Published : 15 Feb 2016 11:36 AM
Last Updated : 15 Feb 2016 11:36 AM
‘இரயில் பயணத்தின் பொழுது நீங்கள் அருகிலிருப்பவரின் செய்தித் தாளை வாங்கிப் படிப்பீர்களா, மாட்டீர்களா?’ ஒரு பெரிய நிறுவனத்தின் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி இது. இக்கேள்விக்கு சரியான பதில் இதுதான் என்று சொல்ல முடியுமா? இந்த மாதிரிக் கேள்விகள் கேட்கப்படுவது ஒருவரது கொள்கை கோட்பாடுகளை, குணத்தைத் தெரிந்து கொள்வதற்காகத்தானே! வேலைக்கு ஆள் தேர்வு செய்யும்பொழுது ஒருவரது அறிவு, ஆற்றல், படிப்பு, மதிப்பெண்கள், அனுபவம் முதலியவற்றை வைத்துத் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் எந்த ஒரு வேலைக்கும் முக்கியமானது நேர்மையும் நம்பகத்தன்மையும் அல்லவா?
ஓலா நிறுவனத்தில் ஓட்டுநராக வேண்டுமெனில் அவர்மேல் காவல் துறையில் ஏதேனும் புகார்கள் உள்ளதா என்று விசாரிப்பார்களாம்! மென்பொருள் துறையிலோ விண்ணப்பத்தில் சொல்லியதெல்லாம் சரியா என்று ஒவ்வொன்றாய் சரிபார்ப்பார்களாம். முந்தைய வேலையை ஏன் விட்டீர்கள் என்று அந்த நிறுவனத்திடமே கேட்டும் விடுவார்களாம்! பன்னாட்டு நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு 7சுற்று தேர்வு கூட உண்டு.
‘அதிகாரம் ஒருவனைக் கெடுக்கும், முழு அதிகாரம் முழுவதுமாகக் கெடுத்துவிடும்’ என்றார் லார்டு ஆக்டன். எனவே உயர்பதவிகளில் அமர்த்தப்படுவர்கள் அப்பழுக்கற்ற நேர்மையானவர்களாக இருக்க வேண்டும். இதனால் தேர்வின் இறுதிச்சுற்றுகளில் ஒருவரது நியாயம், நீதி குறித்த அணுகுமுறை ஆராயப்படும். ‘உங்களிடம் வேலை செய்பவர் பலகாலமாக நிதி மோசடி செய்வது திடீரென ஒரு நாள் உங்களுக்குத் தெரியவருகிறது. வெளியில் சொன்னால் உங்களுக்குத்தான் கெட்ட பெயர். உங்களையும் நிறுவனத்தையும் எப்படிப் பாதுகாப்பீர்கள்?’ என்கிற ரீதியில் கேள்விகள் அமையும்.
‘எல்லோருக்கும் ஒரு விலை உண்டு. பலருக்குப் பணம். சிலருக்கோ பதவி, புகழ் வேறு சிலருக்கோ மதுவும், மாதுவும்!’ என்பார்கள். பில்கிளின்டனோ, பனீஷ் மூர்த்தியோ உங்கள் ஞாபகத்திற்கு வந்தால், அதற்கு நானா பொறுப்பு? ஐயா, எதற்கும் விலை போகாமல் நீதியின் பால், நேர்மையின் பால் நிற்போர்தானே நிறுவனத்தைக் காக்க முடியும்?அது சரி, ‘இந்நிறுவனத்திற்காக நான் உயிரையும் கொடுப்பேன்’ என்று சொல்பவர்களையும் பார்த்து இருப்பீர்கள்.
அதாவது தனக்கு என்ன கஷ்ட நஷ்டம் வந்தாலும் நிறுவனத்தின் நலனை அவர் விட்டுக் கொடுக்கமாட்டேன் என்கிறார். ஆனால் உண்மையிலேயே உயிரை விட வேண்டிய வேலைகளும் உண்டு! சமீபத்தில் சியாச்சினில் நாட்டுக்காக உயிரைக் கொடுத்த நம்ம மதராஸ் ரெஜிமெண்ட் வீரர்களை நினைத்துப் பாருங்கள். 20,000 அடி உயரத்தில், மைனஸ் 50 டிகிரி உறை குளிரில் ஓர் போர்க்களம்! எதிர்பாராமல் தாக்கக்கூடிய பாகிஸ்தான், பனிப்புயல் என இரு பெரும் ஏமாற்றும் எதிரிகள்!! உயிருக்கு பயந்தவர்களுக்கு அங்கென்ன வேலை?
ஒருவனை வேலையில் அமர்த்தும் முன் அவனது அறம் குறித்த கோட்பாடுகளையும், அவன் பணத்திற்கோ மற்ற சிற்றின்பங்களுக்கோ மயங்கி தவறு செய்பவனா என்றும், தேவைப்பட்டால் உயிரையும் கொடுக்க அஞ்சாதவனா என்பதையும் ஆராய வேண்டுமென்கிறார் ஐய்யன் வள்ளுவர்!
அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும் (குறள் 501)
- somaiah.veerappan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT