Last Updated : 04 Apr, 2016 12:51 PM

 

Published : 04 Apr 2016 12:51 PM
Last Updated : 04 Apr 2016 12:51 PM

6,800 ஏக்கர் அதிசயம்: கிருஷ்ணபட்டினம் துறைமுகம்

ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில், மொத்தம் 6,800 ஏக்கரில் விரிந்து பரந்து கிடக்கிறது கிருஷ்ணபட்டினம் துறைமுகம். கடலில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சரக்குக் கப்பல்கள் அணி வகுத்து நிற்கின்றன. துறைமுகத்துக்கு சரக்கு கொண்டு வரும் லாரிகள், சரக்கு ரயில்கள், 8,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது துறைமுகம். இதுபோக, துறைமுகத்தை ஒட்டியே 12 ஆயிரம் ஏக்கர் நிலமும் கைவசம் இருக்கிறது. ஏற்றுமதி, இறக்குமதியை நோக்கமாகக் கொண்ட நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்கலாம். சுற்றிப்பார்க்க ஒரு நாள் போதாது. அந்த அளவுக்கு பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது இந்தத் துறைமுகம்.

ஆந்திராவின் மிகப் பெரிய சிவிஆர் தொழில் குழுமத்தின் ஒரு அங்கம்தான் கிருஷ்ணபட்டினம் துறைமுகம். நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய தனியார் துறைமுகம். லோடு லாரிகள், கன்டெய்னர் லாரிகள் ஆகியவை உள்ளே வந்துபோக மட்டும், துறைமுகம் உள்ளேயே 10 கி.மீ.க்கு மேல் நான்கு வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி ஒருபுறம் மலைபோல் குவிந்து கிடக்கிறது.

மறுபுறம் யூரியா, ஜிப்சம் போன்றவை குவிக்கப்பட்டு கிடக்கின்றன. இன்னொரு பகுதியில் 7 கி.மீ. நீளம் அமைக்கப்பட்டுள்ள கன்வேயர் பெல்ட் மூலம் நிலக்கரி, அருகில் உள்ள அனல் மின் நிலையங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறது. இதுபோக, சரக்கு ரயில்கள் வந்துசெல்ல, பல கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதைகளில் ரயில்கள் வந்தவண்ணம் உள்ளன. இப்படி 24 மணி நேரமும் பரபரப்பாக இருக்கும் இந்தத் துறைமுகத்தின் நிர்வாக இயக்குநர் சிந்தா சசிதர். தலைமைச் செயல் அதிகாரி அனில் என்ட்லூரி.

முதன்முறையாக கிருஷ்ணபட்டினம் துறைமுகத்தில் இருந்து வங்கதேசத்துக்கு பருத்தி, பருத்தி நூலிழைகளை ஏற்றிக்கொண்டு எம்.பி. ஹார்பர் -1 என்ற முதல் கன்டெய்னர் கப்பல் கடந்த வாரம் வங்கதேசம் நோக்கி கிளம்பியது. இந்த கப்பல் போக்குவரத்து ஒரு வரலாற்று சாதனையாகவே கருதப்படுகிறது.

ஆயத்த ஆடை உற்பத்தியில் வங்கதேசம் முன்னணியில் இருக்கிறது. அதற்குத் தேவையான பருத்தி, நூலிழைகள் போன்றவற்றை இந்தியாவில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. பருத்தியை பொருத்தவரை, ஆந்திரா முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் பருத்தியில் ஏறக்குறைய 14 சதவீதம் ஆந்திராவில் விளைகிறது.

இதுவரை கிருஷ்ணபட்டினம் துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் பருத்தி, கொழும்பு, சிங்கப்பூர் துறைமுகங்கள் வழியாக கடைசியாக வங்கதேசத்தின் சிட்டகாங், பங்காவோன் துறைமுகங்களுக்குச் சென்றது. இதற்கு 15 நாள் வரை ஆனது. தற்போது இங்கிருந்து சிட்டகாங், பங்காவோன் துறைமுகங்களுக்கு நேரடியாக கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 5 நாட்களில் பருத்தி வங்கதேசம் சென்றடையும். செலவும் குறைகிறது. இதனால் பருத்தி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் உடனடியாக பணம் கிடைத்து விடுகிறது.

இந்திய-வங்கதேசம் இடையிலான கடல் வழி சரக்குப் போக்குவரத்து ஒப்பந்தம் மூலம், கன்டெய்னர் கப்பல் போக்குவரத்து விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. இரு நாட்டு கப்பல்களும் உள்நாட்டு கப்பலாகவே கருதப்படும். இதனால் சுங்கப் பரிசோதனை மையங்களில் தேவையில்லாமல் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இரு நாடுகளிலும் உள்நாட்டு கப்பலுக்கு வசூலிக்கப்படும் கட்டணம்தான் மற்ற நாட்டுக் கப்பலுக்கும் வசூலிக்கப்படும். இதனால் கட்டணமும் குறைகிறது.

ஆடைகள் உற்பத்தி செய்யும் வங்கதேசத்தின் முக்கிய நிறுவனங்கள் அனைத்தும் தலைநகர் டாக்காவி லேயே அமைந்துள்ளன. சிட்டகாங், பங்காவோன் துறைமுகங்கள் இங்கு தான் உள்ளன. ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள இவற்றின் மூலம் நிறுவனங்களுக்கு தாமதமில்லாமல் பருத்தி சென்றடைகிறது.

`இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி கப்பல் போக்குவரத்து இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும். வட கிழக்கு மாநிலங்கள் வழியாக சாலைப் போக்குவரத்து மூலம் பொருட்களை கொண்டு செல்வதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கலாம்.

கிருஷ்ணபட்டினம் துறைமுகம் ஆந்திரா, தெலங்கானாவுக்கு மட்டுமல்லாமல் மற்ற மாநில ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்' என துறைமுகத்தின் நிர்வாக இயக்குநர் சிந்தா சசிதர் தெரிவித்தார்.

`ஆந்திராவில் பருத்தி உற்பத்தி அதிகம். ஆனால் அதற்கான தேவை வங்கதேசத்தில் அதிகம். அங்கு சணல் உற்பத்தி அதிகம். அதற்கான தேவை நெல், மிளகாய் உற்பத்தியில் முன்னணி யில் இருக்கும் ஆந்திராவில் அதிகம். இதனால் பருத்தி ஏற்றுமதிக்கும் சணல் பை இறக்குமதிக்கும் நல்ல வாய்ப்புகள் உள்ளன. கடல் உணவு ஏற்றுமதியில் ஆந்திரா முதல் மாநிலமாக உள்ளது. இங்கிருந்து தாய்லாந்துக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு கடலுண வுப் பொருட்கள் ஏற்றுமதி ஆகின்றன. இதனால் எதிர்காலத்தில் கிருஷ்ண பட்டினத்தின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்' என்கிறார் துறைமுகத்தின் சிஇஓ அனில் என்ட்லூரி.

`துறைமுகத்தை ஒட்டி 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஏற்றுமதி பகிர்வு மண்டலம் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். ஏற்றுமதியை சார்ந்துள்ள நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க சலுகைகள் அளிக்கப்படும். கேரளாவுக்கு முன்பெல்லாம் குஜராத்தில் இருந்து, சாலை மூலமும் ரயில் மூலமும்தான் சிமென்ட் வந்து கொண்டிருந்தது. இப்போது கப்பல் மூலம் கொச்சி துறைமுகம் கொண்டு வரப்பட்டு கேரளா முழுதும் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் போக்குவரத்து செலவு பெரிதும் குறைந்து விட்டது. இதே வழியில் பென்னா சிமென்ட் நிறுவனம் சிமென்ட் ஆலையை ஏற்றுமதி பகிர்வு மண்டலத்தில் அமைத்து எங்கள் துறைமுகம் மூலம் நாடு முழுவதும் விநியோகம் செய்யத் திட்டமிட்டுள்ளது' என்றும் என்ட்லூரி தெரிவித்தார்.

42 ஆண்டு கனவு

1974-ம் ஆண்டு இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தியும் வங்கதேச பிரதமராக இருந்த முஜுபுர் ரஹ்மானும் இருநாட்டு உறவை மேம்படுத்தும் வகையில் எல்லைப் பிரச்சினையில் தொடங்கி, இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவது வரை பல்வேறு ஒப்பந்தங்களை செய்து கொண்டனர். அதில் ஒன்றுதான் இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் நேரடி கப்பல் போக்குவரத்து. ஆனால் அது நிறைவேறவில்லை.

கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி வங்கதேசம் சென்றார். இரு நாட்டு தொழில், வர்த்தக உறவை வளர்க்கும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்களில் பிரதமர் மோடியும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் கையெழுத்திட்டனர். நேரடி கப்பல் போக்குவரத்து திட்டம் மீண்டும் விவாதிக்கப்பட்டு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது. அதன்பின் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு, 42 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

7 கி.மீ. நீளத்துக்கு கன்வேயர் பெல்ட்

கிருஷ்ணபட்டினம் துறைமுகத்தின் அருகிலேயே 3 அனல் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றுக்குத் தேவையான நிலக்கரி இந்த துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படுகிறது. அவற்றை லாரிகளில் எடுத்துச் சென்றால் அதிகம் செலவாவதோடு, கரித்தூள் பறந்து சுற்றுச் சூழல் மாசுபடுகிறது. இதைத் தடுக்க மின் உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து தனித்தனியாக 7 கி.மீ. தூரத்துக்கு கன்வேயர் பெல்ட் அமைக்கப்பட்டுள்ளது. கப்பலில் இருந்து இறக்குமதியாகும் நிலக்கரி, அங்கிருந்தே கன்வேயர் பெல்ட் மூலம் சம்பந்தப்பட்ட மின் உற்பத்தி நிறுவனத்துக்கு சென்று விடும். இதனால் நிலக்கரி போக்குவரத்துக்கு செலவாகும் பல கோடியை இந்நிறுவனங்கள் மிச்சப்படுத்துகிறது.

- ravindran.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x