Published : 11 Apr 2016 12:46 PM
Last Updated : 11 Apr 2016 12:46 PM
இந்தியாவின் முக்கியமான ஸ்டீல் ஆலையான டாடா ஸ்டீலுக்கு இது போதாத காலம்தான். கடந்த சில தினங்களுக்கு முன்பு டாடா ஸ்டீல் தனது ஐரோப்பா ஆலையை மூடப் போவதாக அறிவித்தது. உடனடியாக டாடா ஸ்டீல் ஐரோப்பா நிறுவனத்தை விற்பதற்கான செயல்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்திருந்தது. சர்வதேச அளவில் மிகப் பெரிய ஸ்டீல் ஆலையான டாடா ஸ்டீலின் இந்த முடிவு ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தற்போது இங்கிலாந்து அரசு டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு உள்தணிக்கை விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
டாடா ஸ்டீல் செயல்பாடுகளில் ஊழல் நடந்திருப்பதாக இங்கிலாந்து அரசு சந்தேகப்பட்டதை அடுத்து இந்த விசாரணைக்கு உத்தரவிட்டதாக தெரிகிறது. இது டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு மேலும் நெருக்கடியை கொடுத்திருக்கிறது.
இந்த நெருக்கடிகளுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. 2006-ம் ஆண்டுதான் டாடா ஸ்டீல் நிறுவனம் ஐரோப்பாவின் மிகப்பெரிய ஸ்டீல் நிறுவனமான கோரஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. கோரஸ் நிறுவனத்தை வாங்குவதற்கு டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கும் பிரேசில் நிறுவனமான சிஎஸ்என் நிறுவனத்திற்கு இடையே கடும் போட்டி நிலவியது. 1,300 கோடி ரூபாய் மதிப்பில் கோரஸ் நிறுவனத்தை டாடா ஸ்டீல் கையகப்படுத்தியது. கடன் தொகைதான் பெரும்பாலும் கையகப்படுத்துதலுக்கு பயன்படுத்தப்பட்டது. இது டாடா ஸ்டீல் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. 2008 மற்றும் 2009ம் ஆண்டு ஓரளவு சிறப்பாக செயல்பட்டு வந்த டாடா ஸ்டீல் ஐரோப்பா நிறுவனம் 2010-ம் ஆண்டு மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்தது. சில முக்கிய நீண்ட கால ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதே இந்த சரிவிற்கு காரணம் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது.
2008-ம் ஆண்டு 12,350 கோடி ரூபாயாக இருந்த நிகர லாபம் 2010-ம் ஆண்டு அதல பாதாளத்திற்கு சென்றது. பின்பு ஓரளவிற்கு சரிவிலிருந்து மீண்டாலும் நிறுவனத்தின் கடன் அதிகரித்துக் கொண்டே இருந்தது. 2008-ம் ஆண்டு 53,625 கோடி ரூபாயாக இருந்த கடன் தொகை 2016 ம் ஆண்டில் 75,118 கோடி ரூபாயாக இருக்கிறது. அதாவது கடன் தொகை டாடா ஸ்டீல் கையகப்படுத்தியதிலிருந்து 40 சதவீதம் அதிகரித்துள்ளது மிக முக்கிய காரணம். மேலும் 2008-ம் ஆண்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு ஸ்டீல் தேவை குறைவும், உற்பத்தி செலவு அதிகரித்திருப்பதும், ஐரோப்பா நாடுகளும் இறக்குமதியை அதிகரித்திருப்பதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. சீனா பொருளாதார சரிவும் ஸ்டீல் உற்பத்தியை கடுமையாக பாதித்துள்ளது. இப்படி கடன், உற்பத்தி குறைவு ஆகிய பல காரணங்கள்தான் ஆலையை மூடும் முடிவுக்கு தள்ளியுள்ளது.
இந்த ஆலையில் கிட்டத்தட்ட 15,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அனைவரும் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து அரசிடம் டாடா ஸ்டீலை காப்பாற்றுங்கள் என்று தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இனி என்னென்ன நிகழப்போகிறது என்று அடுத்தடுத்த நாட்களில்தான் தெரியவரும்.
கோரஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியதை போலவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தை பொருளாதார சரிவு காலக்கட்டமான 2008-ம் ஆண்டு 23 கோடி டாலருக்கு கையகப்படுத்தியது. 2008-ம் ஆண்டு 1,964 கோடி ரூபாயாக இருந்த மொத்த வர்த்தகம் 2015-ம் ஆண்டு 9,874 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
கோரஸ் நிறுவன கையகப்படுத்துதல் மூலம் நஷ்டத்தை சந்தித்த டாடா குழுமம் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவன கையகப்படுத்துதல் மூலம் லாபத்தை ஈட்டியுள்ளது. ஒரு நிறுவனத்தை கையகப்படுத்துதல் இரண்டு எல்லைகளுக்கும் அழைத்துச் செல்லும் என்பதற்கு டாடா குழுமமே உதாரணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT