Published : 16 Aug 2021 06:46 AM
Last Updated : 16 Aug 2021 06:46 AM
“கரோனா காரணமாக கடந்த ஓன்றரை ஆண்டுகளாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுக்கிடக்கின்றன. வகுப்புப் பாடங்கள் இணைய வழியே நடத்தப்படுகின்றன. பள்ளி, கல்லூரி படிப்பு என்பது பாடங்களை மட்டும் தெரிந்துகொள்வதற்கானது அல்ல, மற்றவர்களுடன் பழகுதல், சமூகத்தைப் புரிந்துகொள்ளல் போன்ற அனுபவங்களையும் உள்ளடக்கியது. அந்தவகையில் கடந்த ஒன்றரை ஆண்டுகாலத்தில் பள்ளி, கல்லூரி வழியிலான அனுபவத்தை மாணவர்கள் இழந்துள்ளனர். அப்படியென்றால், லட்சக்கணக்கில் பணம் செலவழித்து வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களின் நிலைமை? அவர்களுக்கும் இணைய வழியில்தான் வகுப்புகள் என்றால், வெளிநாடு சென்று படிப்பதற்கு என்ன அர்த்தம் இருக்கிறது?” என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கலாம். இந்தத் தர்க்கத்தின் அடிப்படையில், இனி வரும் காலங்களில் இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும் பலரும் கூறினர். ஆனால், சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று நமக்கு வேறொரு உண்மையைச் சொல்கிறது.
முந்தைய ஆண்டுகளைவிட இவ்வாண்டுதான் படிப்புக்காக வெளிநாடு செல்ல மாணவர்கள் அதிக எண்னிக்கையில் ஆர்வம் காட்டிவருவதாக Leverage edu என்ற நிறுவனம் எடுத்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டைவிட இவ்வாண்டு 94 சதவீதம் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று படிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
கரோனா பரவல் இன்னும் முழுமையாக ஓய்ந்திராத நிலையில், எப்போது வேண்டுமானாலும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படலாம் என்ற நிலையில், உலகத் தரத்திலான கல்வியை தற்போது இணையம் வழியே இருந்த இடத்திலிருந்தே கற்றுக்கொள்ளலாம் என்ற நிலையில் ஏன் முந்தைய ஆண்டுகளைவிடவும் இவ்வாண்டு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்க ஆர்வம் காட்டுகின்றனர்?
முதல் காரணம். கரோனா இரண்டாம் அலையில் இந்தியாவில் உயிரிழப்பு அதிகம் இருந்தது. மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமல், ஆக்ஸிஜன் சிலிண்டர் கிடைக்காமல் பலர் உயிரிழந்தனர். நாட்டின் சூழல் போர்க் காலம் போல் மாறியது. இந்தியாவின் மோசமான சுகாதாரக் கட்டமைப்புக் காரணமாக, வசதி படைத்தோர் தங்கள் பிள்ளைகளை வெளிநாடு
அனுப்பி படிக்க வைக்க விரும்புவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இரண்டாவது காரணம். தற்போது பிரிட்டன், கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க கல்வி விசா தொடர்பான நடைமுறையை எளிதாக்கி வருகின்றன. இதனால், வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு எளிதாகியுள்ளது.
மூன்றாவது காரணம். இந்தியாவின் வாழ்வியல் முறை, சுற்றுச்சூழல் மாசுபாடு மிக மோசமான நிலைக்குச் சென்று
கொண்டிருக்கிறது. இவற்றிலிருந்து விடுபட்டுச் செல்வதற்கான முதல்படியாக பலர் வெளிநாட்டில் சென்று படிப்பதை தேர்வு செய்கின்றனர்.
நான்காவது காரணம். உலகத் தரம் வாய்ந்த தரமான கல்வி, உலகாளாவிய மக்களுடன் பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளுதல் ஆகியவற்றை வெளிநாட்டுப் பல்கலைக்கழங்கள் சாத்தியப்படுத்துகின்றன.
ஐந்தாவது காரணம். இந்தியாவை விடவும் வெளிநாட்டில் ஊதியம் அதிகம். இந்தியாவில் ஒருவர் ஒரு வேலைக்கு மாதம் 1 லட்சம் ரூபாய் ஊதியம் பெறுகிறார் என்றால், அதே வேலைக்கு வெளிநாட்டில் மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகம் ஊதியம் பெற முடியும். வெளிநாடுகளில் சென்று படிப்பதன் வழியாக அந்நாடுகளில் எளிதில் வேலைவாய்ப்பு பெற முடியும் என்ற காரணத்தினால் அதிக எண்ணிக்கையில் இந்திய மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்க விரும்புகின்றனர்.
முந்தைய ஆண்டுகளில் ஊதியம், வாழ்வியல் முறை, தரமான கல்வி இவற்றுக்காக வெளிநாடு செல்வதே மாணவர்களின், அவர்களின் பெற்றோரின் முதன்மைக் காரணங்களாக இருந்தன. இவ்வாண்டு அந்த காரணம், சுகாதாரக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டதாக மாறியிருக்கிறது.
அதேபோல், மாணவர்கள் சென்று படிக்க விரும்பும் நாடுகளின் வரிசையும் மாறியிருக்கிறது. முந்தைய ஆண்டுகளில் அமெரிக்காதான் பெரும்பாலான மாணவர்களின் விருப்பத்துக்குரிய நாடாக இருந்தது. ஆனால், படிப்புச் செலவு, விசா தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் காரணமாக அமெரிக்காவுக்குப் பதிலாக மற்ற நாடுகளை மாணவர்கள் தேர்தெடுக்கின்றனர். Leverage edu நிறுவனத்தின் ஆய்வில், 75 சதவீத மாணவர்கள் தாங்கள் படிக்க விரும்பும் நாடாக பிரிட்டனைக் கூறுகின்றனர். 9 சதவீத மாணவர்களே தாங்கள் சென்று படிக்க விரும்பும் நாடாக அமெரிக்காவைக் கூறுகின்றனர். 2018ல் மூன்றில் ஒரு மாணவர் அமெரிக்காவை தங்கள் விருப்பத்துக்குரிய நாடாக தேர்வு செய்த நிலையில், தற்போது பிரிட்டனைத் தேர்வு செய்வதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் பிரிட்டனில் கல்விச் செலவும் குறைவு; கல்வி ஆண்டும் குறைவு. இரண்டு, கல்வி முடித்து வேலை தேடுவதற்காக கூடுதலாக இரண்டு ஆண்டுகள் அங்கு தங்கிக்கொள்ள பிரிட்டன் அனுமதி தருகிறது. சென்ற மாதம் முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால், அமெரிக்காவில் படிப்பு முடிந்து இரண்டு மாதங்கள் மட்டுமே தங்க முடியும். பெரும்பாலான மாணவர்கள் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புப் பெறுவதை நோக்கமாகக்கொண்டு அங்கு சென்று படிக்கின்றனர். எனில், படிப்பு முடிந்து வேலை கிடைக்கும் வரையில் அவர்கள் அந்நாட்டில் தங்கிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டால் மட்டும்தான் நிதானமாக வேலை தேடிப் பெற முடியும். இந்தக் காரணங்களால், சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு பிரிட்டன் சென்று படிப்பதற்கான விண்ணப்பம் 30 சதவீதம் அளவில் அதிகரித்து இருக்கிறது.
பாடப்பிரிவுகளை எடுத்துக்கொண்டால், மேனேஜ்மென்ட் சார்ந்த படிப்புகளுக்கே மாணவர்கள் அதிக முன்னுரிமை வழங்குகின்றனர். 35 சதவீத மாணவர்கள் மேனேஜ்மென்ட் படிப்புக்காக வெளிநாட்டைத் தேர்வு செய்வதாக Leverage edu ஆய்வு குறிப்பிடுகிறது. 18 சதவீத மாணவர்கள் இன்ஜீனிரிங் படிப்புக்காகவும், 9 சதவீத மாணவர்கள் டேட்டா சயின்ஸ், டேட்டா அனாலிஸிஸ் போன்ற படிப்புக்காக வெளிநாட்டைத் தேர்வு செய்வதாகவும் கூறியுள்ளனர். 60 சதவீத மாணவர்கள் கல்விக் கடன் மூலம் படிப்புச் செலவை சமாளிக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2018-ம் ஆண்டு நிலவரப்படி 7.5 லட்சம் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி பெற்றுவந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 10 லட்சத்தைத் தொட்டுள்ளது. படிப்புக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் சீனா முதல் இடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, பெற்றோர்களுக்கான விசாவும் சமீபத்திய ஆண்டுகளில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. தங்கள் பிள்ளைகளைக் காரணம்காட்டி வெளிநாடு சென்று வாழ பெற்றோர்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர். மாணவர்கள் மட்டும் அல்ல, வசதி படைத்தோர் பலரும் இந்தியாவிலிருந்து வெளியேறி வெளிநாடு சென்று வாழ்வதற்கு ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இந்தியாவும் வெளிநாட்டு மாணவர்களும் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் வகையில் உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை உருவாக்கும் முயற்சியில் இந்தியாவும் இறங்கியுள்ளது.அது தொடர்பாக, மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுவருகின்றன. ஆனால், தரம் வாய்ந்த கல்வி என்பது கட்டடத்துக்குள் மட்டும் சொல்லிக் கொடுப்பது அன்று. நாட்டின் அரசியல், பொருளாதார, கலாச்சார சூழலும் அதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது அரசியல், பொருளாதார ரீதியாக இந்தியா மிக சிக்கலான காலகட்டத்தில் உள்ளது. இந்தச் சூழலை மாற்றி அமைக்காமல் வெளிநாட்டு மாணவர்களை பெரிய அளவில் ஈர்க்க முடியாது. அனைத்துக்கும் மேலாக ஒன்று உள்ளது. வெளிநாட்டு மாணவர்களை இந்தியா நோக்கி இழுப்பதற்கு முன்பாக, இந்திய மாணவர்கள் இந்திய கல்வி நிறுவனங்களை விருப்பத்துடன் தேர்ந்தெடுக்கும் வகையில் அவற்றின் தரத்தை உயர்த்த வேண்டும்.
- முகம்மது ரியாஸ்
riyas.ma@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT