Published : 07 Mar 2016 12:03 PM
Last Updated : 07 Mar 2016 12:03 PM

உன்னால் முடியும்: சொந்த தொழில்தான் நிம்மதி கொடுத்தது

பெரிய நிறுவனத்தில், நல்ல சம்பளத் தில் வேலை பார்த்துக் கொண் டிருக்கிறோம். நாளையிலிருந்து வேலைக்கு வரவேண்டாம், நிறுவனத்தை மூடப்போகிறார்கள் என்றால் என்ன செய் வீர்கள்.. சென்னை நோக்கியா நிறுவனத்தில் வேலை பார்த்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு ஒரே நாளில் வேலை போனது. உறக்கமும் போனது. அதில் ஒருவர்தான் துரை ராஜலிங்கம்.

புதுச்சேரியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இவர். திடீரென வேலை இழந்த நிலையில், நிலைகுலையாமல் நிதானமாக யோசித்து மாற்று தொழிலை தேர்ந்தெடுத்தவர். இன்று 6 பேருக்கு வேலை கொடுக்கும் தொழில் முனைவோராக வளர்ந்து நிற்கிறார்.

பொறியியல் முடித்துவிட்டு சில ஆண்டுகள் அனுபவத்துக்குப் பிறகு நோக்கியா நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். 5 ஆண்டுகளாக வேலைபார்த்துக் கொண்டிருந்த நிலையில், மைக்ரோசாப்ட் அந்த நிறுவனத்தை வாங்கிய பிறகு சென்னை ஆலையை மூட திட்டமிட்டனர். பல ஆயிரம் பணியாளர்களுக்கு ஒரு சில நாட்களிலேயே செட்டில்மெண்ட் கொடுத்து வீட்டுக்கு அனுப்பினர். இதுதான் வாழ்வாதாரம் என எண்ணிக் கொண்டிருந்த ஒரு வேலையை நாளையிலிருந்து பார்க்க முடியாது என்றால் எப்படி இருக்கும். ஒரே நாளில் பலருக்கும் நிலைமை தலைகீழானது. முதல் சில நாட்களில் அடுத்து என்ன செய்வது என்கிற குழப்பமே இருந்தது.

வேறு வேலைக்குச் செல்ல யோசனையாக இருந்தாலும், திரும்பவும் வேறு யாருக்கோ சென்று கஷ்டபட்டு இது போன்ற நிலைமைக்கு திரும்புவதைவிட சொந்த தொழிலே மேல் என்று யோசித்தேன். இதற்கு முன்பு பல முறை சொந்தமாக ஏதாவது தொழில் செய்யலாம் என யோசித்தாலும், அப்போதெல்லாம் எந்த முயற்சிகளிலும் இறங்கவில்லை. ஆனால் வேலை இழந்த பிறகு, இதுதான் சரியான சந்தர்ப்பம் என தோன்றியது. அப்போது யோசித்த தொழில்தான் பேப்பர் கப் தயாரிக்க திட்டமிட்டது. நோக்கியா கொடுத்த செட்டில்மெண்ட் தொகை, சேமிப்பு, வீட்டினரின் உதவி போன்றவற்றை முதலீடாகக் கொண்டு இந்த தொழிலில் இறங்கினேன்.

இந்த தொழில்தான் என்று முடிவான பிறகு இதற்கான தொழில்நுட்பம், இயந்திரம், சந்தை, மூலப்பொருட்கள் என அனைத்தையும் நாமே அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சென்னை, சிவகாசி என பல ஊர்களுக்கும் அலைந்திருக்கிறேன். சுமார் 2 மாதங்கள் தீவிர திட்டமிடலுக்கு பிறகு இந்த தொழிலில் இறங்கினேன். சந்தையில் வித்தியாசப்பட வேண்டும் என்றால், நேரடியாக நிரந்தர வாடிக்கையாளர்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற தெளிவும் கிடைத்தது.

இதற்கேற்ப பேப்பர் கப் மற்றும் பிளேட்டுகள் மட்டும் இல்லாமல் மூடியுடன் உள்ள கப், ஸ்டிக், உறிஞ்சும் குழாய், பிரிண்டட் பேப்பர் பிளேட், பிரிண்டட் கப், பேப்பர் பக்கெட் என பல துணைப் பொருட்களையும் எனது விற்பனையில் சேர்த்துக் கொண்டேன். இவற்றை நான் செய்யவில்லை என்றாலும் எனது தேவைக்கு ஏற்ப வடமாநில தயாரிப்பாளர்களிடமிருந்து வாங்கிக் கொடுத்தேன். இது போன்ற துணைப் பொருட்களோடு முக்கிய உணவு நிறுவனத்தை அணுகியதும், அவர்கள் ஏற்கெனவே வாங்கியதிலிருந்து விலை குறைவாக இருந்ததால் ஆர்டர் கொடுத்தனர். நான் ஏற்கெனவே வேலை பார்த்த நோக்கியா ஆலையிலும் பிரிண்டட் பேப்பர் கப்புக்கு ஆர்டர் வாங்கினேன். இதை வைத்து அடுத்தடுத்த ஆர்டர்கள் பிடிக்க முடிந்தது. எனது இணையதளத்தின் மூலம் ஐஆர்சிடிசி ஆர்டர் கிடைத்தது. இப்போது பெங்களூர் டாடா காபி, கூகுள் நிறுவனங்களில் ஆர்டர்களுக்கான முதற்கட்ட வேலைகள் முடிந்துள்ளன.

எனது தயாரிப்பு திறனை தாண்டி ஆர்டர்கள் கிடைத்தால் அதை ஆர்வப்பட்டு வாங்குவதில்லை. எனது உற்பத்தி திறன் இவ்வளவுதான் என்று தெளிவாக எடுத்துச் சொல்லி, சரியான நபர்களை வாடிக்கையாளர்களுக்கு அடையாளம் காட்டுவேன். இதனால் எனது நிறுவனத்தின் மீது நல்ல அபிப்ராயம் உருவாகி வேறு சில ஆர்டர்களும் கிடைத்துள்ளன.

நான் ஒரு ஆள் வேலை பார்த்து சம்பாதித்து வீட்டுக்கு கொண்டு போனதைவிட தற்போது ஆறு நபர்கள் என் மூலம் சம்பாதிக்கிறார்கள். தொழிலில் அடுத்த கட்டம் செல்ல வேண்டும் என்று உழைத்தாலும், வாழ்க்கையில் திருப்தி உணர முடிகிறது. ஒருவேளை ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருந்தால் இந்த உணர்வு கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. அப்படி ஒரு நிம்மதியை உணர்கிறேன் என்றார்.

நிம்மதியான ஒரு உணர்வை ஒரு நாளில் அடைந்துவிட முடியாது. அதற்கு பின்னால் நெடிய போராட்டம் இருக்கிறது. இவரது அனுபவம் ஒவ்வொருவருக்கும் பாடம்.

நீரை மகேந்திரன்

maheswaran.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x