Published : 18 Apr 2016 11:34 AM
Last Updated : 18 Apr 2016 11:34 AM
அதி நுட்பமான தொழில்நுட்ப பணி களை அனுபவம் கொண்டவர் கள்தான் மேற்கொள்ள முடியும் என்பதை உடைத்திருக்கிறார்கள் இரண்டு இளைஞர்கள். வீடுகளின் உள் அலங் காரம் மற்றும் வெளிப்புற டிசைன்களை உருவாக்கும் அதி நுட்பம் வாய்ந்த வாட்டர் ஜெட் கட்டிங் தொழிலில் ஈடுபட்டுள்ள உள்ள இந்த இரண்டு இளைஞர்களுக்கும் வயது 25தான் ஆகிறது. இவர்களது தொழில் அனுபவம் இந்த வாரம் `வணிக வீதி’யில் இடம் பெறுகிறது.
இருவரில் தயாரிப்பு சார்ந்த பணிகளை ராம் பிரபுவும், மார்க்கெட்டிங் சார்ந்த பணிகளை மனோஜ் குமாரும் கவனித்துக் கொள்கின்றனர். முதலில் ராம் பிரபு பேசத் தொடங்கினார்.
திருத்தணிதான் சொந்த ஊர், விவசாயக் குடும்ப பின்னணி, அப்பா கூலி வேலைப் பார்த்துதான் படிக்க வைத்தார். மெக்கானிக்கல் டிப்ளமோ படித்து விட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன். இப்போது நாங்கள் மேற்கொண்டிருக்கும் ஜெட் இயந்திரங்களை உற்பத்தி செய்யும் ஜெர்மனி நிறுவனம் அது. அந்த நிறுவனத்திடமிருந்து இயந்திரங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதை அசெம்பிள் செய்வது மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சர்வீஸ் வேலைகளை செய்து கொடுக்க வேண்டும்.
இதனால் இயல்பாகவே ஒரு இயந்திரத்தின் முழுமையான செயல்பாடுகளை எல்லாம் கற்றுக் கொள்ள முடிந்தது. நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிறுவனத்துக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து வாடிக்கையாளர்கள் வருவார்கள். இதனால் பல மாநிலங்களுக்கும் தொழில் நிமித்தமாக செல்வது அவர்களுடன் பழகுவது போன்ற தொடர்புகளும் கிடைத்தது. டிப்ளமோ முடித்த போதே தனியாக தொழில் செய்ய வேண்டும் என்றுதான் எண்ணமிருந்தது, இப்போது கூடுதல் தகுதியாக ஒரு இயந்திரத்தை உருவாக்கும் அளவுக்கான அனுபவமும், பல மாநில வாடிக்கையாளர் தொடர்புகளும் இருப்பதால் தனியாக இறங்கலாம் என துணிவு வந்தது. அப்போது என்னுடன் அதே நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நண்பர் மனோஜ் குமாரும் நானும் சேர்ந்து தொழிலில் இறங்கலாம் என முடிவு செய்தோம். அவரும் அதே அனுபவம் தகுதிகளோடு இருந்ததால் ஒன்றாக தொழில் செய்வது பலமாக இருக்கும் என இறங்கினோம்.
இந்த தொழிலுக்கு இடமும் முதலீடும் தேவை. பூந்தமல்லி அருகில் வாடகைக்கு இடம் கிடைத்தது. ஆனால் முதலீட்டுக்கு முயற்சி செய்தால் எங்கள் இருவரது வயதை நம்பியும் வங்கிகள் கடன் கொடுக்க தயாராக இல்லை. கடும் போராட்டங்களுக்கு இடையில் பஞ்சாப் நேஷனல் வங்கி கடனுதவி செய்தது.
இந்த தொழில்நுட்பம் அதிக நுட்பமானது. லேசர் கட்டிங் செய்வதற்கு ஆகும் நேரத்தை விட 10 மடங்கு நேரத்தை இதன் மூலம் சேமிக்கலாம். மேலும் மிகவும் துல்லியமாகவும் இருக்கும். லேசர் கட்டிங் தொழில் நுட்பத்தில் அதிகபட்சமாக 20மிமீ வரையில் கட்டிங் செய்யலாம். ஆனால் நாங்கள் மேற்கொண்டிருக்கும் முறையில் 300 மிமீ தடிமன்கள் வரை கட்டிங் செய்ய முடியும். சின்ன டிரேஷ் ஷீட்டுகள் முதல் உலோகங்கள் வரை விரும்பிய வடிவங்களை இதில் கொண்டு வந்துவிட முடியும். முக்கியமாக நாங்கள் எங்களுக்கு என்றே தனியாக இயந்திரத்தை உருவாக்கிக் கொண்டோம். இதனால் இயந்திர உற்பத்தி நிறுவனங்களை சார்ந்திருக்க வேண்டியதில்லை என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய மனோஜ்குமார், வேலைகளைப் பிரித்துக் கொண்டதால் எங்களது வேலைகளில் சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்கிறோம். மேலும் எனக்கும் தயாரிப்பு வேலைகள் தெரியும் என்பதால் முக்கியமாக நான் தேவைப்படும் நேரங்களை ராம் பிரபு கூறிவிடுவார்.
பிற தொழில் சார்ந்த வாடிக்கையாளர்கள் தவிர, தனி வாடிக்கையாளர்களுக்கும் இந்த வேலைகளைச் செய்து கொடுக்கிறோம். பள்ளி புராஜெக்டுகளுக்கான ஷீட்டுகளை கட் செய்வது, கலைப் பொருட்கள் செய்பவர்கள் என பலரும் தேவைகேற்ப கட்டிங் செய்து கொள்கின்றனர்.
இப்போது எங்கள் இருவர் தவிர 6 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கியுள்ளோம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் இந்த நிறுவனத்தைத் தொடங்கினோம். இந்த ஆறு மாதங்களில் நாங்கள் எதிர்பார்த்த அளவைக் காட்டிலும் அதிக வளர்ச்சியை எட்டியுள்ளோம். எங்கள் திட்டமிட்ட இலக்கில் முழுமையாக வெற்றி பெற்றதாகவே நம்புகிறோம். வங்கிக் கடனையும் திருப்பிச் செலுத்த தொடங்கிவிட்டோம். வாட்டர் ஜெட் கட்டிங் தொழிலுடன், இயந்திரங்களை உருவாக்கி விற்பனை செய்வதற்கும் அடுத்த ஆண்டு இலக்கு வைத்துள்ளோம் என்றார். துணிச்சலான முடிவுகளை எடுக்க இவர்களது அனுபவம் பாடமாகட்டும்.
maheswaran.p@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT