Published : 02 May 2016 12:58 PM
Last Updated : 02 May 2016 12:58 PM
ஆடை இல்லா மனிதன் அரை மனிதன் என்னும் நிலை மாறி, ஸ்மார்ட்போன் இல்லா மனிதன் அரை மனிதன் என்னும் அளவுக்கு சந்தையில் ஸ்மார்ட்போன்கள் பெருகி விட்டன. ஐந்து வருடங்களுக்கு முன்பு சில நிறுவனங்கள் மட்டுமே இருந்த ஸ்மார் ட்போன் சந்தையில், இப்போது இந்திய நிறுவனங்கள், சீன நிறுவனங்கள் என பல நிறுவனங்கள் இருப்பதால் ஸ்மார்ட்போன் சந்தை முதிர்வடைந்து விட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும் போட்டி காரணமாக நிறுவனங்களின் லாப வரம்பு குறைந்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் மொபைலில் இனி பெரிய மாற்றங்கள் கொண்டு வர முடியாது. ஆப்பரேட்டிங் சிஸ்டம், மெமரி, கேமரா என அனைத்து விதங்களிலும் புதுமைகள் வந்துவிட்டன. இது புதுசு என்று சொல்லி மொபைலை விற்கமுடியாது, அதனால் மொபைலில் மட்டுமே கவனம் செலுத்தி வாடிக்கையாளர்களை கவர முடியாது என்பதால் பல வகைகளில் இந்த நிறுவனங்கள் யோசிக்கின்றன.
சேவை மற்றும் செயலி உருவாக்குவதில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன. ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்து அதில் லாபம் சம்பாதித்த காலம் முடிந்துவிட்டது. சேவைகளில் மூலமே இனி லாபம் ஈட்ட முடியும் என்று லீஇகோ இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி அதுல் ஜெயின் கூறியிருக்கிறார்.
இதற்காக இந்த நிறுவனம் செயலி மற்றும் இதர சேவைகளுக்காக பெங்களூ ரூவில் 1000 பணியாளர்களை பணிய மர்த்தி உள்ளது. தவிர யப் டிவியுடன் (yupp tv) இணைந்து 200-க்கும் மேற் பட்ட சேனல்களை மொபைலில் நேரடி யாக பார்க்கும் வசதியை வழங்குகிறது. அதேபோல ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் படங்களையும் மொபை லில் பார்க்க முடிகிற வசதியையும் இந்த நிறுவனம் வழங்குகிறது. இதை தாண்டியும் இந்தியாவுக்கென பிரத்யேக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழு பணியாற்றி வருகிறது. இதற்காக ஒரு கோடி டாலர் முதலீட்டையும் இந்த நிறுவனம் செய்திருக்கிறது.
அதேபோல ஜியோமி நிறுவனமும் மொபைலில் கன்டென்ட் வழங்கும் நடவடிக்கையில் இருக்கிறது. புதிய செயலி உருவாக்கம் மற்றும் வீடியோக்களை உருவாக்கும் நிறுவனங்களுடன் இந்த நிறுவனம் பேசி வருவதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
தற்போது இந்தியாவில் 4ஜி சேவை அதிகரித்து வருவதும் இந்த நிறுவனங்கள் வீடியோவில் கவனம் செலுத்துவதற்கு இன்னொரு காரணமாகும்.
மேலும் உள்நாட்டு மொபைல் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸும், இசை தொடர்பான செயலியான கானா, விலை ஒப்பீட்டு செயலி, சுற்றுலா சம்பந்தமான செயலி உள்ளிட்ட சில செயலிகளில் முதலீடு செய்துள்ளது. தவிர மேலும் சில ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் இந்த நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தை மிகப்பெரிய சேவை நிறுவனமாக உயர்த்த வேண்டும் என்றும் அதற்காக புதிய மைக்ரோமேக்ஸ் 3.0 உத்தியை வகுத்துள்ளோம் என்று அதன் நிறுவனர் ராகுல் சர்மா தெரிவித்திருக்கிறார்.
தொழிலில் வாடிக்கையாளர்கள் தான் ராஜா. அவர்களை கவர்வதற்காக ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களால் முடிந்த நடவடிக்கையை எடுத்து வருகின்றன. இன்னும் சில வருடங்கள் அந்த நிறுவனங்களில் பின்னால் வாடிக்கையாளர்கள் இருக்கலாம் அல்லது வாடிக்கையாளர்களை நிறுவனங்கள் தேடலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT