Last Updated : 30 Aug, 2021 05:03 AM

27  

Published : 30 Aug 2021 05:03 AM
Last Updated : 30 Aug 2021 05:03 AM

இந்தியப் பொருளாதாரத்துக்கு நெருக்கடி ஏற்படுத்துமா ஆப்கன்?

உலகின் ஏதாவது ஒரு மூலையில் நிகழும் சிறு சம்பவங்களும் பிற நாடுகளை ஏதாவது ஒரு வகையில் பாதிக்கும். உலகமயமாக்கலின் தன்மை அதுதான். இப்போது இந்தியாவை வெகுவாக பாதித்துள்ள விஷயம் ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்துவரும் அரசியல் மாற்றம்.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினரின் கடைசி விமானம் காபூலிலிருந்து கிளம்பிய அடுத்த விநாடியே தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் ஆப்கன் சென்றுவிட்டது. அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்துள்ளனர் தலிபான்கள். இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்தும் இப்போது ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்துவரும் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தக தொகை 100 கோடி டாலராகும்.

இப்போது ஆப்கனில் நிகழ்ந்த அதிரடி அரசியல் மாற்றம் இந்தியாவின் வர்த்தகத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுடனான வர்த்தக உறவை நிறுத்தி வைப்பதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். இதன் விளைவாக இந்தியாவில் உலர் பழங்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. இந்தியாவின் மொத்த உலர் பழ நுகர்வில் 85 சதவீதம் ஆப்கனிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 55 கோடி டாலர் மதிப்பிலான 38 ஆயிரம் டன் உலர் பழங்கள் ஆப்கனிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது இவை அனைத்துமே நிறுத்தப்பட்டுள்ளன.

குழப்பத்தில் டர்பன் வர்த்தகர்கள்

மேற்கு வங்க மாநிலத்தில் பங்குரா மாவட்டத்தில் உள்ள சோனாமுகி கிராமத்தைச்சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஆப்கனில் நிகழ்ந்து வரும் மாற்றங்களை கவலை தோய்ந்தமுகத்துடன் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழிலே டர்பன் (தலைப்பாகை) தயாரிப்பதுதான். இங்கிருந்துதான் பெருமளவு டர்பன் ஆப்கனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது இவர்களது வர்த்தகமும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் சர்க்கரை, மருந்துப்பொருள், ஜவுளி, தேயிலை, காபி, நறுமணப்பொருள்கள் உள்ளிட்டவையும் தடைப்பட்டுள்ளன.

இந்திய அரசின் முதலீடு

ஆப்கானிஸ்தானை சீரமைப்பதில் மிக அதிக அளவிலான முதலீடுகளை மத்திய அரசு செய்துள்ளது. இதில் ராஜீய ரீதியிலான உதவிகளும் அதிகம். 218 கி.மீ. நீள ஜராஞ்-தெலராம் நெடுஞ்சாலையை எல்லை சாலை அமைப்பு நிறுவனம் (பிஆர்ஓ) 15 கோடி டாலர் செலவில் நிறைவேற்றியது. அதேபோல ஆப்கானிஸ்தானின் நாடாளுமன்ற கட்டடம் 9கோடி டாலர் செலவில் கட்டப்பட்டு 2015-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானை நட்பு நாடாக அறிவித்து அங்கு ஆப்கன்- இந்தியா நட்பு அணைக் கட்டையும் இந்திய அரசு கட்டித் தந்துள்ளது.

பல மருத்துவமனைகள் புதுப்பிக்கப்பட்டு அங்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகளையும் அரசு செய்து தந்துள்ளது. அத்துடன் 400 பஸ் மற்றும் 200மினி பஸ்களை நன்கொடையாகவும் அளித்துள்ளது. துப்புரவு பணிக்கு 105 வாகனங்களையும் அளித்துள்ளது. ஆப்கன் ராணுவத்துக்கு 285 வாகனங்களையும், ஹெலிகாப்டர் மற்றும் விமானம் ஒன்றையும் இந்தியா வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசு 300 கோடி டாலர் மதிப்பிலான முதலீடுகளை ஆப்கனில் மேற்கொண்டுள்ளது. 400 கட்டுமான திட்டப் பணிகள் அனைத்து மாகாணங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடருமா என்பது இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.

யார் இந்த தலிபான்கள்?

1994-ம் ஆண்டு முல்லா முகமது ஒமர் என்பவரால் உருவாக்கப்பட்டதுதான் இந்த இயக்கம். ஆப்கானிஸ்தானில் இஸ்லாத்தின் தூதுவர்கள் என தங்களை பிரகடனப்படுத்திக் கொண்டு உருவான இந்த இயக்கத்தில் ஆரம்பத்தில் அதிக அளவில் மாணவர்கள் (தலிப்) இடம்பெற்றிருந்தனர். ஆப்கனின் தெற்கு பகுதியான புஷ்டுன் பகுதியில் உருவான இந்த இயக்கம். 1994-ம் ஆண்டு கந்தஹார் பகுதியில் 50 தொண்டர்களுடன் ஊழல் நிறைந்த அரசுக்கு எதிராக போராட்டத்தைத் தொடங்கினார். 1996-ல் ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அளவுக்கு வலிமை பெற்ற இயக்கமாக இது உருவெடுத்தது. இதனால் இஸ்லாத்தின் ஷரியத் சட்டங்களை கடுமையாக அமல்படுத்துவதை தங்களது பிரதான நோக்கமாக செயல்படுத்தினர். முதல் கட்டமாக டெலிவிஷன் மற்றும் இசை உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. மாணவிகள் பள்ளிக்குச் செல்வதற்கு தடை விதித்தனர்.

புர்க்கா அணியாமல் பெண்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்பதை கட்டாயமாக்கினர். இதை மீறும் பெண்களை பொது அரங்கில் சவுக்கால் அடிப்பது மற்றும் இரக்கமின்றி தூக்கிலிட்டனர். நியூயார்க் நகரின் இரட்டைக் கோபுர தாக்குதல் நடத்த ஒசாமா பின் லேடன் திட்டமிடுவதற்கு புகலிடம் அளித்ததும் தலிபான் இயக்கம்தான்.

பின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மறுத்ததால் அமெரிக்க படைகள் ஆப்கனை முற்றுகையிட்டு முல்லா ஒமர் அரசை பதவியிலிருந்து நீக்கியது. முல்லா ஒமர் மற்றும் பிற தலிபான் தலைவர்கள் பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்தனர்.

2020-ம் ஆண்டு அமெரிக்க அரசு தலிபான் இயக்கத்துடன் ஒப்பந்தம் செய்தது. அதன்படி 14 மாதங்களில் அமெரிக்க படைகள் ஆப்கனிலிருந்து வெளியேறும் என்பதுதான் அது. இதன்படி அமெரிக்க படைகள் வெளியேறியதும் ஆப்கனை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டனர் தலிபான் இயக்கத்தினர்.

தலிபான்கள் இயக்கம் வலுவாக உருவாக அவர்களுக்கு நிதி உதவி பல்வேறு விதங்களில் கிடைத்து வருகிறது. இயக்கத்தினருக்கு தேவையான உணவு, நிதி உள்ளிட்டவை எப்படி தொடர்ந்து கிடைக்கிறது என்பது ஆச்சரியமான விஷயமாக இருக்கும். இஸ்லாம் பழமைவாதிகளாக இருந்தாலும் ட்விட்டர், ஃபேஸ்புக், டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தவும் அவர்கள் தவறவில்லை. தலிபான்களின் நிதி ஆதாரம் குறித்து ஆய்வு செய்த ஒரு தன்னார்வ அமைப்பு அவர்களின் நிதி ஆதார வழிகளை பட்டியலிட்டுள்ளது.

சர்வதேச அளவில் ஓபியம் எனப்படும் போதைப்பொருள் உற்பத்தியில் 84 சதவீதம் ஆப்கனில் விளைவிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 41 கோடி டாலர் வருமானம் தலிபான்களுக்குக் கிடைக்கிறது. இங்குள்ள சுரங்கங்களில் கிடைக்கும் தனிமங்கள் மூலம் 43 கோடி டாலர் வருமானம் கிடைக்கிறது. உருக்கு தாது, தாமிரம், தங்கம், துத்தநாகம் உள்ளிட்டவை இவர்களது கட்டுப்பாட்டில் உள்ள சுரங்கங்களிலிருந்து கிடைக்கிறது. மக்கள் மீதான வரி விதிப்பு மூலம் 16 கோடி டாலர் வருமானம் கிடைக்கிறது. இது தவிர 24 கோடி டாலரை இவர்கள் நன்கொடையாகப் பெற்றுள்ளனர். இதனாலேயே இவர்களது இயக்கும் தொடர்ந்து உயிர்ப்புடனும், போராட்ட குணத்துடனும் விளங்கி வருவது கண்கூடு..

ஆப்கனின் புதிய உறவுகள்

ஆப்கனில் இப்போது அமெரிக்காவின் தலையீடு இல்லாதது சர்வதேச அரசியலில் சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இதில் கூடுதலாக சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவின் தலையீட்டைக் குறைப்பதில் கூடுதல் கவனம் செலுத்தும் என்பது தெளிவு.

ஆப்கனிலிருந்து படைகள் வாபஸ் பெறப்படும் என்று 2014-ம் ஆண்டிலேயே அமெரிக்கா அறிவித்துவிட்டது. அப்போதிலிருந்தே இந்தியா ஆப்கனில் மேற்கொண்டிருந்த வர்த்தக உறவுகளை படிப்படியாக குறைத்துக் கொண்டிருக்கலாம். அல்லது மாற்று வழிகளை ஆராய்ந்திருக்கலாம். அமெரிக்கப் படைகள் வாபஸானாலும் அங்கு ஸ்திரமான அரசு அமையும் என்று தவறாக கணித்துவிட்டது இந்திய அரசு.

அங்கு ஆட்சியைப் பிடித்துள்ள தலிபான்களுடன் பெரும்பாலான நாடுகள் பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டன. அமெரிக்காவே தலிபான்களை அங்கீகரித்து பேச்சு நடத்த முன்வந்துள்ளனர். ஆனால் இந்திய அரசு தரப்பில் இதுவரையில் எத்தகைய முடிவும் எடுக்கப்படவில்லை. அப்படியே பேசினாலும் அது எந்த அளவுக்கு நன்மை அளிப்பதாக இருக்கும் என்றும் சொல்ல முடியாது.

அமெரிக்காவின் தோல்வி

தங்கள் நாட்டிற்கு எதிரான இயக்கம் எங்கேயும் முளைத்துவிடக்கூடாது என்பதில் உறுதியுடனும் தெளிவாகவும் இருந்த அமெரிக்க அரசு, ஆப்கனில் அமைதியை நிலைநாட்ட வேண்டும், ஸ்திரமான அரசியல் சூழலை உருவாக்க வேண்டும் என்ற நடவடிக்கையில் அக்கறை காட்டவில்லை என்பதையே20 ஆண்டுக்கால ஆப்கனில் அமெரிக்க படையின் செயல்பாடு உணர்த்துகிறது.

50 ஆண்டுகளுக்கு முன்பு வியட்நாமிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியபோது ஏற்பட்ட அதே சூழல் தற்போது ஆப்கனிலும் உருவாகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கனில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா 2 லட்சம் கோடி டாலரை செலவிட்
டுள்ளதோடு ஆயிரக்கணக்கான வீரர்களையும் பலி கொடுத்துள்ளது. ஏறக்குறைய 20 ஆண்டுகளாக அமைதியை நிலைநாட்டிவந்த ஒரு ராணுவம், வெகு சில மணி நேரங்களில் தனி ஒரு இயக்கத்திடம் விட்டுவிட்டு அந்நாட்டிலிருந்து வெளியேறியது உத்திகளை வகுப்பதில் அமெரிக்கா தீவிரம் காட்டவில்லை என்பதையே உணர்த்துகிறது.

இந்தியாவுக்கு நெருக்கடி

ராஜீய ரீதியில் ஆப்கனில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருப்பது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாகத்தான் உள்ளது. தோஹாவில் நடைபெற்ற மாநாட்டில் இந்தியா அழைக்கப்படவில்லை. அதேசமயம் அதில் அமெரிக்கா பங்கேற்றது. அதேபோல ரஷ்யா ஏற்பாடு செய்த மாநாட்டிலும் இந்தியா புறக்கணிக்கப்பட்டது. சமீப காலமாக இந்தியா அமெரிக்காவுடன் நெருக்கமாக இருப்பதால் இக்கூட்டத்தில் பங்கேற்க இந்தியாவுக்கு ரஷியா அழைப்பு விடுக்கவில்லை.

தலிபான்களுடன் பேச்சு நடத்தத் தயார் என சீனா தெரிவித்துள்ளதும் இந்தியாவுக்கு பின்னடைவே. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பெல்ட் அன்ட் ரோட் திட்டத்தை மத்திய ஆசியா பகுதியில் செயல்படுத்துவதை சீனா தீவிரப்படுத்தும். பாகிஸ்தானை புறக்கணித்துவிட்டு ஈரானில் சப்பார் துறைமுகம் உருவாக்கத்தில் கணிசமான முதலீட்டை இந்தியா மேற்கொண்டுள்ளது. இதை எந்த அளவுக்கு தலிபான்கள் அனுமதிப்பர் என்பதும் கேள்விக்குறியே.

தலிபான்களுடன் பேச்சு நடத்த மூன்றாம் நபரை ஈரான் நியமித்துவிட்டது. சீனாவுடன் நட்புக் கரம் நீட்ட தலிபான்கள் தயாராகிவிட்டனர். பாகிஸ்தான் வழக்கம்போல இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

தீவிரவாத அச்சுறுத்தல்

இதுநாள்வரை அடங்கியிருந்த அல் கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகள் ஆப்கனில் தலிபான்கள் ஆதரவோடு மீண்டும் செயல்படத் தொடங்கும். இது இந்தியாவுக்கு மிகப் பெரும் தீவிரவாத அச்சுறுத்தலாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதேபோல இந்தியாவுக்கு எதிரான போக்கு கொண்ட லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது ஆகிய இயக்கங்களும் தங்களது தளத்தை ஆப்கனுக்கு மாற்றிக் கொண்டு தீவிரவாத நடவடிக்கைகளில் முழு வீச்சில் செயல்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தெற்காசிய பிராந்தியத்தில் ஜிஹாத் இயக்கம் பரவ ஆப்கனில் தலிபான்களின் எழுச்சி உதவியாக அமையும். இது இப்பிராந்தியத்தில் அமைதியற்ற சூழலையும், பதற்றத்தையும் உருவாக்கும்.

தற்போது ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் அரசியல் நிலைப்பாடு மட்டுமே ஆப்கன் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக அமையும் என்பது மட்டும் தெளிவு.

-எம்.ரமேஷ்
ramesh.m@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x