Published : 23 May 2016 12:05 PM
Last Updated : 23 May 2016 12:05 PM
தவறான காரணத்துக்காக அடிக்கடி சிலர் செய்திகளில் வருவது வழக்கம். அந்த செயலை தெரிந்தேதான் செய்கிறார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம். அப்படிப்பட்ட நபர்தான் ராகுல் யாதவ். இந்திய தொழில்முனைவு உலகினை கவனித்து வருபவர்களுக்கு இந்த பெயர் மிகவும் பரிச்சயம். ஹவுசிங் டாட் காம் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர்.
அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு இப்போது இண் டெலிஜன்ஸ் இண்டர்பேசஸ் என்னும் (Intelligent Interfaces) நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனம் என்ன செய்கிறது, அந்த தொழில் வெற்றியா என்பதை பார்க்கும் முன் இவரைப்பற்றி பார்த்துவிடலாம்.
இன்ஜினீயரிங் (ஐஐடி மும்பை) படிப்பை பாதியில் விட்டவர். அதன் பிறகு தனது நண்பர்களுடன் இணைந்து ஹவுசிங் டாட் காம் நிறுவனத்தை தொடங்கினார். சில வருடங்கள் நிறுவனம் நன்றாக செயல்பட்டது.
வென்ச்சர் கேபிடல் முதலீடும் கிடைத்தது. அதனால் நிறுவனம் நன்றாக வளர்ந்தது. அதன் பிறகு வென்ச்சர் கேபிடல் முதலீட்டாளர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
கருத்து வேறுபாடு யதார்த்தம் என்றாலும் அதனை ராகுல் யாதவ் கையாண்ட விதம்தான் பிரச்சினைக்கு ஆரம்பம். நிறுவனத்தில் முதலீட்டாளர்களுக்கு முடிவெடுக்கும் அளவுக்கு அறிவு இல்லை என்று கூறியவர், நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கு தரக்குறைவான கடிதம் எழுதியது மட்டுமல்லாமல், அதனை பொது அரங்கில் வெளியிட்டார்.
மிக சமீபத்தில் அதற்கு நியாயமும் கற்பித்திருக்கிறார். நான் ஹவுசிங் டாட் காமில் வேலை பார்த்த சமயத்தில் விடுமுறை எடுக்காமல் வேலை செய்தேன்.
தவிர சாப்ட் பேங்க் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யும் போது லாபத்தை பற்றி கவலைப்படாமல் 10 வருடம் வரை நிறுவனத்தை வளர்க்கலாம் என்று கூறினார்கள், ஆனால் முதலீட்டு நிறுவனத்தின் தலைமை மாறியவுடன் வருமானம் மற்றும் லாபத்தின் மீது கவனம் செலுத்த சொன்னால் எப்படி செலுத்துவது என்று சமீபத்தில் கூறியிருக்கிறார்.
நியாயமான கேள்விதான். ஆனால் தரக்குறைவான வார்த்தையை பயன்படுத்தியும் அதை பொது அரங்கில் வெளியிட்டதையும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
ஹவுசிங் டாட் காமில் இருக்கும் போது அந்த நிறுவனத்தில் அவர் வசம் உள்ள 200 கோடி ரூபாய் பங்குகளை பணியாளர்களுக்கு மாற்றிக்கொடுத்தார். 26 வயதில் பணம் மீது ஆர்வம் வேண்டாம் என்று கூறினார்.
அதுமட்டுமல்லாமல் ஓலா நிறுவனத்தின் பவிஷ் அகர்வால், மற்றும் ஜொமோடோ நிறுவனத்தின் தீபேந்தர் கோயல் ஆகியோரையும் பங்குகளை ஊழியர்களுக்கு கொடுக்க முடியுமா என்று சவால் விட்டு ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டார்.
அதன் பிறகு ஹவுசிங் டாட் காம் நிறுவனத்தை குயிக்கர் நிறுவனம் வாங்குவதாக ஒரு தகவல் பரவியது. இதனை அடுத்து செய்தியாளர்கள் அவரை மெயில் மூலம் தொடர்புகொள்ளும் போது சில செய்தியாளர்களுக்கு ஆம் என்றும் சிலருக்கு இல்லை என்றும் பதில் அளித்திருக்கிறார். அடுத்த நாள் இது ஒரு சந்தோஷத்துக்கானது என்று பதில் கூறினார்.
இதுபோல இப்படி அவரது செயல்கள் அத்துமீறவே, ராகுல் யாதவ் மூலமாக நிறுவனத்துக்கு ஒரு பயனும் இல்லை, தலைமைப் பொறுப்புக்கு இவர் ஏற்றவர் அல்ல என்று இயக்குநர் குழு அவரை நிறுவனத்தில் இருந்து வெளியேற்றியது.
சில மாதங்களுக்கு பிறகு Intelligent Interfaces என்னும் நிறுவனத்தை தொடங்கினார். இதற்காக கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், பிளிப்கார்ட் நிறுவனர்களிடம் நிதி திரட்டினார். ஆனாலும் இந்த நிறுவனம் பெரிய வெற்றி அடையவில்லை. அரசு அதிகாரிகள் முடிவெடுக்க தயங்குகிறார்கள்.
இது போன்ற நபர்களை எப்படிக் கையாளுவது என்றே தெரியவில்லை. இவர்கள் மட்டுமல்லாமல் பத்திரிகையாளர்கள், ஹவுசிங் டாட் காம் இயக்குநர் குழு உள்ளிட்டவர்களை எப்படி கையாளுவது என்றே தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.
மேலும் தொழில்முனைவை விட்டு விட்டு எளிமையான ஒரு வேலைக்கு செல்லலாமா என்றும் கூடயோசிக் கிறேன், உங்களது ஆலோசனை என்ன என்று ஸ்டேடஸ் போட்டிருக்கிறார்.
இவருக்கு ஆங்கில மீடியா வைத்திருக்கும் பெயர் The bad boy of Indian startups. கோபப்படுவது, சமநிலை தவறுவது, கருத்து வேறுபாடு என அனைத்துமே இயல்புதான். ஆனால் அத்தனையும் பொதுவெளியில் அம்பலப்படுத்தும்போது எப்படி மற்றவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும்?
தொழில் தொடங்குவதற்கு முரட்டு தைரியம் தேவை. ஆனால் அந்த முரட்டு தைரியம் மட்டுமே போதாது என்பதற்கு சரியான உதாரணம் ராகுல் யாதவ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT