Published : 21 Mar 2016 11:57 AM
Last Updated : 21 Mar 2016 11:57 AM

தொழில்முனைவோர்களை தேடும் அமேசான்

தொழிலில் புதிய புதிய வாய்ப்புகளை தேடுவதுதான் நிறுவனங்கள் வளர்வதற்கான ஒரே வழி. சேவைகளை விரிவுபடுத்துவது, எளிமைப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர முடியும். வாய்ப்புகளைக் கொடுக்கிறோம் வாருங்கள் என விற்பனையாளர்களை நோக்கி அமேசான் வாகனத்தை தள்ளிக் கொண்டு வருகிறது. ஆம் அமேசானில் விற்பனையாளராக வேண்டும் என்றால் அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆட்கள் வந்து உங்களுக்கு பயிற்சி கொடுப்பார்கள் என புதிய சந்தையை உருவாக்கி உள்ளது அமேசான். சமீபத்திய இந்த அறிவிப்பு ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ள பல நிறுவனங்களுக்கும் சவாலாக இருக்கும் என்றே தெரிகிறது.

ஆன்லைன் வர்த்தகத்தில் சர்வதேச அளவில் பல போட்டியாளர்கள் இருந்தாலும் அமேசான் தனது சேவைகள் மூலம் முன்னணி நிறுவனம் என்கிற இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. தற்போது அனைத்து இ-காமர்ஸ் நிறுவனங்களும் உள்ளூர் அளவிலான தயாரிப்பாளர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டு பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகின்றன. இப்படி பல தயாரிப்பாளர்களையும் ஒருங்கிணைக்க பல நாட்கள் ஆகின்றன. பல நடைமுறைகளை வைத்துள்ளன இந்த நிறுவனங்கள். அமேசான் இதற்கு எளிய நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது.

அதாவது நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்யும் சிறு குறு தொழில் முனைவர்கள் சில்லரை வர்த்தகத்தில் இறங்குவதற்கான வாய்ப்பை இதன் மூலம் வழங்குகிறது. இதற்கான சிறு குறு தொழில் நிறுவனங்களை இணைக்கும் முயற்சிகளை மேற் கொள்கிறது. இவர்களை இணைப் பதற்கான நடைமுறைகளை காலந் தாழ்த்தாமல் உடனடியாக தங்களது வலை பின்னலில் இணைக்க `அமேசான் தட்கல்’ என்கிற திட்டத்தை முன் வைத்துள்ளது.

பாஸ்போர்ட் அலுவலகங்களில் விரைவான சேவைக்கு இந்த தட்கல் சேவை செயல்படுத்தப்படுகிறது. அதுபோல உடனடியாக தொழில்மு னைவோரை அடையும் அமேசான் நிறுவன அதிகாரிகள், அமேசானில் பொருட்களை விற்பதற்கான பதிவு செய்தல், கேட்லாக், புகைப்படங்கள் தயார் செய்வது, விற்பனையார் பயிற்சி முறை போன்றவற்றை ஒழுங்குபடுத்தி கொடுப்பார்கள்.

தற்போது டெல்லி மற்றும் கோழிக்கோட்டில் இந்த சேவையை தொடங்கியுள்ளது. விரைவில் 15 நகரங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. தற்போதுவரை அமேசான் நிறுவனம் 75 ஆயிரம் விற்பனையாளர்களை வைத்துள்ளது. இந்த திட்டத்தின்கீழ் இந்தியா முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள், கலைஞர்கள், தொழில் முனைவோர்களை ஒருங்கிணைத்துள்ளது.

இதன் மூலம் ஆன்லைன் விற்பனையில் சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க முடியும். இவர்களுக்கு உடனடியாக வாய்ப்பு களை உருவாக்கி கொடுப்பதால் இவர்கள் வளர்வதற்கு நல்ல வாய்ப்பு என்று அமேசான் கூறியுள்ளது. அமேசான் நிறுவனத்தில் விற்பனையாளர்களின் வளர்ச்சி ஆண்டுக்காண்டு 250 சதவீதம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்கிறார் அமேசான் இந்தியா நிறுவனத்தின் விற்பனையாளர்கள் பிரிவு தலைவர் கோபால் பிள்ளை.

இது சாய்கார்ட் டாட் காம் நிறுவனத்தை பார்த்து அமேசான் தொடங்கியுள்ளது என்கிற கருத்தும் எழுந்துள்ளது. நம்ம ஊரில் காய்களையும், பழங்களையும் ஏதாவது ஒரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நேரடியாகவே விற்பனைக்கு வரும் விவசாயிகளையும், வியாபாரிகளையும் பார்த்திருப்போம். இப்போது வியாபாரி களைத் தேடி அமேசான் வருகிறது.

சிறு குறு தொழில் முனைவோர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதற்கிடையில் ஆன்லைன் சந்தையில் மிக வலுவான பிராண்டாக உருவான பிறகு அமேசான் பல முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதில் இதுவும் முக்கியமான உத்தி என்கிறார்கள். ஏற்கெனவே நேரடி சில்லரை வர்த்தக கடைகளை திறக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x