Published : 21 Mar 2016 10:00 AM
Last Updated : 21 Mar 2016 10:00 AM

வேட்பாளருக்கு உதவும் `வோட்பேங்க்’

பங்குனி மாத வெயில் மண்டையை பிளக்கத் தொடங்கிவிட்டது. வெயிலின் தாக்கத்தை அதிகரிக்க வந்துவிட்டது தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தேர்தல் அறிவிப்பு. தேர்தல், அரசியல் இவற் றுக்கு வணிக வீதியில் இடமில்லை என்றாலும், தொழில் சார்ந்த விஷயங்கள் இடம்பெறும்போது அதைத் தவிர்க்க முடியாது.

அந்த வகையில் இந்தவாரம் இடம்பெறுகிறது நான்காவது சிங்கம் (FourthLion) நிறுவனம். இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரும், ஆதார் அடையாள அட்டை வழங்கும் யுஐடிஏஐ அமைப்பின் முன்னாள் தலைவருமான நந்தன் நிலகேணியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அவரது ஆலோசனையில் உருவாக்கிய நிறுவனம்தான் ஃபோர்த்லயன் எனப்படும் நான்காவது சிங்கம்.

இந்த நிறுவனம் இப்போது வேட்பாளர்களுக்கு உதவும் தொழில்நுட்பத்தை வழங்க முன்வந்துள்ளது. அரசியல்வாதிகள் தேர்தல் சமயத்தில் அதிக கவனம் செலுத்தும் வாக்கு வங்கியை தனது சாஃப்ட்வேரின் பெயராக்கிவிட்டது. ஆம் இதன்பெயர் வோட்பேங்க் (Votebank) என்பதாகும்.

நாணயத்தில் மூன்று சிங்கங்களைப் பார்க்க முடியும். ஆனால் நான்காவது சிங்கம் தெரியாது. இன்னொரு புறத்தையும் அடையாளம் காட்டும் என்பதற்காக தங்கள் நிறுவனத்துக்கு நான்காவது சிங்கம் என பெயரிட்டதாகக் கூறியுள்ளனர் இதன் நிறுவனர்கள். இந்நிறுவனத்தின் நிறுவனர்களான நமன் புகலியா, சங்கர் மருவாடா, விஷால் ஷா ஆகிய மூவரும் நந்தன் நிலகேணியுடன் ஆதார் அடையாள அட்டை வழங்கும் (யுஐடிஏஐ) அமைப்பில் பணியாற்றியவர்கள். நான்காவது நிறுவனரான கௌரவ் கோயல், மென்கன்ஸி நிறுவனத்தில் பணியாற்றியவர். இதில் விரால் ஷா, எல்பிஜி மானியத்துக்கான தொழில்நுட்பத்தை வடிவமைத்தவர்.

பொதுவாக அரசியல்வாதிகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்து வது மிகவும் குறைவு. தாங்கள் போட்டியிடும் தொகுதி பற்றி முழுமை யாகத் தெரிந்து கொள்ளாமல் போட்டியிடுவோரே அதிகம். கட்சி சீட் தந்துவிட்டது என்பதற்காக, மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் முன்னணி தலைவர்கள் காட்டும் இடங்களுக்கெல்லாம், போடும் பொதுமேடைகளிலெல்லாம் வாக்குறுதிகளாக வாரி வழங்குவர்.

ஆனால் இவர்களது தொழில் நுட்பம், அரசியல்வாதிகளின் தொகுதி முழுவதைப் பற்றிய தகவலையும் உள்ளங்கை நெல்லிக் கனி போல தரும். அத்துடன் படித் தவர்கள், படிக்காதவர்கள், விவ சாயிகள், வேலையில்லாதவர்கள் என அனைத்து விவரங்களையும் தரும். அப்பகுதி மக்களின் தேவை என்ன, எத்தகைய வாக்குறுதிகளை அளித்தால் வாக்குளைப் பெறலாம் என்பதற்கான உத்திகளை இவர்களது தொழில்நுட்பம் வடிவமைத்துத் தரும்.

வேட்பாளர்கள் தனிப்பட்ட முறையில் வாக்காளர்களுக்கு தகவல்கள் அனுப்பும் வசதி, ஊடகத்தில் இடம்பெறுவது, வாக்குச் சாவடி நடவடிக்கைகளைக் கண்காணிப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் இந்நிறுவன சாஃப்ட்வேர் நிறைவேற்றும். இதனால் வேட்பாளர்களின் செலவு கணிசமாகக் குறையும் என்கிறார் தலைமைச் செயல் அதிகாரியான புகலியா.

முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி போட்டியிட்ட சிக்கபல்லபூர் தொகுதிக்கான பிரசாரத்தை மேற்கொண்டதாகவும், இதேபோல மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் பிரித்விராஜ் சவாணின் சட்டப் பேரவைத் தொகுதியான கராத் தெற்கு பகுதியில் பிரசார உத்தியை வகுத்ததாகவும் இக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

நவீன தொழில்நுட்பம் தகவல்களைத் திரட்டவும், அவற்றை ஆதாரபூர்வமாக நிலைநிறுத்தவும் உதவும். அந்தவகையில் இதுபோன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் சாஃப்ட்வேர் வேட்பாளர்களுக்கு உதவியாக இருக்கும்.

இருந்தாலும் இந்த நிறுவனத்தின் ஆலோசகரான நந்தன் நிலகேணிக்கு இந்த டெக்னாலஜியால் எந்த பலனும் இல்லை. கடந்த மக்களவை தேர்தலில் அவர் தோற்றார். என்னதான் டெக்னாலஜி இருந்தாலும், வெற்றி பெறவேண்டுமானால் மக்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற வேண்டும் என்பது நிலகேணி விஷயத்தில் நிரூபணமாகிவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x