Published : 23 Aug 2021 06:05 AM
Last Updated : 23 Aug 2021 06:05 AM

மீள்கிறதா வாகனத் துறை?

வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு 2021-ம் ஆண்டு பெரும் நம்பிக்கை அளிக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் இவ்வாண்டில்தான் அதிக அளவில் இந்தியாவிலிருந்து வாகனங்கள் வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன.

கடந்த மூன்று வருடங்களாக வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுவந்தன. பல நிறுவனங்கள் அதன் உற்பத்தி ஆலைகளை சில மாதங்களுக்கு மூடிப்போட்டன. கரோனா பரவலைத் தொடர்ந்து நிலைமை இன்னும் மோசமாகியது. 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு வாகனத் தயாரிப்பு நிறுவனங்களை பாதாளத்துக்குத் தள்ளியது. எப்போதுமீள்வோம் என்று வாகனத் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர். இந்தச் சூழலில் 2021-ம் ஆண்டு அவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 14 லட்சம் வாகனங்கள் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. இவற்றில் இரு சக்கர வாகனங்களின் பங்குதான் அதிகம். கிட்டத்தட்ட 11 லட்சம் இரு சக்கர வாகனங்
கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. சென்ற நிதி ஆண்டில் முதல் காலாண்டில் ஏற்றுமதி செய்
யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையைவிட இது மூன்று மடங்கு அதிகம்.

சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் மட்டுமல்ல, கடந்த மூன்று ஆண்டுகளில் நடப்பு ஆண்டில்தான் இரு சக்கர வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. இருசக்கர வாகன ஏற்றுமதியில் பஜாஜ் ஆட்டோ, டிவிஎஸ் மோட்டார்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் முன்னணி வகிக்கின்றன. இந்தியாவின் மொத்த இருசக்கர வாகன ஏற்றுமதியில் இவ்விரு நிறுவனங்களின் பங்கு மட்டும் 78 சதவீதம்.

ஒட்டுமொத்தமாக, 2021-ம் ஆண்டில் முதல் பாதியில் ரூ.1.7 லட்சம் கோடி மதிப்பிலான வாகனங்கள் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. கடைசியாக 2014-ம் ஆண்டு முதல் பாதியில்தான் இந்த அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்தியாவிலிருந்து வாகனங்கள் அதிக அளவில் அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அமெரிக்காவைத் தொடர்ந்து மேற்காசிய நாடுகள், லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து வாகனங்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

வாகனங்கள் மட்டுமல்ல வாகன உதிரி பாகங்களின் ஏற்றுமதியும் நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதியில் பெரும் எண்ணிக்கையில் அதிகரித்து இருக்கிறது. வாகன உதிரி பாகங்கள் ஏற்றுமதி சென்ற ஆண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு முதல் பாதியில் 43.6 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கிட்டத்தட்ட ரூ.86,000 கோடி மதிப்பில் உதிரி பாகங்கள் ஏற்றுமதியாகியுள்ளன.
தற்போதையை நிலையில் 70 சதவீத உதிரிபாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. 30 சதவீதம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக மின்னணுஉதிரிபாகங்கள். வாகன உதிரிபாகங்களை 100 சதவீதம் உள்நாட்டிலே தயாரிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. ஆனால், இந்தியா மின்னனு உதிரிபாகங்களுக்கு சீனாவை பெருமளவில் நம்பியுள்ளது. செமி கண்டக்டர் தயாரிப்புக்கான கட்டமைப்பு இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டால் மட்டுமே உதிரிபாகங்களை 100 சதவீம் இந்தியாவிலே தயாரிக்க முடியும். ஆனால், செமி கண்டக்டர் தயாரிப்பை இந்தியாவில் அதிகரிப்பது தற்போதைய நிலையில் சாத்தியமில்லாத சூழல் உள்ளது.

இன்னொரு விசயத்தையும் நாம் இங்கு கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. வாகன ஏற்றுமதி அதிகரித்த அளவுக்கு இந்தியாவில் உள்நாட்டு விற்பனை அதிகரிக்கவில்லை. இந்தியாவில் இரண்டாவது கரோனா அலை தீவிரம் அடைந்ததையொட்டி கொண்டுவரப்பட்ட ஊரடங்குக் கட்டுப்பாடு, உள்நாட்டு விற்பனையைபாதித்து இருக்கிறது. வாகன நிறுவனங்களின் உள்நாட்டு விற்பனை குறைவதானது ஒரு நாடு பொருளாதார ரீதியாக தடுமாற்றத்தில் இருப்பதற்கான அறிகுறியாக சொல்லப்படுவதுண்டு. அந்த வகையில், இந்தியாவின் உள்நாட்டு விற்பனை மேம்படாமல் இருப்பதானது இந்தியாவின் பொருளாதார நெருக்கடியை வெளிக்காட்டக்கூடியதாக இருக்கிறது.

அதேபோல் இந்தியாவின் வாகன ஏற்றுமதி முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில்தான்அதிகமாக உள்ளது. ஆனால், ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா, கனடா, தென்கொரியா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் சராசரி ஏற்றுமதி குறைவாகவே இருக்கிறது. வாகனத் தயாரிப்புத் துறையில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது. வாகன உதிரிபாகங்கள் ஏற்றுமதி இவ்வாண்டு அதிகரித்து இருந்தாலும், சர்வதேச அளவில் உதிரி பாகங்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு வெறும் 1.5 சதவீதம்தான். அந்த வகையில் உலகளாவிய சந்தையுடன் ஒப்பிடுகையில் இந்தியா முன்னேற வேண்டிய தொலைவு இன்னும் அதிகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x