updated : 16 May 2016 01:12 PM
மதுரையைச் சேர்ந்தவர் தனலெட்சுமி, படித்தது எம்எஸ்சி- ஐடி. படித்ததற்கு ஏற்ற வேலையை விட தனக்கு விருப்பமான கைவினை மற்றும் கலைத்துறையில் கவனம் செலுத்தி இன்று வெளிநாடுகளுக்கும் ஓவியங்கள், கைவினை பொருட்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளார். கேவ்மேன் ஆர்ட் அண்ட் கிராப்ட் ஸ்டூடியோ என்கிற பெயரில் நிறுவனத்தை நடத்தி வரும் இவரது அனுபவம் இந்த வாரம் `வணிக வீதி’-யில் இடம் பெறுகிறது.
எனது கணவர் மதுரையில் சொந்தமாக ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார். நானும் அந்த நிறுவன செயல்பாடுகளில்தான் இருந்தேன். ஆனால் எனக்கு சிறு வயதிலிருந்தே கைவினை மற்றும் பெயிண்டிங்குகள் மீது ஆர்வம் என்பதால் வீட்டில் என் ஐடியாவுக்கு ஏற்ப பல பொருட்களை விருப்பமாக செய்து வைப்பேன். எனது கணவரும் சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைதலில் ஆர்வம் கொண்டவர். பல்வேறு பெயிண்டிங் முறைகளையும் கற்றவர். இதனால் இரண்டு பேருக்கும் ஐடி தொழில் தவிர தனிப்பட்ட ஆர்வமாக ஓவியம் குறித்த புரிதல் இருந்தது. இந்த நிலையில் இரண்டு பேருமே ஐடி பணியில் இருப்பதைவிட, கைவினை சார்ந்த தொழிலை தனியாக செய்ய விரும்பி அந்த வேலையிலிருந்து வெளியேறிவிட்டேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனத்தை தொடங்கினேன்
கைவினைப் பொருட்கள் விற்பனையகம் என்றால் நான் தயாரிப்பதை மட்டும் வைத்து விற்பனை செய்ய முடியாது. இதனால் இந்த துறையில் அனுபவம் வாய்ந்த சிலரை வேலைக்கு அமர்த்தினோம். குறிப்பாக மதுரையில் இருக்கும் சில ஓவியர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டோம். அவர்கள் கிரியேட்டிவாக செய்யும் படைப்புகளை எங்களுக்கு கொடுப்பது மற்றும் எங்களது வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப வரைந்து கொடுக்கவும் முறையாக ஒப்பந்தம் செய்து கொண்டோம்.
எனது கணவர் தனது வேலை நேரம் போக எனக்கான மார்க்கெட்டிங் வேலைகளையும் செய்தார். திருமண மண்டபங்களில் ‘வித்தியாசமான அன்பளிப்பு வழங்குங்கள்' என்று பேனர் கட்டுவோம். போன் செய்த அரை மணி நேரத்தில் மண்டபத்திற்கே கொண்டு வந்து பரிசுகளை தருவோம் என்கிற எங்களது விளம்பரங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. கூடவே ரோட்டரி, லயன்ஸ் கிளப் போன்ற பொதுநல அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் அன்பளிப்பு அளிப்பார்கள்.
இதை பொருளாக கொடுப்பதைவிட ஓவியமாக கொடுங்கள் என்று இதற்கான நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், அந்த சங்கங்களின் தலைவர்களை மதுரை தவிர திருச்சி, புதுக்கோட்டை என பல ஊர்களுக்கும் சென்று பார்த்து ஆர்டர் எடுத்தோம். மேலும் இரண்டு பேருக்குமே இணையத்தை சரியாக பயன்படுத்துவது குறித்த புரிதல் இருந்ததால் பல்வேறு சமூக வலைதளங்களிலும் தொடர்ச்சியாக இயங்கினோம். இதனால் உள்ளூர் தவிர இணையம் மூலமாக வெளி நாடுகளிலிருந்தும் ஆர்டர்கள் கிடைத்து வருகிறது.
எங்களிடம் இருக்கும் தயாரிப்புகளைத் தவிர வாடிக்கையாளர்கள் ரசனைக்கு ஏற்பவும் தயாரிக்கிறோம். பெரிய சைஸ் அல்லது விலை அதிகமான பெயிண்டிங்குகள் என்றால் முதலில் பேப்பரில் டிசைன் செய்வது பிறகு அதன் சிறிய வடிவம் தயாரிப்பது என சரிபார்த்துக் கொண்டுதான் இறுதி வேலைகளைத் தொடங்குவோம். இதனால் வாடிக்கையாளர்கள் சொல்லும் திருத்தங்கள் அல்லது நமது தரப்பிலிருந்து தவறுகள் நிகழாதவாறும் இருக்கும்.
இந்த வேலை முழுக்க முழுக்க தனிநபர் கிரியேட்டிவிட்டி சார்ந்தது என்பதால் அவர்களின் யோசனைக்கு ஏற்ப புதிய புதிய டிசைன்களும் உருவாகும். ஆனால் இதை ஒரு குழு வேலையாகவும், புதிய தொழில்நுட்பங்களோடும் இணைப்பதுதான் எனக்கான மிகப் பெரிய பணியாக இருந்தது. இதற்கென்று தனியாக சாப்ட்வேர் உருவாக்கினோம். ஓவிய துறை சார்ந்த புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வது என்பதை குழு வேலையாக உருவாக்கினோம்.
தற்போது முழுநேரமாக 10 ஓவியர்கள் எங்களிடமே மாத ஊதியத்துக்கு பணியாற்றுகின்றனர். மதுரையில் இருக்கும் மேலும் பலரையும் இணைக்க வேண்டும் என்பதுதான் என் இலக்கு.
இந்த தொழில் கிரியேட்டிவிட்டி சம்பந்தபட்டதுதான், ஆனாலும் இதை விற்பனை செய்தால்தான் அடுத்த கட்டத்துக்கு வளர முடியும். இரண்டையும் சமாளிப்பதுடன் குடும்பதையும் கவனித்துக் கொள்வது எனக்கு சவாலானதாகத்தான் உள்ளது. ஆனால் இந்த தொழிலுக்கு அடிப்படை தேவையே மன அமைதிதான். அதே சமயத்தில் அதைத் தரும் தொழிலாகவும் இருக்கிறது என்பதால்தான் இதில் நீடிக்க முடிகிறது என்றார்.
தனித் திறமை கொண்டவர்கள் வெற்றி பெற தொழில்நுட்பமும் அவசியம் என்பதை அழகாக உணர்த்தி வருகிறார் தனலெட்சுமி.
உன்னால் முடியும் திருமண மண்டபங்களில் ‘வித்தியாசமான அன்பளிப்பு வழங்குங்கள்' என்று பேனர் கட்டுவோம். போன் செய்த அரை மணி நேரத்தில் மண்டபத்திற்கே கொண்டு வந்து பரிசுகளை தருவோம் என்கிற எங்களது விளம்பரங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT