Published : 21 Dec 2015 09:42 AM
Last Updated : 21 Dec 2015 09:42 AM
மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி லிமிடெட் நிறுவனம் என்றால் இது எங்கிருக்கு என்று கேட்போரே அதிகம். ஆனால் எம்ஆர்எப் என்றவுடனேயே டயர் தயாரிக்கும் நிறுவனம்தானே என்ற பதிலோடு, ஒரு வலுவான மனிதன் தலைக்கு மேலே டயரை தூக்கிப் பிடித்திருக்கும் லோகோ-வை உடைய நிறுவனம் என்ற கூடுதல் தகவலைத் தருவோர் பலர்.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எம்ஆர்எப், இந்தியாவில் டயர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகும். டயர், டியூப் மற்றும் கன்வேயர் பெல்டுகளை இந்நிறுவனம் தயாரிக்கிறது.
வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்குவதற்காக எம்ஆர்எப் பேஸ் பவுண்டேஷன் எனும் அகாட மியையும் இந்நிறுவனம் நடத்துகிறது. பெயின்ட் தயாரிப்பிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அத்துடன் குழந்தை களைக் கவரும் ஃபன்ஸ்கூல் பொம்மை களும் இந்நிறுவனத் தயாரிப்புகளே.
கேரள மாநிலம் கோட்டயத்தில் ஒரு ஆலையும், தமிழகத்தில் அரக்கோணம், பெரம்பலூரில் தலா ஒரு ஆலையும், புதுச்சேரி மற்றும் தெலங்கானாவில் மேடக் பகுதியில் தலா ஒரு ஆலையும் இந்நிறுவனத்துக்கு சொந்தமாக உள்ளது. கோவாவில் பொம்மைகள் தயாரிக்கும் தொழிற்சாலையை இந்நிறு வனம் செயல்படுத்தி வருகிறது. சென்னையில் இரண்டு ஆலைகளில் பெயிண்ட் உற்பத்தியும் நடக்கிறது.
குஜராத்தில் ஆலை
தற்போது குஜராத் மாநிலத்தில் ஒரு தொழிற்சாலையை அமைக்க எம்ஆர்எப் திட்டமிட்டுள்ளது. இதற் கான பேச்சுவார்த்தைகள் மிகவும் முன்னேறிய கட்டத்தை எட்டியுள்ளன.
குஜராத் மாநிலத்தில் டாடா, ஃபோர்டு, மாருதி, ஹோண்டா கார் தயாரிப்பு நிறுவனங்கள் தொழிற்சாலைகளை அமைத்துள்ளன. இங்கு ஏற்கெனவே சியெட் மற்றும் அப்பல்லோ டயர் தயாரிப்பு நிறுவனங்கள் ஆலைகளை அமைத்துள்ளன.
இந்த வழியில் தற்போது எம்ஆர்எப் நிறுவனமும் குஜராத் மாநிலத்தில் தடம் பதிக்க உள்ளது. அனைத்தும் சாதகமாக அமையும்பட்சத்தில் குஜராத் மாநிலத்தில் அமையவுள்ள மூன்றாவது பெரிய டயர் தயாரிப்பு ஆலையாக எம்ஆர்எப் இருக்கும்.
குஜராத் மாநிலம் பரூச் பகுதியில் இந்த ஆலை அமையக்கூடும் என தெரிகிறது. இந்த ஆலையில் ரூ. 4 ஆயிரம் கோடி முதலீடு செய்ய எம்ஆர்எப் திட்டமிட்டுள்ளது. தொடக் கத்தில் இந்த ஆலை மாதத்துக்கு 10 லட்சம் டயர்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.
400 ஹெக்டேர் பரப்பளவில் இந்த ஆலை அமையும் என தெரிகிறது. குஜராத் மாநிலத்தில் தனியாரிடமிருந்து நிலத்தைப் பெறுவதைக் காட்டிலும் குஜராத் தொழில் மேம்பாட்டுக் கழகம் மூலம் நிலத்தைப் பெறுவதையே எம்ஆர்எப் விரும்புவதாகத் தெரிகிறது.
ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள 3 தொழிற்சாலைகளையும் விரிவாக்கம் செய்ய சமீபத்தில் ரூ. 4,500 கோடியை எம்ஆர்எப் முதலீடு செய்திருந்தது. இந்த ஆலைகளில் நாளொன்றுக்கு 1.20 லட்சம் டயர்கள் உற்பத்தியாகிறது.
எம்ஆர்எப் நிறுவனத்தைப் போலவே தாய்வானைச் சேர்ந்த மாக்ஸிஸ் குழுமமும் டயர் ஆலையை அமைக்க குஜராத்தைத் தேர்வு செய்துள்ளது. அகமதாபாத்திலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள சனந்த் நகரில் இந்த ஆலை அமைய உள்ளது. இதற்காக மாக்சிஸ் குழுமம் ரூ. 2,500 கோடியை முதலீடு செய்கிறது.
மாக்சிஸ் நிறுவன ஆலை நாளொன்றுக்கு 10 ஆயிரம் இரு சக்கர வாகன டயர்களையும் 20 ஆயிரம் டியூபுகளையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்த ஆலை அடுத்த ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும். சியெட், அப்பல்லோ நிறுவனங்களோடு தாய்வான் நிறுவனத் தையும் எதிர்கொள்ள களமிறங்குகிறது எம்ஆர்எப்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT