Published : 14 Mar 2016 10:46 AM
Last Updated : 14 Mar 2016 10:46 AM

குரேஷிய இளைஞரின் பேட்டரி சூப்பர் கார்!

அந்த இளைஞருக்கு வயது 28, ஆனால் அவரது அயராத முயற்சியின் பலன் அவரை சர்வதேச அளவில் பிரபலமாக்கியுள்ளது. சரித்திரம் உள்ளவரை மிக அதிவேகமாக செல்லும் ஸ்போர்ட்ஸ்காரை (பேட்டரி யில் இயங்கும்) முதலில் உருவாக்கியவர் என்ற பெருமை நிலைத்திருக்கும்.

குரேஷியாவைச் சேர்ந்த மேட் ரிமாக்கின் சூப்பர் கான்செப்ட் காருக்கு இன்று சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஜெனீவாவில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில் இவரது கார் அனைவரையும் கவர்ந்ததில் வியப்பில்லை.

சுற்றுச் சூழலை பாதிக்காத கார்களை உருவாக்கும் முயற்சியில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இருந்தாலும் பேட்டரி கார்களில் அதிக வேகம் செல்ல முடியவில்லை, நீண்ட தூரம் செல்ல முடியாது என்ற இரண்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அனைத்து நிறுவனங்களுமே தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.

ஆனால் ரிமாக் உருவாக்கிய ஸ்போர்ட்ஸ் கார் பெட்ரோலில் இயங்கும் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு (ரேஸ் கார்) நிகரான வேகத்தில் சென்று அனைவரையும் வியப்பிலாழ்த்தி யுள்ளது.

மேட் ரிமாக் முதன் முதலில் பேட்டரி காரை உருவாக்கியபோது அவருக்கு வயது 21. ஆட்டோமோடிவ் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை உருவாக்கி ரிமாக் என்ற பெயரிலேயே கார்களைத் தயாரித்துள்ளார்.

3 விநாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்ட முடியும் என்பதை நிரூபிக்க தனது நிறுவன வளாகத்தில் இவர் காரை ஓட்டிக் காண்பித்தபோது அதைக்கண்டு வியக்காதவர்கள் இருக்க முடியாது. 100 கி.மீ. வேகத்தில் சென்றபோது புகை வரவில்லை. மாறாக வந்த வேகத்தில் போட்ட சடன் பிரேக்கால் டயர் தேய்ந்ததில் ரப்பர் நாற்றம்தான் வந்தது. பேட்டரி காரிலும் வேகமாகச் செல்ல முடியும் என்பதற்காக சீறிச் சென்றதாக பெருமையுடன் குறிப்பிடுகிறார் மேட் ரிமாக்.

கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்த அதிவேகத்தில் செல்லும் பேட்டரி கார் இவரது அலுவலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 1984-ம் மாடல் இ30 பிஎம்டபிள்யூ மாடல் காரில் இன்ஜினை முழுவதுமாக கழற்றிவிட்டு பேட்டரியில் இயங்கும் இன்ஜின், மோட்டாரைப் பொறுத்தி இந்த சாதனையை புரிந்தார் மேட். அப்போது அவருக்கு வயது 19.

பள்ளி நாள்களில் இவர் கண்டுபிடித்த எலெக்ட்ரிக் கிளவுஸ் மிகவும் பிரபலம். இந்த கிளவுஸை கீ போர்டாகவும் மவுஸாகவும் பயன்படுத்தலாம். இதையடுத்து கார் கண்ணாடியில் இவர் செய்த மாற்றம் (eliminate blind spots) சர்வதேச அளவில் பிரபலமாக்கியது. இந்த கண்டுபிடிப்பை ஐரோப்பாவைச் சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனத்துக்கு விற்றதில் இவருக்கு கணிசமான தொகை கிடைத்தது. இதன் மூலம் 2008-ம் ஆண்டு பிஎம்டபிள்யூ காரை வாங்கி கார் பந்தயங்களில் பங்கேற்கத் தொடங்கினார். சில பந்தயங்களில் பங்கேற்ற பிறகு இன்ஜின் வெடித்துப் போனதில் இவரது ஆர்வம் மாறியது. அடுத்து பேட்டரியில் செயல்படும் கார் தயாரிப்பில் இவரது கவனம் திரும்பியது. குரேஷியாவைச் சேர்ந்த மின் பொறியாளர் உருவாக்கிய மோட்டார் தனது காருக்கு தீர்வாக இருக்கும் இவர் கருதினார். அதை பேட்டரியில் செயல்பட வைத்ததில் இவருக்கு வெற்றி கிடைத்தது.

6 மாதங்களில் பிஎம்டபிள்யூ காரை முற்றிலுமாகப் பிரித்து அதை பேட்டரியில் இயங்கும் ரேஸ் காராக மாற்றி குரேஷிய பந்தைய மைதானத்தில் இறக்கினார்.

ஆனால் காரைப் பார்த்தவர்கள் எல்லாம் இந்த வாஷிங் மெஷினை வைத்து பந்தயத்தில் என்ன செய்யப் போகிறீர்கள் என்று கிண்டலடித்தனர். வேறு சிலரோ தங்களது செல்போனை சார்ஜ் செய்து கொள்ளலாமா என்று கேட்டு வெறுப்பேற்றியுள்ளனர். அடுத் தடுத்து பந்தயங்களில் இந்தக் காரின் செயல்பாடுகளை மேம்படுத்தியதில் 2010-ம் ஆண்டு பந்தயத்தில் கேஸோலினில் ஓடும் காரை பின்னுக்குத் தள்ளியது ரிமாக்.

அப்போது குரேஷியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் அபுதாபியைச் சேர்ந்த அரச குடும்பத்தினருக்கு 2 கார்களைத் தயாரித்துத் தருமாறு கேட்டார். அப் போது எனது கராஜில் என்னுடன் ஒருவர் மட்டுமே பணியாற்றிக் கொண்டிருந்தார். இருந்தாலும் பேட்டரி காரைத் தயாரிப்பது என்று முடிவோடு தயாரிப்பில் ஈடுபட்டேன் என்கிறார் மேட்.

பொழுதுபோக்காக கார்களை கழற்றி மாட்டி பேட்டரி காராக மாற்ற மேற்கொண்ட முயற்சி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. அதுவே தொழிலாக மாறியது விபத்து போல நடந்துவிட்டது என்கிறார் மேட்.

ரிமாக் ஆட்டோமொபிலி என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டு அதில் தற்போது 22 குரேஷிய பொறியாளர்கள் பணிபுரிகின்றனர். நிறுவனத்தின் விற்பனைப் பிரிவுத் தலைவர் டெஸ்லா மோட்டார்ஸில் பணியாற்றியவர்.

ஆரம்பத்தில் கார் தயாரிப்பு நிறுவனத் தில் பொறியாளராக உள்ளவரை வேலைக்குச் சேர்க்கலாம் என்று பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் பணியாற் றும் பொறியாளரை அணுகியபோது அவர் கேட்ட சம்பளம் திகைக்க வைத்த தாம். ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கு அவ் வளவு அதிக சம்பளம் கட்டுபடியாகாது என்று அந்த முடிவைக் கைவிட்டு விட்டாராம் மேட்.

ஆரம்பத்தில் பல தவறுகளைப் புரிந்து அதிலிருந்து கற்றுக் கொண்ட தாகக் குறிப்பிட்ட மேட், இருந்தபோதி லும் சரியான தயாரிப்பில் ஈடுபடுகிறோம் என்ற திருப்தி இருந்தது என்கிறார். பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் அதிக முதலீடு செய்து கார் தயாரிப்பில் ஈடுபடும் வேளையில் குறைந்த முதலீட்டில் கார் தயாரிக்கப் போகிறோம் என்ற நினைப்பு இருந்தது. மேலும் எங்களுக்கு உள்ள ஒரே சாதக அம்சம் நிறுவனத்துக்கென்று எந்தவித பாரம்பரியமும் இல்லாததுதான். இதனால் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக வடிவமைப்பை மேற்கொண்டோம் என்கிறார்.

தொடக்கத்தில் நிறுவனத்துக்குத் தேவையான நிதியை மேட் தந்தை அளித்துள்ளார். ஒரு கட்டத்தில் இவரும் இவரது பெண் தோழியும் தங்களுக்கு இருந்த ஒரே பழக்கமான சாக்லெட் மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவதையும் நிறுத்திவிட்டனராம். ஓராண்டு கடின உழைப்பில் உருவான கார் 2011 பிராங்க்பர்ட் மோட்டார் கண்காட்சியில் இடம்பெற்ற போதுதான் ரிமாக் ஆட்டோமொபிலி நிறுவனத்தின் புகழ் பரவத் தொடங்கியது.

ஜெர்மன் கண்காட்சியில் இது முதல் முறையாக பங்கேற்ற போது நான்கு சக்கரங்களும் சுழலும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 305 கிலோமீட்டராகவும், ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம் என்பதும் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இன்ஜினின் செயல் வேகம் அதன் எடை என்ற கணக்கின் அடிப்படையில் ஃபார்முலா 1 பந்தய கார்களுக்கு இணையானதாக இந்தக் காரும் இருந்தது.

இவர் தயாரித்துள்ள சூப்பர் கார் 1,073 ஹெச்பி திறன் கொண்டது. இதன் எடை 1,650 கிலோவாகும்.

இந்த காரில் வழக்கமான கண்ணாடிக்குப் பதில் கேமிராவைப் பொருத்தியிருந்தார் ரிமேக். இந்தக் காரின் அனைத்து பாகங்களும் குறிப்பாக பேட்டரி மற்றும் விபத்துகாலத்தில் விரியும் ஏர் பேக் தவிர அனைத்துமே இவரது நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டவையாகும்.

கார் தயாரிப்பதற்கு முன்பு பேட்டரியில் இயங்கும் சைக்கிளைத் தயாரித்துள்ளார் மேட்.

ஆர்வமும் ஈடுபாடும் தளரா முயற்சியும் இருந்தால் சர்வதேச அளவில் புகழ் தானே தேடிவரும் என்பதற்கு ரிமேக் மிகச் சிறந்த உதாரணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x