Published : 07 Mar 2016 12:17 PM
Last Updated : 07 Mar 2016 12:17 PM

நம் உரிமையைக் காப்பது யார்?

ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு இன்றியமையாதது. புதிய கண்டுபிடிப்புகள் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமானதாக இருக்கிறது. அதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. மின்னணு தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய நிறுவனங்களாக விளங்கும் தாய்வானின் பாக்ஸ்கான், அமெரிக்காவிலுள்ள ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் அந்தந்த நாடுகளின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதை அறிகிறோம்.

புதிய கண்டுபிடிப்புகளை பதிவு செய்வதன் மூலம்தான் அதன் மீது நாம் ஆதிக்கம் கொண்டவர்கள் ஆகிறோம். ஆனால் இந்த விஷயத்தில் இந்தியர்கள் மிகவும் பின்தங்கி இருக்கிறார்கள். புதியவற்றை கண்டுபிடிப்பதற்கு உள்ள ஆர்வம் அதைப் பதிவு செய்வதில் இல்லை. அதுபோல பழைய உரிமைகளை புதுப்பிப்பதிலும் ஆர்வம் காட்டுவதில்லை.

அறிவுசார் சொத்துரிமை பெறுவதில் இந்தியர்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர் என்று அறிவுசார் சொத்துரிமையின் மேல்முறையீட்டு ஆணையர் கே என் பாஷா சமீபத்தில் கூறினார்.

குறிப்பாக மரபு வழியாக இந்தியர்கள் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திவரும் பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட பல காப்புரிமை சார்ந்த விஷயங்களில்கூட தங்களுக்கான உரிமையை நிலைநாட்டத் தவறுகின்றனர். இதற்கு வெளிநாட்டினர் உரிமை வாங்குகின்றனர்.

அதாவது நாம் பாரம்பரியமாக மருத்துவ குணம் கொண்ட பொருளாகப் பயன்படுத்தி வருகிற வேம்பு, மஞ்சள், மாதுளை உள்ளிட்ட பொருட்களையும் அதன் மருத்துவ குணங்களையும் காப்புரிமை பெறவேண்டும். ஆனால் இதில் சில புதிய மூலக்கூறுகளை கண்டுபிடித்தது போல மேல் நாட்டு நிறுவனங்கள் அறிவுசார் சொத்துரிமை என்கிற வகையில் பதிவு செய்து வருகின்றன.

அறிவுசார் சொத்துரிமை

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட குறைந்தவிலை ஸ்மார்ட்போனான பிரீடம் 251 செல்போனில் சில ஆப்ஷன்கள் ஆப்பிள் நிறுவன போனில் உள்ளதுபோல இருக்கிறது என்று புகார் எழுந்தது. அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் பிரீடம் 251 நிறுவனத்தினர் ஸ்மார்ட்போனே உற்பத்தி செய்ய முடியாது. இதற்கு பல லட்சம் கோடிகள் இழப்பீடாக கொடுக்க வேண்டி இருக்கலாம். ஒருவர் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த ஒரு அறிவுசார்ந்த பொருளை பிறர் பயன்படுத்தக்கூடாது என்கிறது அறிவுசார் சொத்துரிமைச் சட்டம். சர்வதேச அளவில் உலக வர்த்தக (டபிள்யூடிஓ) ஒப்பந்தத்தில் இது வரையறுக்கப்பட்டுள்ளது.

காப்புரிமை

இது நாட்டின் பாரம்பரியமான அறிவின் மீதுள்ள உரிமையை நிலைநாட்டுவது ஆகும். வேம்பு, மஞ்சள், நிலவேம்பு, மாதுளை, வர்மம் போன்ற பல இயற்கை பாரம்பரிய மருத்துவ முறைகள் நமது முன்னோர்களிடமிருந்து வழி வழியாக நமக்கு வந்துள்ளன. இந்த பாரம்பரிய முறைகளின் அடிப்படைகளை தங்களது கண்டுபிடிப்பு போல மேலை நாட்டு நிறுவனங்கள் பதிவு செய்து விடுகின்றன.

பாரம்பரிய அறிவு நமக்கு கிடைத்துள்ளதே தவிர அதை பதிவு செய்துவிட வேண்டும் என்று நாம் சிந்திப்பதில்லை. இதை யார் நம்மிடமிருந்து பிடுங்கிவிட முடியும் என்று யோசிக்கிறோம். ஆனால் இந்த அறிவை சட்டபூர்வமாக பதிவு செய்யும் மேலை நாட்டு நிறுவனங்கள் இதற்கு உரிமையாளர்கள் என்கிற தகுதியை அடைகின்றன. இதனால் அவர்களது தொழில்நுட்பத்தை நாம் திருடி பயன்படுத்துகிறோம் என்று அர்த்தம் ஆகி விடுகிறது. ஏன் அப்படி என்கிறீர்களா. அப்படித்தான் இருக்கிறது உலக வர்த்தக ஒப்பந்தம்.

இப்படி இந்தியாவில் 85 சதவீத உடமைகளுக்கு சர்வதேச நிறுவனங்கள் காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளன. மேலும் இவர்கள் தங்களின் பழைய கண்டுபிடிப்புகளுக்குகூட புதிய வடிவம் கொடுத்து காப்புரிமைக்கு விண்ணப்பிக்கின்றன என்று கே என் பாஷா குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் என்ன ஆதாயம், அவர்கள் வாங்கிவிட்டு போனால் என்ன? நமக்குத்தான் பாரம்பரிய அறிவு இருக்கிறதே என்று அசட்டையாக இருக்க முடியாது. இந்த மருத்துவ உரிமைகளோ அல்லது நமது கண்டுபிடிப்புகளை பதிவு செய்யாமல் விட்டாலோ 5 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க வேண்டிய ஒரு மருந்தை 50 ஆயிரம் கொடுத்து வாங்க வேண்டி இருக்கும் என்கின்றனர். அதாவது அந்த பொருட்களை இந்தியாவில் தயாரிப்பதற்கான உரிமையை பெற பெரும் தொகையை கொடுக்க வேண்டும் அல்லது அவர்கள் நிர்ணயிக்கும் விலையில் பொருட்களை வாங்க வேண்டும்.

விழிப்புணர்வு

இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமை மற்றும் காப்புரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்கிற நோக்கத்தோடு 9 வது அறிவுசார் சொத்துரிமை மாநாடு அகமதாபாத்தில் ஜனவரி மாதத்தில் நடைபெற்றது. அங்கு இது தொடர்பாக பல விஷயங்கள் கோடிட்டு காட்டப்பட்டுள்ளன. அதில் கலந்து கொண்ட கே என் பாஷா இந்தியாவின் 85 சதவீத பொருட்களுக்கு சர்வதேச நிறுவனங்கள்தான் காப்புரிமை கோரி விண்ணப்பிக்கின்றன என்றார்.

சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க வர்த்தக மையம் வெளியிட்ட ஒரு ஆய்வின்படி அறிவுசார் சொத்துரிமை, பதிப்புரிமை மற்றும் ஏற்கெனவே வாங்கியுள்ள உரிமங்களை புதுப்பிப்பது, பாதுகாப்பது போன்ற விஷயங்களில் இந்தியர்கள் பின்தங்கியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 6.24 புள்ளிகளுடன் கடைசியாக இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் 40 ஆயிரம் பொருட்களுக்கு காப்புரிமை கோரி விண்ணப்பிக்கப்படுகிறது. பெரும்பாலும் மருந்து பொருட்களுக்குத்தான் அதிக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த எண்ணிக்கையில் இந்தியா உலகில் 7-வது இடம் வகிக்கிறது. அறிவுசார் சொத்துரிமையில் இப்போதுதான் நாம் விழித்துக் கொண்டுள்ளோம்.

இது தொடர்பாக இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். 2012-13 காலகட்டத்தில்தான் இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமைக்கு கட்டாய உரிமம், பதிப்புரிமை திருத்தச் சட்டங்களின் என புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட்டன.

புதிய உரிமைகள்

அதிக கல்வி நிறுவனங்கள் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. சுமார் 600 பல்கலைக்கழகங்கள், 30 ஆயிரம் கல்லூரிகள் என உயர் கல்வியில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டிலும் பல லட்சம் மாணவர்கள் வெளியேறுகின்றனர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பல புதிய கண்டுபிடிப்பு முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இவற்றில் 5 சதவீத காப்புரிமை கோரினாலே, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.

இது போன்ற முயற்சிகளில்தான் அறிவுசார் சொத்துரிமை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலை மாற வேண்டுமென்றால், அறிவுசார் சொத்துரிமையில் இந்திய இளைஞர்களிடம் போதிய முன்னேற்றம் வேண்டும். மத்திய அரசின் தற்போதைய திட்டமான ‘மேக் இன் இந்தியா’ இதற்கு முன்னுரிமை அளிக்கிறது. புதிய சலுகைகளையும் அளித்து வருகிறது. புதிய பொருளில், புதிய கண்டுபிடிப்புகள், புதிய உத்திகள் உங்களிடமும் இருந்தால் அதற்கு அறிவுசார் சொத்துரிமை கோரி விண்ணப்பிப்பதே இந்தியராக நீங்கள் நாட்டுக்கு செய்யும் கடமையாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x