Published : 06 Sep 2021 04:20 AM
Last Updated : 06 Sep 2021 04:20 AM

பலன் அளிக்குமா தேசிய பணமாக்கல் திட்டம்?

மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய பணமாக்கல் திட்டம் தீவிர விவாதங்களை எழுப்பியுள்ளது. அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகளை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம் அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், சுரங்கங்கள், மின் உற்பத்தி, மின் விநியோகம், இயற்கை எரிவாயு குழாய், விளையாட்டு மைதானங்கள், ரியல் எஸ்டேட் என அரசு கட்டுப்பாட்டில் உள்ள சொத்துகள் தனியாருக்கு குத்தகைக்கு போகவுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டதும்,
‘நாடு விற்கப்படுகிறது’ என்று எதிர்கட்சிகளிடமிருந்தும், பொது மக்களிடமிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ‘நாட்டின் சொத்துகள் எதையும் நாங்கள் விற்கவில்லை. குறுகிய கால அளவிலான குத்தகைக்குதான் விடுகிறோம்.’ என்று மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது.

இந்தத் திட்டத்தை வரவேற்கும் தரப்புகளை அதிகம் பார்க்க முடிகிறது. “அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகளில் பல, எந்தவிதப் பயன்பாடும் இல்லாமல் உள்ளன. அங்கு புதிய மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு அவற்றை அரசே நிர்வகிக்கும் அளவுக்கு தற்போது அரசிடம் நிதி இல்லை. இந்நிலையில், அத்தகைய சொத்துகளில் தனியார் முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் அச்சொத்துகளைப் பயன்பாடுக்குக் கொண்டுவர முடியும். தவிர, குத்தகை மூலம் வரும் நிதியைப் பயன்படுத்தி புதிய வளர்ச்சித் திட்டங்களை அரசு மேற்கொள்ளும். ஒட்டுமொத்த அளவில் இத்திட்டம் மூலம் நாட்டின் பொருளாதாரச் செயல்பாடுகள் மிகப் பெரிய அளவில் அதிகரிக்கும். இனிவரும் காலங்களில் நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களில் தனியாரின் பங்களிப்பும் இருந்தால் மட்டுமே சிறப்பான மேம்பாட்டை விரைவாக சாத்தியப்படுத்த முடியும் என்ற சூழலுக்கு நாடு வந்துள்ளது. தற்போதைய திட்டம் அத்தகைய ஒன்றுதான்’’ என்பதே இத்திட்டத்தை ஆதரிப்பவர்களின் வாதமாக உள்ளது.

இத்திட்டத்தை எதிர்ப்பவர்களின் பிரதான அச்சம், மத்திய அரசு தனக்கு நெருக்கமானவர்களுக்கே குத்தகை உரிமையை வழங்கும் என்பதுதான். ஒட்டுமொத்த நாடே அதானி, அம்பானி கைகளுக்கு போய்விடும் என்ற கவலையை அவர்கள் முன்வைக்கிறார்கள். “அரசு தன்னுடைய சொத்தை குத்தகைக்கு விடுவதென்பது ஒரு சிக்கலான நடைமுறை. உதாரணத்துக்கு, ஒரு தனியார் நிறுவனம் அரசின் சொத்தை குத்தகைக்கு எடுத்து முதலீடு செய்து மேம்படுத்துகிறது என்றுவைத்துக்கொள்வோம். அந்தச் சொத்து வருமானம் ஈட்டித் தரும் சமயத்தில் குத்தகை ஆண்டு முடிகிறது என்றால், குத்தகை முடிந்துவிட்டது என்று கூறி அரசு அந்தச் சொத்தை திரும்ப வாங்கிவிடுமா அல்லது குத்தகை ஆண்டை நீட்டிக்குமா? குத்தகை ஆண்டு ஒரே நிறுவனத்துக்கே தொடர்ந்து நீட்டிக்கப்படும் என்றால், அது ஒரு சாராருக்கே சொத்துக்கான உரிமையைக் கொடுப்பது போன்றதுதான்.

இதுதொடர்பாக தெளிவான வரையறையை மத்திய அரசு அளிக்கவில்லை. இத்தகைய திட்டத்தில் பெருமுதலீட்டாளர்களுக்கு மட்டுமே வாய்ப்புக் கிடைக்கும். அந்தவகையில் அரசின் சொத்துகள் குறிப்பிட்ட நபர்களின் கைகளுக்குச் சென்றுவிடும் அபாயம் இருக்கிறது. மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அதானி, அம்பானி அடைந்த வளர்ச்சியை நாம் பார்த்திருக்கிறோம். தற்போது இத்திட்டத்தின் மூலம் நாட்டின் சொத்துகளை அவர்களுக்கு தாரைவார்க்க மத்திய அரசு முயற்சிக்கிறது” என்ற விமர்சனங்களை இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் முன்வைக்கின்றனர். அனைத்துக்கும் மேலாக, இந்தத் திட்டம் குறித்து அனைத்து தரப்புகளிடையும் மத்திய அரசு முறையாக கலந்தாலோசிக்கவில்லை. தன்னிச்சையாக இந்த முடிவுகளை எடுத்திருக்கிறது என்பது முக்கியக் குற்றச்சாட்டாக உள்ளது.

இத்திட்டத்தை எதிர்ப்பவர்களில் பெரும்பாலானோர் இத்திட்டத்தை மோசமான திட்டம் என்றோ, தவறான திட்டம் என்றோ கூறவில்லை. மாறாக, இந்தத் திட்டம் சார்ந்து மத்திய அரசின் அணுகுமுறையையும், அதன் உள்நோக்கத்தையும்தான் கேள்விக்கு உட்படுத்துகிறார்கள். அந்தவகையில், மத்திய அரசு எதிர்தரப்பினர்களின் விமர்சனங்களைக் கணக்கில் கொண்டு நியாயமான முறையில் இத்திட்டத்தை செயல்படுத்தினால், அதுநல்லதொரு பலனை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

முகம்மது ரியாஸ்
riyas.ma@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x