Published : 14 Mar 2016 11:03 AM
Last Updated : 14 Mar 2016 11:03 AM
கோடைக்காலம் தொடங்கிவிட்டால் போதும் ஊருக்கு ஊர் திடீர் பொருட் காட்சிகள், வர்த்தகக் கண்காட்சிகள் முளைத்துவிடும். பொழுதுபோக்கு மையங்கள் இல்லாத ஊர்களில் மக்களுக்கு ஒரு வகையில் பொழுதுபோக்கும் வாய்ப்பாகவும், அறிமுக மாகும் புதிய பொருட்களை தெரிந்து கொள்ளவோ அல்லது வீட்டுக்குத் தேவையானவற்றை வாங்குவதற்கோ வாய்ப்பாக இருக்கும்.
இதுபோன்ற வர்த்தகக் கண்காட்சிகள் அல்லது பொருட்காட்சிகள் பொதுமக்களுக்கு பயன்தர கூடியதுதான் என்றாலும், இது போன்ற வர்த்தக பொருட்காட்சிகள் முழுமையாக நம்பிக்கை பெற்றுள்ளனவா என்பது கேள்விக்குறிதான். ஆனால் நிறுவனங்களுக்கோ பொருட்களை அறிமுகப்படுத்தவும், சந்தைப்படுத்தவும் மக்கள் மத்தியில் எளிதாகக் கொண்டு செல்லவும் இது போன்ற வர்த்தக கண்காட்சிகள், பொருட்காட்சிகள்தான் சிறந்த வழியாக இருக்கிறது. கண்காட்சியா பொருட்காட்சியா என்கிற குழப்பம் வேண்டாம். இவை இரண்டின் நோக்கமும் நுகர்வோரை சென்றடைவதுதான்.
பெரு நிறுவனங்கள் தங்களது பொருளை சந்தைப்படுத்த விளம்பரங்களுக்கு கோடிகளைக் கொட்டிக் கொடுக்கின்றன. தங்களது பொருட்களின் பயனை அல்லது பயன்படுத்தும் முறையை எளிதாகக் கொண்டு சேர்க்க பல கோடிகளை இதற்காக செலவிடுகின்றன. ஆனால் உள்ளூர் அளவிலான சிறு தயாரிப்பாளர்கள் விளம்பரத்துக்கு செலவிடும் தொகைக்கு பதிலாக விலையை குறைத்து விற்க முடிவெடுத்தால் அதை மக்களிடம் கொண்டு சேர்க்க இந்த கண்காட்சிகள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. பெரிய நிறுவனங்களுக்கு போட்டியாக இப்போது உருவெடுத்திருக்கும் பல பிராண்டுகள் இப்படி கண்காட்சிகள் மூலம் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டவைதான்.
புதியவற்றின் சந்தை
கிரைண்டரை அங்கொன்றும் இங்கொன்று மாக பயன்படுத்திய காலத்தில், சிறிய ரக கிரைண்டர்களை மக்களிடம் கொண்டு செல்ல செளபாக்கியா நிறுவனம் தேர்ந்தெடுத்த வழி இது போன்ற பொருட்காட்சிகள்தான். தென்னிந்தியா வில் மசாலா விற்பனையில் முன்னணியில் உள்ள ஆச்சி மசாலா நிறுவனமும் இது போன்ற கண்காட்சிகளில்தான் முதலில் சந்தைப்படுத் தியது. கண்காட்சிகளில் செயல்முறை விளக்கங் கள் மூலம் ஒரு பொருளின் பயன்பாட்டை பார்க்கும் நுகர்வோர்கள் அவற்றை வாங்குவதற்கு தூண்டப்படுகின்றனர் என்பது பரவலான மார்கெட்டிங் உத்திகளில் ஒன்று.
வர்த்தக கண்காட்சிகள் இந்த பொருட்களுக்குத்தான் என்றில்லை. எல்லா பொருட்களுக்கும் சாத்தியமாக்கியுள்ளது நவீன யுகம். நாக்கில் எச்சில் ஊறவைக்கும் ஊறுகாய் முதல் உலகப்போருக்கு பயன்படுத்தும் கருவிகள் வரை இது போன்ற கண்காட்சிகளில் சந்தைப்படுத்தப்படுகின்றன. நமக்கு தெரிந்து சில ஊர்களில் இப்போதும் கடைபிடிக்கப்பட்டு வரும் சில சந்தைகள் இது போன்ற வர்த்தக கண்காட்சிகளின் பழைய வடிவம்தான்.
கோடிகளில் வர்த்தகம்
உள்ளூர் அளவில் சிறு சிறு தயாரிப்பாளர்கள் கலந்து கொள்ளும் கண்காட்சிகளில் சில லட்சங்களில் வர்த்தகம் என்றால், பெரு நிறுவனங்கள் மட்டும் கலந்து கொள்ளும் கண்காட்சிகளில் வர்த்தகம் பல பில்லியன் டாலர்களை தாண்டும்.
சில குறிப்பிட்ட துறைகளில் கண்காட்சிகளில் அறிமுகப்படுத்துவதற்கு என்றே புதிய முயற்சி களில் ஈடுபடுகின்றன. சர்வதேச வாகன கண்காட்சி கள், விமான கண்காட்சிகளில் நிறுவனங்கள் புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதை பெருமையாகக் கருதுகின்றன. இதன் மூலம் நிறுவனத்தின் வலிமையைக் காட்டி வர்த்தக வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள முடியும்.
தேவைகள் சார்ந்து
அவ்வப்போது திட்டமிட்டபடி குறிப்பிட்ட துறை சார்ந்த கண்காட்சிகள் பல ஊர்களிலும் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் தேவைகள் சார்ந்து குறிப்பிட்ட ஊர்களிலும் நடைபெறும் கண்காட்சிகளும் சர்வதேச வலை பின்னல் கொண்டவை. திருப்பூரின் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைக் கண்காட்சி, கோயம்புத்தூரில் ஜவுளிக் கண்காட்சி, நீலகிரியில் நடைபெறும் வாசனை திரவியம் மற்றும் மசாலா கண்காட்சி, பெங்களூரில் நடக்கும் விமான கண்காட்சி போன் றவை பகுதி சார்ந்து நடக்கும் கண்காட்சிகள். இவற்றை வேறு ஊர்களில் நடத்த முடியாது.
பொதுவாக கண்காட்சிகளில் ஒவ்வொரு பகுதி சார்ந்தும் கட்டுமான துறை கண்காட்சி, மின்னணு பொருட்கள் கண்காட்சி, உணவு கண்காட்சி, பர்னிச்சர் கண்காட்சி என இரண்டாம் நிலை நகரங்கள் மூன்றாம் நிலை நகரங்களிலும் நடந்து வருகிறது.
துறை சார்ந்து, நுகர்வோர் சேவைகள் சார்ந்து அல்லது பகுதி சார்ந்து நடக்கும் இதுபோன்ற கண்காட்சிகள் தவிர நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கும் கண்காட்சிகள் வேறு ரகமானவை. இது போன்ற கண்காட்சிகளில் நுகர்வோருக்கான பங்கு குறைவுதான். தொழில்நுட்ப கண்காட்சிகள் அந்த வகையிலானவை.
புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளவும், வர்த்தக வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ளவும் இது நடக்கும். வைர வியாபார கண்காட்சியில் சாமானியர்கள் எட்டிப்பார்க்க முடியாது. அங்கு வர்த்தகத்தில் உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். தவிர ஊடகத்துறை, உணவுதுறை, சினிமா துறை, மின்சாரம் என சகல துறைகளுக்கும் வர்த்தக கண்காட்சி நடக்கிறது. உலக அளவில் மிகப் பெரிய நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு செய்கின்றன.
வர்த்தக மையங்கள்
இதுபோன்ற வர்த்தகக் கண்காட்சிகள் சிறு நகரங்களில் திருமண மண்டபங்கள் அல்லது காலி இடங்களில் ஏற்பாடு செய்வார்கள். ஆனால் சர்வதேச வர்த்தக வலை பின்னலில் உள்ள கண்காட்சிகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கு பெறும் என்பதால் இதற்கென்று தனியாக வர்த்தக மையங்களில்தான் நடைபெறும். சென்னை வர்த்த மையம் அந்த வகையிலானது. சில நகரங்களில் தனியார் அமைப்புகளும் வர்த்தக மையங்களை நிர்வகித்து வருகின்றன.
ஏற்பாட்டாளர்கள்
இதுபோன்ற கண்காட்சிகளை நிறுவனங்கள் கூட்டாகவோ அல்லது தனியாகவோ நடத்து கின்றன. கண்காட்சியில் வாங்கினால் கணிசமான விலைக் குறைப்பு அல்லது சலுகைகள் அளித்து மக்கள் மத்தியில் இப்போதும் கண்காட்சி மீதான ஈர்ப்புகளை உருவாக்குகின்றன. சர்வதேச அளவில் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் வகையிலான பெரிய நிறுவங்களும் இதில் ஈடுபடுகின்றன. ஜெர்மனியில் நடக்கும் வாகன கண்காட்சியை ஒருங்கிணைக்கும் நிறுவனம்தான் சென்னையில் நடக்கும் வாகன கண்காட்சியையும் ஒருங்கிணைக்கிறது.
கண்காட்சிகளினால் மக்களுக்கு சில சங்கடங்களும் வரத்தான் செய்கிறது. ஒரு வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சியில் சிறப்பாக இருக்கும். வாங்கி வந்து வீட்டில் இயக்கினால் இயங்காது. புதியவர்களை தேடி அலையவும் முடியாமல் இப்படி கண்காட்சிகளில் வாங்கும் பொருட்கள் பயனற்றும் போவதும் உண்டு.
ஆனாலும் கண்காட்சிகளும் பொருட்காட்சி களும் வர்த்தக நிகழ்ச்சிகளில் தவிர்க்க முடியாத ஒன்று. கண்காட்சிகள்தான் புதிய பொருட்களை அறிமுகப்படுத்தவும், சந்தையின் எதிர்பார்ப்புகளை தெரிந்து கொள்ளவுமான வாய்ப்புகளை உருவாக்குகிறது. ஒரு வகையில் வளர்ந்த நாடுகளின் வர்த்தக சந்தையாக இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் உள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT