Published : 23 May 2016 12:15 PM
Last Updated : 23 May 2016 12:15 PM
ஒரு பக்கம் உணவு சம்பந்தமான இ-காமர்ஸ் நிறுவனங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் இ-காமர்ஸ் சந்தையை கைப்பற்ற போட்டி நடந்து வருகிறது. தற்போது இருக்கும் நிறுவனங்களுக்குள் இருக்கும் சண்டை ஒரு புறம் என்றால், பெரிய நிறுவனங்களும் இந்த கோதாவில் களம் இறங்க தயாராகி வருகிறது.
சீன நிறுவனமான அலிபாபா இந்தியாவில் புதிதாக இ-காமர்ஸ் நிறுவனம் தொடங்க இருப்பதாக தெரிவித்தது. அப்போது அலிபாபா ஏற்கெனவே இந்தியாவில் செய்துள்ள முதலீடுகள் சரியில்லை என்பதால் புதிய நிறுவனத்தைத் தொடங்குகிறது என்று ஸ்நாப்டீல் நிறுவனத்தை வம்புக்கு இழுத்தார் பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர் சச்சின் பன்சால். இத்தனைக்கும் அலிபாபா புதிய நிறு வனத்தைத் தொடங்கவில்லை. 2016-ம் ஆண்டுக்குள் அலிபாபா இந்தியாவில் இ-காமர்ஸ் நிறுவனம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆக்கிரமித்த இ-காமர்ஸ் துறையில் இப்போது இந்தியாவின் பெரிய நிறு வனங்களும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கின்றன. ஆதித்யா பிர்லா குழுமம் www.abof.com என்னும் இ-காமர்ஸ் நிறுவனத்தை கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் தொடங்கியது. இதில் ஆண், பெண்களுக்கான ஆடைகள் உள்ளிட்டவை விற்கப்படுகின்றன.
பிர்லா குழுமம் தொடங்கியவுடன் கடந்த பிப்ரவரி மாதம் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமமும் www.ajio.com என்னும் இ-காமர்ஸ் இணையதளத்தை தொடங்கியது. இந்த இணையதளமும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடைகளை விற்பனை செய்கிறது. தவிர எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மளிகை பொருட்களை விற்பனை செய்வதற்கான திட்டத்தில் ஈடுபட்டிருக்கிறது.
ஆடைகள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் அர்விந்த் நிறுவனமும் கடந்த வாரம் புதிய இ-காமர்ஸ் நிறுவனத்தை தொடங்கியது. www.nnnow.com என்னும் பெயரில் ஆடைகள், காலணிகளை இந்த நிறுவனம் விற்கிறது.
ரிலையன்ஸ் மற்றும் பிர்லா குழுமங்கள் இ-காமர்ஸ் துறையில் களம் இறங்கி இருப்பதை தொடர்ந்து டாடா குழுமமும் ஈடுபட திட்டமிட்டுள்ளது. வரும் 27-ம் தேதி புதிய இ-காமர்ஸ் நிறுவனத்தை தொடங்குகிறது டாடா குழுமம். Tata CLiQ என்னும் பெயரில் இணையதளம் தொடங்கப்படுகிறது. ஆடைகள், காலணிகள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஆகியவற்றை இந்த இணையதளம் மூலம் விற்க டாடா குழுமம் திட்டமிட்டிருக்கிறது.
பிளிப்கார்ட் மற்றும் ஸ்நாப்டீல் நிறுவனங்கள் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் அதற்கு தேவையான உதிரி பாகங்களை ஆன்லைனில் விற்று வந்தன. இப்போது அந்த சந்தையை கைப்பற்ற மஹிந்திரா நிறுவனம் www.m2all.com என்னும் இணையதளத்தை தொடங்கி இருக்கிறது.
இ-காமர்ஸ் துறை வளர்ந்து வருகிறது. இப்போது 2,000 கோடி டாலராக இருக்கும், இ-காமர்ஸ் சந்தை 2030-ம் ஆண்டில் 15 மடங்கு உயர்ந்து 30,000 கோடி டாலராக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தவிர ஒட்டுமொத்த ரீடெய்ல் விற்பனையில் 2 சதவீதம் மட்டுமே ஆன்லைனில் நடப்பதால் அந்த சந்தையை கைப்பற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் பெரிய நிறுவனங்களும் போட்டி போடுகின்றன. போட்டியின் உக்கிரம் இன்னும் சில வருடங்களில் மேலும் அதிகரிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT