Published : 27 Sep 2021 05:11 AM
Last Updated : 27 Sep 2021 05:11 AM

ஐடி துறையில் பெருகும் வேலைவாய்ப்பு!

கரோனா சூழல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பல்வேறு துறைகள் கடும் சரிவைச் சந்தித்தன. நாடு முழுவதும் பெரும் வேலையிழப்பு ஏற்பட்டது. நிறுவனங்கள் ஊதியக் குறைப்பை மேற்கொண்டன. ஆனால், தகவல் தொழில்நுட்பத் துறையின் நிலவரம் மட்டும் இதற்கு நேரெதிர் திசையில் இருந்தது. இந்த ஒன்றரை ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மிகப் பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளன. அந்நிறுவனங்களின் மூலம் அதிக வேலைவாய்ப்பு உருவாகிவந்தன; ஊழியர்களின் ஊதியமும் பல மடங்கு உயர்த்தப்பட்டன. இந்த வளர்ச்சி தற்போது இன்னும் வேகம் எடுத்திருக்கிறது.

கரோனா காலகட்டத்தில் பல்வேறு துறைகளும் டிஜிட்டலை நோக்கி முழுமையாக நகர்ந்தாக வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகின. அது ஐடி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. வீட்டிலிருந்து பணிபுரிதல், ஆன்லைன் கல்வி தொடங்கி சிறிய கடைகள் கூட ஆன்லைன் வர்த்தகத்தில் நுழைந்தது வரையில் இந்தக் கரோனா காலகட்டத்தில் டிஜிட்டலை நோக்கிய நகர்வு தீவிரமடைந்திருக்கிறது. இதனால், ஐடி பொறியியலாளர்களுக்கான தேவை மிகப் பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது. தற்போது, கிட்டத்தட்ட 400 சதவீதம் அளவில் ஐடி பொறியலாளர்களுக்கான தேவை அதிகரித்து இருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இது புதிதாக கல்லூரி முடித்துவரும் மென்பொருள் துறை மாணவர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

ஊரடங்கு காரணமாக சென்ற நிதி ஆண்டில் வேலைக்கு புதிதாக ஆள் எடுப்பதை பல ஐடி நிறுவனங்கள் நிறுத்தி வைத்திருந்தன. தற்போது முழுமூச்சுடன் புதிதாக ஆட்களை வேலைக்கு எடுத்துவருகின்றன. குறிப்பாக, புதிதாக கல்லூரி முடித்துவரும் மாணவர்களுக்கே ஐடி நிறுவனங்கள் முக்கியத்துவம் தருகின்றன. டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் பெண்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்குகின்றன.

சென்ற நிதி ஆண்டில் இந்திய ஐடி துறையில் 1.38 லட்சம் பேர் புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்டனர். ஆனால் இந்த ஆண்டு டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் ஆகிய நான்கு நிறுவனங்கள் மட்டுமே 1 லட்சம் அளவில் புதிதாக வேலைக்கு ஆட்கள் எடுக்கத் திட்டமிட்டுள்ளன. டிசிஎஸ் 40,000, இன்ஃபோசிஸ் 35,000, விப்ரோ 12,000, ஹெச்சிஎல் 22,000 அளவில் புதிதாக கல்லூரி முடித்துவரும் மாணவர்களை வேலைக்கு எடுக்க இலக்கு நிர்ணயித்து செயல்பட்டுவருகின்றன. இது தவிர, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், ஏனைய மென்பொருள் நிறுவனங்கள் இந்த நிதி ஆண்டில் 70,000 பேரை புதிதாக பணிக்கு எடுக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஐடி துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் ஹைதராபாத், புனே, பெங்களூரு ஆகிய நகரங்களிலே அதிகளவில் உருவாகின்றன.

வேலைவாய்ப்பு மட்டுமல்ல ஊதிய உயர்வும் ஐடி துறையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. கரோனா ஊரடங்கைத் தொடர்ந்து ஏனைய துறை சார்ந்த நிறுவனங்கள் ஊதியக் குறைப்பு மேற் கொண்டன. ஆனால், ஐடி துறையில் 70 -120 சதவீதம் வரையில் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.

இன்று இந்தியாவில் நடுத்தரக் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக மேம்பட்டதற்கு ஐடி துறைக்கு பெரும் பங்கு உண்டு. முதல் தலைமுறைப் பட்டதாரி இளைஞர்கள் ஐடி துறையில் வேலைக்கு நுழைந்து தங்கள் குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்டபடி உள்ளனர்.

எனினும், மென்பொருள் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி ஏனைய துறைகளில் நிகழாதது கவலைக்குரிய விஷயமே. கோவை கணபதி நகரில் ஒரு லேத் பட்டறையில் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை பார்த்து மாதம் 12,000 ரூபாய் சம்பாதிக்கும் இயந்திரவியல் பொறியியல் படித்த மாணவனுக்கு ஐடி துறையின் இந்த வளர்ச்சி என்னவாக இருக்கும்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x