Published : 21 Dec 2015 09:57 AM
Last Updated : 21 Dec 2015 09:57 AM
வீரர்கள் தொழில் தொடங்கும் போது அவர்களுடைய பிரபலம் தொழில் வெற்றியை எளிதாக்குகிறது அதுமட்டுமல்லாமல் முதலீடுகளும் எளிதாக வருகிறது. டென்னிஸ் விளையாட்டு வீரரான மகேஷ் பூபதி ஆதரவில் ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்போர்ட்ஸ்365 தற்போது டென்னிஸ்ஹப் டாட் காம் (www.tennishub.in) என்ற நிறுவனத்தை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 1,000 கோடி ரூபாயை இந்நிறுவனத்துக்குத் திரட்ட இலக்கு வைத்துள்ளார் மகேஷ் பூபதி.
விளையாட்டு
டென்னிஸ் விளையாட்டு வீரரான விஷ்ணுவர்த்தன் மற்றும் டென்னிஸ் பிரியரான ஆப்ரோஷ் கான் ஆகியோரால் பிரத்யேகமாக டென்னிஸ் விளையாட்டு பொருட்களை விற்பதற்கென்று டென் னிஸ்ஹப் ஆன்லைன் நிறுவனம் தொடங்கப் பட்டது. இந்நிறுவனம் ஓட்டப் பந்தய வீரர்களுக்கு தேவையான ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இதைத்தான் வாங்க தற்போது ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.
ஸ்போர்ட்ஸ்365 நிறுவனத்தில் இயக்குநர் பொறுப்பில் இருந்து வரும் மகேஷ் பூபதி ஆதரவில், கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக் காவை சேர்ந்த பவர்ஹவுஸ் வென்ச்சர் நிறுவனத் திடமிருந்து 53 கோடி ரூபாய் நிதி திரட்டியது. மகேஷ் பூபதி ஏற்கெனவே குளோப்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்தை 2002-ம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அதுமட்டுமல்லாது பூபதி டென்னிஸ் அகாடமி ஒன்றையும் நடத்தி வருகிறார். பெங்களூரைச் சேர்ந்த பல்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்தான் ஸ்போர்ட்ஸ்365 என்ற ஆன்லைன் நிறுவனத்தை 2012-ம் ஆண்டு தொடங்கியது.
இந்நிறுவனம் ஆன்லைனில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி சாதனங்களை விற்பனை செய்துவருகின்றது. மகேஷ் பூபதி அவரது மனைவி லாரா தத்தா, கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல் என விளையாட்டு துறைகளில் பிரபலமடைந்து இருப்பவர்களே இந்த நிறுவனத்தின் விளம்பர தூதர்களாகவும் (பிராண்ட் அம்பாசிடர்) பங்குதாரர்களாகவும் இருப்பதால் வென்ச்சர் முதலீடுகள் அதிக மாக கிடைக்கின்றன. விற்பனையும் அதிகமாக நடக்கிறது.
இந்த நிதியாண்டில் 38 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது ஸ்போர்ட்ஸ்365. மேலும் அடுத்த வருடத்திற்கு 100 கோடி ரூபாய் இலக்கு வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் இந் நிறுவனம் 150 பிராண்டுகளைச் சேர்ந்த 35,000 விளையாட்டு சாதனங்களை விற்பனை செய்து வருகிறது.ஓட்டப் பந்தய வீரர்களுக்கான பொருட் களை பிரத்யேகமாக விற்பதற்கென்று ரன்னிங்ஹப் (www.runninghub.in) என்ற இணையதளத்தை பல்ஸ் ஸ்போர்ட்ஸ் தொடங்கியிருக்கிறது. இந்நிறுவனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உலகத் தரம் வாய்ந்த ஓட்டப்பந்தயம் சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்கப்படுகின்றன. இந்த பொருட்களை இந்தியாவில் எந்த மூலையில் இருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் சைக்கிளிங் மற்றும் மற்ற விளையாட்டுக்கென்று மூன்று ஆன்லைன் நிறுவனங்களை நிறுவ பல்ஸ் ஸ்போர்ட்ஸ் திட்டமிட்டு வருகிறது.
இந்தியாவில் கிடைக்காத 15 பிராண்டு களையாவது நம் நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய முயற்சி செய்து வருகிறோம் என்று பல்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் அஷூதோஷ் சவுத்ரி தெரிவித்திருக்கிறார்.
இந்தியா முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள், வெற்றியை எட்டுவது பற்றி பெருங்கனவோடு இருக்கிறார்கள். முழுக்க ஆன்லைன் யுகமாக மாறிக் கொண்டிருக்கும் வேளையில் அவர்களுக்கு இது போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பேருதவியாக இருக்கும். விளையாட்டு வீரர்களும் இதில் இணைந்துள்ளதால் வெளிநாட்டிலிருந்து முதலீடுகளும் அதிகம் வருவது நல்ல விஷயமே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT