Published : 14 Mar 2022 10:11 AM
Last Updated : 14 Mar 2022 10:11 AM

சொத்துப் பெருக்கமும் ஏற்றத்தாழ்வும்...

சுப மீனாட்சி சுந்தரம்

கரோனா தொற்றினால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புகளிலிருந்து உலகம்இன்னும் முழுமையாக மீண்டுவிடவில்லை. ஆனால், இந்தத் பெருந்தொற்றுக் காலகட்டத்தில் தனிநபர் சொத்துகள் பிரமிப்பூட்டும் அளவில் பெருக்கமடைந்துள்ளன. உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை, ஆக்ஸ்ஃபாம் அறிக்கை என சர்வதேச அளவில் முக்கியமான ஆய்வுகள் தனிநபர் சொத்து பெருக்கம் பற்றி கவலை தெரிவித்துள்ளன. சமீபத்தில் வெளியாகியுள்ள நைட் பிராங்க் நிறுவனத்தின் அறிக்கையும் தனிநபர் சொத்து பெருக்கத்தைக் கவனப்படுத்துகிறது.

நைட் பிராங்க் லண்டனை தலைமையிடமாகக் கொண்ட சொத்து ஆலோசனை நிறுவனம். சொத்து தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையானது உலகின் சொத்துப் போக்கு எப்படி இருக்கிறது, சொத்து எங்கு குவிகிறது, எதன் மூலம் சொத்து பெருகுகிறது என்பதைப் பற்றிய விரிவான பார்வையை முன்வைக்கிறது.
30 மில்லியன் டாலருக்கு மேல் சொத்து மதிப்பு உடையவர்களின் எண்ணிக்கை 2020-ம் ஆண்டில் 2.4 சதவீதமாக இருந்தது. அது 2021-ல் 9.3 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 28 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்த சொத்து பெருக்கம் சமமாக நிகழவில்லை. பொருளாதார ரீதியாக மேல் நிலையில் உள்ள 10 சதவீதத்தினரிடம் உலகின் மொத்த சொத்தின் 76 சதவீதம் உள்ளது. பொருளாதார ரீதியாக கீழ் நிலையில் உள்ள 50 சதவீத மக்களிடம் 2 சதவீத அளவிலே சொத்துகள் இருக்கிறது. அதேபோல் உலகின் மொத்த வருவாயில் 52 சதவீதம் பொருளாதார ரீதியாக மேல்நிலையில் உள்ள 10 சதவீதத்தினரின் கரங்களுக்குச் செல்கிறது. கீழ்நிலையில் உள்ள 50 சதவீத மக்களுக்கு உலகின் மொத்த வருவாயில் 8.5 சதவீதம் மட்டுமே செல்கிறது என்று `உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை 2022’-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பெருந் தொற்றுக் காலத்தில் 26 மணி நேரத்துக்கு ஒரு பில்லினியர் உருவாகிக் கொண்டிருக்கிறார். அதேசமயம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 99சதவீத மக்கள்கடும் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளனர். 16 கோடி மக்கள் அதீத வறுமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று ‘கொல்லும் ஏற்றத்தாழ்வு’ என்ற தலைப்பிலான ஆக்ஸ்ஃபாம் அறிக்கையும் குறிப்பிடுகிறது.

இதன் அடிப்படையில் பொருளாதார ரீதியாக கரோனா காலகட்டத்தை ஏற்றத்தாழ்வுக்கான காலகட்டம் என்று குறிப்பிடலாம். வருவாய், சொத்து,பாலினம், சூழலியல் என பல தளங்களிலும் ஏற்றத்தாழ்வு கரோனாவுக்குப் பிறகான காலகட்டத்தில் மிக மோசமான அளவில் அதிகரித்து இருக்கிறது.

கரோனா பெருந்தொற்று பெரும் செல்வந்தர்கள் தங்கள் சொத்துகளைப் பெருக்கிக் கொள்வதற்கு சாதகமாக அமைந்துள்ளது என்றும் சொத்து உருவாக்கத்தில் பங்குச் சந்தை முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்றும் நைட் பிராங்க் அறிக்கை கூறுகிறது.

2020-21-ம் ஆண்டில் 30 மில்லியன் டாலருக்கு மேல் சொத்துமதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை வட அமெரிக்காவில் 12.2%, லத்தீன் அமெரிக்காவில் 7.6%, ஐரோப்பாவில் 7.54%, ஆசியாவில் 7.2%, மத்திய கிழக்கு நாடுகளில் 8.8%,என்ற அளவில் அதிகரித்துள்ளது. நாடுகளின் பட்டியலை எடுத்துக்கொண்டால், அமெரிக்கா 13%, இங்கிலாந்து 11%, பிரான்ஸ் 10%, ஜப்பான் 8%,சீனா 6% அளவில் அதிகரித்துள்ளது. ஆப்பிரிக்காவில் மட்டும் பெரும் பெரும் செல்வந்தர்களின் எண்ணிக்கை சற்று சரிவு கண்டிருக்கிறது என்று இவ்வறிக்கைக் குறிப்பிடுகிறது.

2026 ஆம் ஆண்டில் ஐரோப்பாவைவிட ஆசியா செல்வமிக்கதாக மாறும் என்றும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இந்த பெரும் செல்வந்தர்களின் சொத்து கள்மூன்று மடங்காக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.

வரும் காலங்களில் உலகின் சொத்து உருவாக்கமும், பொருளாதாரம் எவற்றை மையப்படுத்தி நிகழும் என்பது தொடர்பாக நைட் பிராங்கின் அறிக்கை மட்டுமல்லாது, உலகளாவிய அளவில் வெவ்வேறு ஆய்வுகள் சில பார்வைகளை முன்வைக்கின்றன.

மெட்டாவர்ஸ்

வரும் ஆண்டுகளில் சொத்து உருவாக்கத்தில் மெட்டாவர்ஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு நாளும் சொத்து என்பது நிலமாகவும், கட்டிடங்களாகவும், தங்கமாகவும், பங்குகளாகவும் இருந்தன. மெட்டாவர்ஸ் வழியாக புதிய வகை சொத்துகள் உருவாகிவருகின்றன. தற்போது மெட்டாவர்ஸை உருவாக்குவதற்கான செயல்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. அதுதொடர்பாக மிகப் பெரும் அளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது கிரிப்டோகரன்சி, என்எஃப்டி முதலீடு அதிகரித்து வருகிறது. மெட்டாவர்ஸ் பரவலான பயன்பாட்டுக்கு வந்த பிறகு இவை இன்னும் மிகப் பெரியதாக வளரும்.

தொழில்நுட்பம்

கரோனாவுக்குப் பிறகு உலகம் மிக வேகமாக டிஜிட்டல் மயமாகியுள்ளது. கல்வி, மருத்துவம் முதல் அன்றாட மளிகைச் சமான்கள் வரையில் ஆன்லைன் நோக்கி நகர்ந்துள்ளன. இந்த மாற்றம் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி இருக்கின்றன. மிக அதிக எண்ணிக்கையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. செயற்கை தொழில்நுட்பங்கள் சார்ந்து பெரிய அளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொழில்நுட்ப கட்டமைப்புகளின் வழியே மிகப் பெரிய அளவில் சொத்து உருவாக்கமும், பொருளாதார வாய்ப்புகளும் உருவாகும் என்று கூறப்படுகிறது.

சுப மீனாட்சி சுந்தரம்

மின்வாகனம்

பருவநிலை மாற்றம் மிக பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள நிலையில் பெட்ரோல்,டீசல் போன்ற எரி பொருள்களுக்குப் மாற்றாக மின் வாகனங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் உலகம் மின் வாகனத்தை நோக்கி தீவிரமாக மாறிவருகிறது. இதனால் மின் வாகனம் தயாரிப்பு சார்ந்து மிகப் பெரிய அளவில் பொருளாதார வாய்ப்பு உருவாகி வருகிறது. மின்வாகனத்துக்குத் தேவையான பேட்டரி தயாரிப்பில் சீனா முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில் இனி சீனா பொருளாதார ரீதியாக அசைக்க முடியாத சக்தியாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வளர்ச்சி பகிரப்பட வேண்டும்

எந்தெந்த துறைகளில் முதலீடுகள் அதிகரிக்கும் பொருளாதார வாய்ப்புகள் உருவாகும் என்பது முக்கியமல்ல. அதன் பலன் அனைத்து மக்களுக்கும் சமத்துவமாக சென்று சேர்கிறதா என்பதுதான் முக்கியம். நவதாராள பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைக்கு வந்த கடந்த நாற்பது ஆண்டுகளில் சொத்துகளும் வருவாயும்பெருகின. ஆனால், அந்த வளர்ச்சி சமவிகிதத்தில் நிகழவில்லை. ஒரு சாராரிடமே சொத்துகள் குவிந்தன. தற்போது உலகம் ஒரு மாற்றத் தருணத்தில் உள்ளது. இனியேனும், ஏற்றத்தாழ்வை கட்டுப்படுத்தும் வகையில் பொருளாதாரக் கொள்கைகளை அரசுகள் உருவாக்க வேண்டும். வளர்ச்சி பரவலாக்கத்துக்கான கட்டமைப்பை அவை உருவாக்க வேண்டும். இல்லையெனில், அதீத ஏற்றத்தாழ்வு சமுகத்தில் மிகப் பெரும் பிளவை கொண்டுவரும்.

தொடர்புக்கு: somasmen@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x