Published : 22 Feb 2016 10:52 AM
Last Updated : 22 Feb 2016 10:52 AM
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. துன்பம் எப்போதும் ஒன்றாக வராதாம். அதாவது அது படை திரண்டு அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்குமாம். அதைப் போலத்தான் இப்போது ஜேஎஸ்பிஎல் (ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட்) நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் மின் நிலையத் துக்குத் தேவைப்படும் நிலக்கரியை வெட்டி எடுக்க முடியாமல் உச்ச நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதே போல இரும்புத் தாதுவை வெட்டி எடுக்க வேண்டிய சாரதா சுரங்கம் இப்போது சட்டச் சிக்கலில் உள்ளது. அனைத்துக் கும் மேலாக சர்வதேச அளவில் உருக்கின் விலை பனிக்கட்டிபோல உருகி வருவது இந்நிறுவனத்தின் கடன் சுமையை மேலும் அதிகரிக்கச் செய்துள் ளது. சரி, இதெல்லாம் பரவாயில்லை ஓரளவு சமாளித்துவிடலாம் என்றிருந்த இந்நிறுவனத்துக்கு கிரிசில் நிறுவனம் அளித்த தரச்சான்று பெரும் இடியாக இறங்கி, நிறுவனத்தின் பங்குகளை அதல பாதாளத்துக்குத் தள்ளிவிட்டது.
ஜிண்டால் நிறுவனம் ஓ.பி. ஜிண்டால் என்பவரால் 1969-ம் ஆண்டு உருவாக்கப் பட்டது. 2005-ம் ஆண்டு இவரது மறைவுக்குப் பிறகு தொழில் குழுமம் பிரிந்தது. இதில் நவீன் ஜிண்டால் வசம் ஜேஎஸ்பிஎல் நிறுவனம் வந்தது. இவரது மூத்த சகோதரர் வசம் ஜேஎஸ்டபிள்யூ குழுமம் சென்றது.
ஜேஎஸ்பிஎல் நிறுவனத்துக்கு ஆறு துணை நிறுவனங்கள் உள்ளன. ஜிண்டால் பவர் லிமிடெட் நிறுவனத்தின் சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்கரில் உள்ள ஆலை 1,000 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்கிறது. ஜேஎஸ்பிஎல் நிறுவனத்தில் நிறுவனர்களிடம் 60.41 சதவீத பங்குகளும், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் (எப்ஐஐ) முதலீடு 23.18 சதவீதமும், பொதுமக்களிடம் 7.81 சதவீதமும், நிதி நிறுவனங்கள், வங்கிகள், பரஸ்பர நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு நிறுவனங்களின் பங்கு 4.13 சதவீதமும், நிறுவனங்களின் பங்கு 4.47 சதவீதமும் உள்ளன.
கடந்த வாரம் ஜேஎஸ்பிஎல் நிறுவனத்தின் கடனைத் திரும்ப செலுத்தும் திறன் குறித்த மதிப்பீட்டை கிரிசில் தரச்சான்று நிறுவனம் வெகுவாக குறைத்துவிட்டது. ஜேஎஸ்பிஎல் கடனை திரும்ப செலுத்தும் திறனை BB+ என மதிப்பீடு செய்தது. இதற்கு முன் இது BBB+ என்ற நிலையில் இருந்தது.
BB+ என்ற குறியீடானது கடனை திருப்பித் தர இயலாத நிலைக்குத் தள்ளப்படலாம் என்பதைக் குறிப்ப தாகும். ஜேஎஸ்பிஎல் நிறுவனம் வெளி யிட்ட கடன் பத்திரங்கள் மூலம் திரட்டியுள்ள தொகை குறித்த மதிப்பீடு குறைந்ததால் இந்நிறுவன பங்குகள் இரண்டு நாளில் 7 சதவீத அளவுக்குச் சரிந்தன.
அதேசமயம் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள பரஸ்பர நிதி நிறு வனங்களான பிராங்ளின் டெம்பிள்டன் (ரூ.1,640 கோடி), ஐசிஐசிஐ புரூடென் ஷியல் (ரூ.492 கோடி) ரிலையன்ஸ் பரஸ்பர நிதி (ரூ.49 கோடி) ஆகிய நிறுவனங்கள் இந்த பிரச்சினையை மிகவும் கவலையுடன் உற்று நோக்கி வருகின்றன.
தொடர் நஷ்டம்
தொடர்ந்து நான்கு காலாண்டுகளாக ஜேஎஸ்பிஎல் நிறுவனம் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது. இதையடுத்து ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை 10 சதவீத அளவுக்குக் குறைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கடன் சுமையைக் குறைக்க முடிவு செய்துள்ளது. கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இதன் மூலம் ரூ.254 கோடியை நிறுவனம் சேமித்துள்ளதாகக் கூறுகிறது. நிறுவனத் தின் மொத்த கடன் ரூ.42,534 கோடியாகும்.
கடந்த சில ஆண்டுகளில் நிறுவனத்தின் உருக்கு உற்பத்தியைக் காட்டிலும் கடன் அளவு பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதனிடையே புதிதாக இந்நிறுவனம் ஏலத்தில் எடுத்த காரே பால்மா மற்றும் தாரா சுரங்கங்களிலிருந்து நிலக்கரி வெட்டி எடுப்பதற்கான அனுமதியையும் அரசு திரும்ப பெற்றுவிட்டது. மிகக் குறைந்த ஏலத் தொகைக்கு ஏலம் போனதால் திரும்பப் பெறுவதாக அரசு கூறிய காரணம் இந்நிறுவனத்துக்குப் பாதகமாக அமைந்துவிட்டது.
இதேபோல சில மாதங்களுக்கு முன்பு அம்டெக் ஆட்டோ, கடன் பத்திரங்கள் மூலம் திரட்டிய தொகையை திருப்பி தரமுடியாமல் தவித்தது. இதனால் ஜேபி மார்கன் மியூச்சுவல் பண்ட் நிறுவனம் கடும் நெருக்கடியை சந்தித்தது. அதிக முதலீட்டாளர்கள் பணத்தை எடுக்க விரும்பியதால், பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து செபி கடந்த வாரம் சில விதிமுறைகளை வெளியிட்டது. புதிய விதிமுறைகளின்படி ஒரு கடன் சார்ந்த மியூச்சுவல் பண்டில் உள்ள தொகையில் ஒரு நிறுவனத்தில் அதிகபட்சம் 10 சதவீதம் வரையும், ஒரு குழுமத்தில் அதிகபட்சம் 20 சதவீதமும், ஒரு துறையில் அதிகபட்சம் 25 சதவீதம் வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும் என்று அறிவித்திருக்கிறது.
முதலீட்டை திரும்ப பெற முடியும் என்றாலும், கடன் சார்ந்த பண்ட்களிலும் சிறிதளவு ரிஸ்க் உள்ளது என்பதை முதலீட்டாளர்கள் உணர வேண்டிய நேரம் இது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT