Published : 21 Mar 2016 11:37 AM
Last Updated : 21 Mar 2016 11:37 AM
தலைநகர் டெல்லியில் சுற்றுச் சூழலைக் காக்கும் நோக்கில் 2000 சிசி திறனுக்கு மேற்பட்ட கார்களை விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் தாற்காலிக தடை விதித்தது. இதேபோல தடையை தங்கள் மாநிலங்களிலும் விதிக்க வேண்டும் என்று பல்வேறு தன்னார்வ அமைப்புகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களில் பொது நலன் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மும்பை, குஜராத், கர்நாடக மாநிலங்களில் இந்த வழக்குகள் போடப்பட்டுள்ளன. சுற்றுச் சூழல் பாதிப்புக்கு முக்கியக் காரணமாகத் திகழும் டீசல் கார்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பொது நலன் வழக்குகள் போடப்பட்டுள்ளன.
டீசல் கார்களுக்கு எதிராக திரண்டு வரும் கோஷம் கார் உற்பத்தியாளர்களைக் கலக்கமடையச் செய்துள்ளது. கார் உற்பத்திக்கென பல நூறு கோடிகளை முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் இந்தப் பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் தத்தளிக்கின்றன.
இந்நிலையில் சில மாநிலங்கள் டீசல் கார்களுக்குத் தடை விதிப்பது குறித்து தீவிர மாக பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளி யாகியுள்ளது. இதுவும் கார் நிறுவனங்களை மேலும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
இது தொடர்பாக மாநில அரசோ அல்லது மத்திய அரசோ தெளிவான கொள்கையை அறிவித்துவிட்டால் கார் உற்பத்தி குறித்து திட்டவட்டமான முடிவுக்கு வர முடியும். ஒரு மாநிலத்தில் 2000 சிசி கார்களுக்கு அனுமதி இல்லை. மற்ற மாநிலங்களில் அவற்றுக்கு அனுமதி என்றுள்ள நிலை தங்களை பெரும் சிரமத்துக்குள்ளாக்குவதாக கார் உற்பத்தி நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
மேலும் ஒரு மாநிலத்தில் தடை விதித்தால் அண்டை மாநிலங்களிலிருந்து அத்தகைய கார்களை வைத்திருப்போர் நுழைய முடியாத நிலை உள்ளது. இது சொந்த கார் வைத்திருப்பவர்களைக் காட்டிலும் வாடகைக் கார் நிறுவனங்களுக்கு பெரும் இடையூறாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள பொதுநல வழக்கில் (பிஐஎல்) 2 லிட்டர் என்ஜின் திறன் கொண்ட பொது போக்குவரத்து அல்லாத டீசலில் இயங்கும் பிற வாகனங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. அத்துடன் பெங்களூரு நகர எல்லைக்குள் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் காற்று மாசு அளவில் பிஎம்10 மிக மோசமானது. இது 57 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது. 2010-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டுக்குள் காற்று மாசு அளவு அதிகரித்துள்ளது என்று சமூக ஆர்வலர் வி. சசிதர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இப்பிரச்சினைக்கு நடைமுறை சாத்தியமான வழிகளைக் கூறுமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதேபோல மும்பை உயர் நீதிமன்றத்தில் ஷதாப் படேல் என்பவர் தொடர்ந்துள்ள பொது நல வழக்கை ஏப்ரல் 27-ம் தேதி விசாரிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டீசல் கார்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் டெல்லியில் அமல்படுத்தப்படுவதைப் போல ஒற்றை இலக்க பதிவெண் கொண்ட வாகனங்கள் ஒரு நாளும் இரட்டை இலக்க பதிவெண் கொண்ட வாகனங்கள் மற்றொரு நாளும் செல்வது போன்ற விதிமுறை மும்பையிலும் கொண்டு வர வேண்டும் என்று தனது மனுவில் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான ஜோகட் எகோ அறக்கட்டளை, தனது மனுவில் அனைத்து கனரக வாகனங்களுக்கு (அரசு பஸ்கள் உள்பட) தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
சுற்றுச் சூழல் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாத வாகனங்களைக் கைப்பற்றி அவற்றுக்கு முழுமையாகத் தடை விதிக்க வேண்டும் என்றும் பழைய கனரக வர்த்தக வாகனங்களை படிப்படியாக நீக்குவதற்குரிய கொள்கையை வகுக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இப்போது கனரக வாகனங்களை முற்றிலுமாக நீக்குவதற்காகப் போராடி வருவதாகவும், இத்தகைய வாகனங்கள் மூன்று டீசல் கார்கள் அளவுக்கு சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றன என்று அறக்கட்டளைத் தலைவர் தேவ்ஜிபாய் தமேசா தெரிவித்துள்ளார்.
அடுத்தகட்டமாக சிஎன்ஜி-யில் இயங்கும் வாகனங்களை இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இப்போதைக்கு சிஎன்ஜி கிடைப்பது அரிதாக இருப்பதால் அதை விரைவாக செயல்படுத்த முடியவில்லை என்று தேவ்ஜிபாய் குறிப்பிட்டார்.
பிஎஸ்-6 தரச்சான்றை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது 2018லிருந்தே அமல்படுத்தக் கோரி வருகின்றனர் இத்துறையைச் சேர்ந்தவர்கள்.
தொழில்துறையில் பயன்படுத்தும் டீசல் மூலம் வெளியாகும் மாசை விட கார்களில் குறைந்த அளவே மாசு வெளியாகிறது. அந்த அளவுக்கு ஆட்டோமொபைல் துறையில் முன்னேறிய தொழில்நுட்பம் பின்பற்றப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் பிஹாரில் ஒருமனதாக டீசல் வாகனங்களை முற்றிலுமாகத் தடை செய்வது குறித்து பரிசீலிக்கப்படுவது தங்களை பெரிதும் பாதித்துள்ளதாக இத்துறையினர் தெரிவித்தனர்.
ஒரு காலத்தில் பெட்ரோலை விட டீசல் விலை குறைவாக இருந்ததால் டீசல் கார்களைத் தேர்வு செய்வோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இப்போது பெட்ரோலுக்கும் டீசலுக்கும் விலையில் பெரிய அளவு வித்தியாசமில்லை.
ஒவ்வொரு மாநிலத்திலும் தடை விதிக்கப்படலாம் என்ற பீதி வாகன உற்பத்தியாளர்களை கவலையடையச் செய்துள்ளது ஒரு புறம் என்றாலும், மாற்று வழியாக பெட்ரோல் கார்களை மட்டுமே தயாரிப்பது என்ற முடிவுக்கு அவர்கள் வருவதற்கு நீண்ட காலம் ஆகாது என்றே தோன்றுகிறது.
டீசல் கார்கள் இனி அரிய பொருளாக பொருள்காட்சியில் மட்டுமே இடம்பெறக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT