Published : 07 Mar 2016 12:14 PM
Last Updated : 07 Mar 2016 12:14 PM

நறுமண உலகம்!

ஆதிகாலத்து மனிதன் இலை, தழைகளை ஆடையாக அணிந்தான். பின்பு விலங்கின் தோல்களை ஆடையாக அணிந்து கொண்டான். நாகரிகம் வளர வளர ஆடைகளில் முன்னேற்றம் ஏற்பட்டது. அணிகலன்களுக்கும், அழகு பொருட்களுக்கும், வாசனை திரவியங்களுக்கும் சந்தை உருவானது. ஒருவரை ஒருவர் கவர இதில் அதிக கவனம் செலுத்த தொடங்கினர்.

இப்போது உலகின் மிகப்பெரிய சந்தை மதிப்பை கொண்டுள்ளன இந்த அழகு சாதன சந்தை. அழகு பொருட்களையும், வாசனை திரவியங்களையும் ஆரம்ப காலத்தில் பெரிய பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இன்று எல்லோருக்கும் எளிதாகக் கிடைக்கிறது. நாம் கடந்து சென்றாலே ஒரு நறுமண வாசனை நம் மேல் வர வேண்டும் என்று நினைப்பவர்களும் உண்டு. அந்த அளவுக்கு வாசனை திரவியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். தனக்கென்று தனி மணம் கொண்ட வாசனைத் திரவிய சந்தை குறித்து மணம் வீசும் சில தகவல்கள்

``இந்தியாவின் மணக்கும் நகரம்’’ என்று அழைக்கப்படுவது உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கனோஜ் என்ற நகரம்தான். ஏனென்றால் உலகத்தரம் வாய்ந்த வாசனைத் திரவியங்கள் பெருமளவு இங்கு தயாரிக்கப்படுகின்றன. 600-க்கும் மேலான வாசனை திரவியங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் இங்கு உள்ளன.

இங்கு அதிகளவு தயாரிக்கப்படுவதற்கு காரணம் இருக்கிறது. கி.பி-600-ல் கனோஜை ஆண்ட ஹர்சவர்த்தன் என்ற அரசர் வாசனைத் திரவியங்கள் தயாரிப்பதை ஊக்குவித்தார். வெளிநாடுகளிலிருந்து மூலப்பொருட்களை வரவழைத்தார். வாசனைத் திரவியங்களை தயாரிப்பவர்களுக்கு சலுகைகளையும் வழங்கினார். தன்னை பார்க்க வருபவர்களுக்கு வாசனைத் திரவியங்களை பரிசாக அளித்துள்ளார்.

பண்டைய நாகரீகங்களான மெசபடோமியா, எகிப்து காலகட்டங்களிலேயே வாசனைத் திரவியங்களை வேறு வடிவங்களில் பயன்படுத்தியுள்ளனர்.

கி.மு. 1580 1085 ஆண்டுகளில் எகிப்தியர்கள் பண்டிகை காலங்களின் போது ஆண்கள், பெண்கள் இருவருமே வாசனை களிம்புகளை பயன்படுத்த ஆரம்பித்தனர். இது கிரீஸ், ரோம் மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது.

14 லூயி ஆட்சிக் காலத்தில் அவரது நீதிமன்றம் `வாசனைத் திரவிய நீதிமன்றம்’ என்றே அழைக்கப்பட்டது. உடம்பில் மட்டுமல்லாது ஆடைகள், மின் விசிறிகள், பர்னிச்சர் பொருட்களிலும் வாசனைத் திரவியங்களை தெளித்திருந்தனர்.

18-ம் நூற்றாண்டில் யூ டி கோலன் (eau de Cologne) மேம்படுத்தப்பட்டது. எலுமிச்சை, ரோஸ்மெரி, பர்க்மாட் ஆகியவை வாசனைத் திரவியத்தில் பயன்படுத்தப்பட்டது

17- வது நூற்றாண்டில்தான் இதன் வளர்ச்சி வேகமாக இருந்தது. 1656-களில் வாசனைத் திரவியங்களை தயாரிப்பவர்கள் உருவாக தொடங்கினர். பிரான்ஸ் மக்கள் வாசனைத் திரவியங்களை அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்தனர்.

1709-ம் ஆண்டு ஜியோவானி மரியா பரினா என்ற இத்தாலிய வாசனைத் திரவிய தயாரிப்பாளர் கோலன் என்ற மிக பழமையான நகரத்தில் யூ டி கோலன் (Eau De Colonge) என்ற வாசனைத் திரவியத்தை அறிமுகப்படுத்தினார். இதன் மணத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அன்றைய காலக்கட்டத்தில் மிகப்பெரிய பணக்காரர்கள் மட்டுமே இதை பயன்படுத்தி உள்ளார்கள்.

பிரான்ஸில் கிராஸ் (GRASS) என்ற நகரம் உள்ளது. இந் நகரம் உலகின் வாசனைத் திரவியங்களின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது.

செயற்கைப் பொருட்கள் இல்லாமல் இயற்கை பொருட்களை கொண்டு இப்பகுதியில் தயாரிக்கப்படுவது கூடுதல் சிறப்பு.

பிரான்ஸில் வாசனைத் திரவியங்களை வைத்து நிறைய நாவல்களும் திரைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட 600 தொழிற்சாலைகள் இங்கு உள்ளது. உலக அளவில் உற்பத்தியிலும் தரத்திலும் முதலிடத்தில் வகிக்கிறது.

இங்குள்ள மொத்த தொழிற்சாலைகளின் ஆண்டு பரிவர்த்தனை 6000 லட்சம் யூரோவிற்கு மேல் என்று சொல்கிறார்கள்.

மத்திய தரைக்கடல் ஒட்டிய பகுதி என்பதால் மல்லிகை போன்ற மலரை அதிகம் வளர்க்க முடிகின்றது. ரோஜா, லில்லி ஆகிய மலர்களை கொண்டும் இங்கு வாசனைத் திரவியங்களை தயாரித்து வருகிறார்கள்.

பொதுவாக நாம் வாசனை திரவியங்களை அதிக பணம் கொடுத்து வாங்குவதில்லை. ஆனால் சர்வதேச அளவில் பிரபலமான வாசனைத் திரவியங்களின் விலை நமக்கு வியப்பூட்டுகிறது.

கிராஃபிக்ஸ்: தே.ராஜவேல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x