Published : 04 Apr 2016 11:34 AM
Last Updated : 04 Apr 2016 11:34 AM

மாருதி சுஸுகியின் பாலைவனப் புயல்!

வெறுமனே கார் தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத் தாமல், கார் பிரியர்களின் சாகச பயணங்களுக்குத் தீனி போடும் விதமாக போட்டிகளை நடத்துவதிலும் மாருதி சுஸுகி முன்னோடியாகத் திகழ்கிறது. காடு, மலை என பல்வேறு சாகசப் பயணங்களுக்கான போட்டிகளை நடத்தும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் 14-வது பாலைவன சாகசப் போட்டி ஏப்ரல் 4-ம் தேதி தொடங்குகிறது.

பாலைவனப் புயல் (Desert Storm) என்ற பெயரில் கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து கார் சாகசப் பிரியர்களுக்கு மட்டுமின்றி இருசக்கர வாகனப் பிரியர்களுக்கான போட்டிகளையும் நடத்தி வருகிறது. சாலைகளில் வழக்கமான சிக்னல், போக்குவரத்து நெரிசல் என வாகனம் ஓட்டி அலுத்துப் போனவர்கள் பெரிதும் விரும்புவது சாலை அல்லாத (Off Road) பயணங்களைத்தான்.

இத்தகைய சாலை அல்லாத சாகசப் பயணங்களை விரும்புவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு 130 பேர் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் இந்த ஆண்டு பங்கேற்போரின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளதிலிருந்தே இதுபோன்ற சாகசப் பயணங்களைத் தேடுவோரின் வேட்கை புரியும். 2003-ம் ஆண்டு இந்தப் போட்டியை முதல் முறையாக மாருதி சுஸுகி தொடங்கியது. அப்போது இப்போட்டி தார் பாலைவனத்தில் நடத்தப்பட்டது. பொதுவாக வட மாநிலங்களில் நடத்தப்படும் போட்டிகள் மிகவும் கடுமையான போட்டிகளாக இருக்கும். அதை நிரூபிக்கும் வகையில் பாலைவனப் புயல் போட்டியும் அமைந்துள்ளது.

பாலைவனம் மற்றும் மலைப்பகுதிகளில் பயணம் இருக்கும் வகையில் இந்த போட்டிக்கான பாதை அமைந்துள்ளது. மொத்தம் நான்கு பிரிவுகளில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. எக்ஸ்டிரீம், என்டியூர், எக்ஸ்புளோர் மற்றும் மோட்டோ என நடத்தப்படும் இப்போட்டியில் மனிதனின் கட்டுப்பாட்டில் சீறிப்பாயும் கார் மற்றும் மோட்டார் பைக்குகளின் செயல்பாடுகள் வெளிப்படும்

6 நாள் நடைபெறும் இந்தப் போட்டிக்கான மொத்த தூரம் 2 ஆயிரம் கிலோமீட்டராகும். புதுடெல்லியில் புறப்பட்டு ஹனுமன்கர், பிகானீர், ஜெய்சால் வழியாக ஜோத்பூரில் ஏப்ரல் 10-ம் தேதி முடிவடையும். போட்டிகளில் பங்கேற்போர் 6 நாள் போட்டி அல்லது பாதியில் அதாவது 3 நாள் போட்டியில் பங்கேற்கலாம். தொழில்முறை பந்தய வீரர்கள்தான் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பதில்லை. சாகசப் பயணங்களை விரும்புவோருக்கென இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

பயணங்கள் முடிவதில்லை. இது சாகசப் பயணங்களுக்கும் பொருந்தும். பங்கேற்றவர்களே தொடர்ந்து இப்போட்டியில் கலந்து கொள்வதும், புதியவர்கள் வருவதும் இதைத்தான் உணர்த்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x