Published : 25 Apr 2016 11:42 AM
Last Updated : 25 Apr 2016 11:42 AM
பயணம் எல்லைகளை கடந்தது. ஒருவனுக்கு மிகப் பெரிய அனுபவம் கிடைப்பது அவன் மேற்கொள்ளும் பயணத்தின் மூலமாகத்தான் என்று கூறுவார்கள். கொலம்பஸ் முதல் காந்தி வரை பயணத்தின் மூலமே மேன்மை அடைந்துள்ளார்கள். முன்பெல்லாம் கோடை விடுமுறை என்றால் உறவினர்கள் வீட்டுக்கு செல்வது வழக்கம். தற்போது உறவினர்களையும் அழைத்துக் கொண்டு சுற்றுலாவுக்கு புறப்பட்டு விடுகிறார்கள். பல்வேறு பகுதிகள் அதன் தட்பவெப்ப நிலை, கலாச்சாரம், அப்பகுதியில் வாழும் மக்களின் பழக்க வழக்கங்கள் என சுற்றுலாவில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். இன்று இருக்கக்கூடிய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையில் இதுபோன்ற சுற்றுலா மட்டுமே நம்மை மனிதத்தோடும் உயிர்ப்போடும் வைத்திருக்கிறது. சுற்றுலா நமக்கு புதிய அனுபவத்தை தருவதோடு நாட்டின் பொருளாதார உயர்வுக்கும் காரணமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் மிக அதிகம் செலவாகக்கூடிய சுற்றுலா பகுதி நார்வே நாட்டில் உள்ள ஆஸ்லோ. இங்கு ஒரு இரவு தங்குவதற்கு மட்டும் 169 அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது. சர்வதேச அளவில் சுற்றுலாவுக்கு அதிகம் செலவாகக்கூடிய நாடு சுவிட்ஸர்லாந்து. இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து உள்ளது. மூன்றாவது இடத்தில் பிரான்ஸ் உள்ளது. உலகிலேயே அதிக மக்கள் சுற்றுலா செல்லும் நாடாகவும் பிரான்ஸ் விளங்குகிறது.
அமெரிக்கச் சுற்றுலா பயணிகளே இந்தியாவுக்கு அதிகம் சுற்றுலா வருகின்றனர். 2014-ம் ஆண்டு 11 லட்சம் பேர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
தி அல்கெமிஸ்ட், டர்கெஸ்தான் சோலோ, சேகுவேராவின் தி மோட்டார் சைக்கிள் டைரிஸ் போன்ற நூல்கள் மிக பிரபலமானவை.
வெளிநாட்டு சுற்றுலா செல்ல ஆசைப்படுபவர்கள் பூட்டான், மாலத்தீவுகள், இலங்கை, துபாய், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு குறைந்த செலவில் செல்லமுடியும். சரியான திட்டமிடல் இருந்தால் இரண்டு நபர்கள் குறைந்தது 1 லட்ச ரூபாயில் இந்த நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டிற்கு சுற்றுலா செல்ல முடியும்.
பயணம் செய்வதையே வாழ்க்கையாக்கி உலகையே சுற்றி வந்தவர்கள் ஏராளம். ’பயண விரும்பி’ (Traveller) என்று சொல்லக்கூடியவர்கள் மலைகள், காடுகள், கடல் பயணம் என பல வழிகளில் உலகை சுற்றி வந்து கொண்டிருக்கின்றனர். பயணத்தின் போதே ஆன்லைன் பிஸினஸ், பத்திரிகைகளுக்கு எழுதுவது போன்ற வேலைகளை செய்து தங்களது பொருளாதார தேவையையும் பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.
சர்வதேச அளவில் பயண நூல்கள் அதிக அளவு விற்பனையை கண்டு வருகின்றன. ஒரு மனிதன் இறப்பதற்குள் பார்க்க வேண்டிய ஆயிரம் இடங்கள் பற்றிய ஒரு புத்தகம் எழுத்தப்பட்டுள்ளது. இந்த புத்தகம் சுற்றுலா பயணத்தை விரும்புகிற ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
மொத்தம் 284 மில்லியன் வேலை வாய்ப்புகள் சுற்றுலாத் துறையில் உள்ளன.
பொருட்கள் வாங்குவதை விட சுற்றுலாவிற்கு பணத்தை செலவழிக்கும் போது அதிக மன நிம்மதி அடைவதாக ஆய்வு கூறுகிறது.
ஆசியா கண்டத்திலேயே சுற்றுலாத் துறையில் முன்னணியில் உள்ள நாடு சீனா. இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.
2013-ம் ஆண்டு தகவலின் படி அதிக பயணிகள் பார்வையிடும் நகரம் தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக்.
உலகின் மொத்த ஜிடிபியில் சுற்றுலாத்துறையின் பங்கு 9.8%
2015-ம் ஆண்டு மொத்த ஜிடிபியில் சுற்றுலாத் துறையின் பங்கு 6.3 சதவீதம்
இது 2014-ம் ஆண்டு 7.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா சுற்றுலாத் துறை 36.7 லட்சம் வேலை வாய்ப்ப்புகளை வழங்குகிறது.
2014-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மட்டும் 2.25 கோடி பேர்
அதிக வெளிநாட்டு பயணிகள் சுற்றுலாவுக்கு வருவதில் இந்தியா சர்வதேச பட்டியலில் 36-வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் மிகப் பிரபலமான சுற்றுலா மாநிலங்கள் தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா. சென்னை, டெல்லி, மும்பை, ஆக்ரா ஆகிய நான்கு நகரங்கள் அதிக வெளிநாட்டு பயணிகள் பார்வையிடும் நகரமாகும்.
இந்தியாவின் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கு முக்கியமான காரணமாக இருந்தவர் ஐஏஎஸ் அதிகாரி அமிதாப் காந்த். இது கடவுள்களின் நாடு (Gods Own Country) என்ற வாசகத்தை கொண்டு வந்து கேரளா சுற்றுலாத் துறையை மேம்படுத்தியவர். இந்தியாவின் சுற்றுலாத் துறைக்கு இன்கிரிடிபிள் இந்தியா என்ற வாசகத்தை உருவாக்கினார். இதன் மூலம் இந்தியாவின் கலை, கலாச்சாரம், கிராமப்புற இந்தியா என பல்வேறு கோணங்களில் இந்தியாவின் அழகை உலக மக்களுக்கு காண்பித்தவர். இந்த வாசகத்துக்கு பிறகுதான் இந்தியாவின் சுற்றுலாத் துறை மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT