Published : 31 May 2021 07:46 AM
Last Updated : 31 May 2021 07:46 AM

செவ்வாய் கிரகத்தை நோக்கிப் படையெடுப்பு

முகம்மது ரியாஸ், riyas.ma@hindutamil.co.in

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கும்பட்சத்தில், இந்நூற்றாண்டு இறுதிக்குள் மனிதர்கள் செவ்வாய் கிரகத்துக்குச் சென்று வசிப்பதற்கான சூழலை ஏற்படுத்த முடியும்.

- எலான் மஸ்க்.

தற்போதையை நிலையில், செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் சென்று வசிப்பது என்பது அதீத கற்பனையாக இருக்கலாம். ஆனால், அது தொடர்பான ஆராய்ச்சிகளும், செவ்வாய் கிரகத்தை நோக்கிய பயணங்களும் தீவிரமடைந்துள்ளன. கடந்த ஓராண்டு காலம் கரோனா தொற்று, உயிரிழப்பு, ஊரடங்கு, தொழில் முடக்கம், வேலையிழப்பு என வாழ்க்கையும், வாழ்வாதாரமும் பெரும் நெருக்கடிக்கு உள்ளான காலகட்டமாக இருந்தாலும், இந்தக் காலகட்டத்தில் வேறு சில முக்கிய நிகழ்வுகளும் நடந்துள்ளன.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகம், சீனா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலன்களை அனுப்பின. இம்மூன்று நாடுகள் தவிர, ஐரோப்பிய விண்வெளிக் கழகமும் (இஎஸ்ஏ) ரஷ்யாவின் ரோஸ்காஸ்மோஸ் கழகமும் இணைந்து, அதே ஜூலை மாதத்தில் விண்கலம் ஒன்றை செவ்வாய்க்கு அனுப்ப திட்டமிட்டிருந்தது. சில தொழில்நுட்பக் கோளாறு மற்றும் கரோனா சூழல் காரணமாக அந்தத் திட்டம் தள்ளிப்போனது.

இந்நாடுகள் அனைத்தும் கடந்த ஜூலை மாதத்தை தேர்வு செய்தற்கு காரணம் இருக்கிறது. 26மாதங்களுக்கு ஒரு முறை, பூமியும் செவ்வாயும் அருகருகே வரும். இந்தத் தருணத்தில் பூமியிலிருந்து செவ்வாய்க்கு பயணம் செய்வதற்கான கால அளவு குறையும். அதாவது, 7 மாதங்களில் செவ்வாய் கிரகத்தை அடைந்துவிட முடியும். அதன் காரணமாகவே, இந்த தருணத்தைப் பயன்படுத்தி விண்வெளி ஆராய்ச்சிக் கழகங்கள் விண்கலன்களை செவ்வாய்க்கு அனுப்புகின்றன.

செவ்வாய் பயணம்

செவ்வாய் கிரகத்தின் மொத்த அளவு என்பது பூமியில் பாதிதான். இதனால், செவ்வாய் கிரகம் சூரியனைச் சுற்ற நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது. பூமியின் நாட் கணக்கின்படி செவ்வாய் கிரகத்தில் ஒரு வருடம் என்பது 687 நாட்கள்.

அளவில் சிறியது என்றாலும், பூமியின் நிலப்பரப்புக்கு நிகரான நிலப்பரப்பு செவ்வாய் கிரகத்தில் உள்ளது. முந்தைய காலகட்டங்களில் செவ்வாய் கிரகத்தில் நீர் வளம் இருந்ததற்கான தடங்கள் உள்ளன. ஆக, ஒரு காலத்தில் பூமியைப் போல நீர் வளங்களைக் கொண்டிருந்த செவ்வாய் கிரகம், காலம் செல்லச் செல்ல, நீர் வறண்டு, மணலால் ஆன கோளாக மாற்றம் அடைந்திருக்கிறது என்பதே அறிவியலாளர்களின் ஊகம். எனில், அந்த மாற்றம் எப்படி நடந்தது, செவ்வாய் கிரகத்திலிருந்த நீர் வளம் எங்கே சென்றது, செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா, தற்போது ஏதேனும் நுண்ணுயிர்கள் அங்கு இருக்கக்கூடுமா போன்ற கேள்விகள்தான் அறிவியலாளர்களின் ஆராய்ச்சிகளின் மையமாக உள்ளது.

ஆர்பிட்டர், லேண்டர், ரோவர்

செவ்வாயை நோக்கிய பயணத்தைப் பொருத்த வரையில் மூன்று இயந்திரங்கள் முக்கியமானவை. ஆர்பிட்டர், லேண்டர், ரோவர்.
செயற்கைகோள்தான் ஆர்பிட்டர் எனப்படுகிறது. இது செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படும். அங்கிருந்து செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தின் தன்மையை ஆராயும். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை புகைப்படம் எடுத்து அனுப்பும். தற்போது செவ்வாய் கிரகத்துக்கு ஆர்பிட்டரை அனுப்புவது எளிதானதாக மாறியிருக்கிறது. செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் இயந்திரம்தான் லேண்டர். பூமியிலிருந்து அனுப்பப்படும் விண்கலத்தோடு லேண்டர் பொருத்தப்பட்டிருக்கும். விண்கலம் சுற்று வட்டப் பாதையை அடைந்ததும். அதிலிருந்து லேண்டர் பிரிந்து செவ்வாயில் தரையிறங்கும்.

லேண்டர் போலவே செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கக்கூடிய இயந்திரம்தான் ரோவர். லேண்டர் நகராது. ஆனால், ரோவர் செவ்வாயின் பரப்பில் நகர்ந்து செல்லும். அந்த வகையில் செவ்வாய்க்கு லேண்டரை, ரோவரை அனுப்பி தரையிறக்கச் செய்வதுதான் சவால் நிறைந்தது.

அமெரிக்காவின் ஒன்பதாவது பயணம்

கடந்த ஜூலை மாதம் அனுப்பப்பட்ட மூன்று விண்கலன்களும் 7 மாதங்கள் கழித்து, இவ்வாண்டு பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தன. இதில் ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பிய ‘ஹோப்’ (Hope) என்ற விண்கலம் ஆர்பிட்டராக மட்டுமே செயல்படும். அதாவது, அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்காது. மாறாக, அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும். சீனா ‘தியான்வென் 1’ (Tianwen -1) என்ற விண்கலத்தையும், அமெரிக்கா ‘பெர்சிவரன்ஸ்’ (Perseverance) என்ற ரோவரையும் அனுப்பின. இதில் அமெரிக்காவின் பெர்சிவரன்ஸ் பிப்ரவரி மாதம் செவ்வாயின் தரைப் பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. தவிர, அந்த ரோவரோடு பொருத்தப்பட்டிருந்த ‘இன்ஜெனியூட்டி’ (‘Ingenuity’) என்ற சிறிய ரக ஹெலிகாப்டர் ஒன்றையும் நாசா வெற்றிகரமாக பறக்கச் செய்தது. பூமி அல்லாத பிற கோள் ஒன்றில் ஹெலிகாப்டர் ஒன்று பறந்தது வரலாற்றில் இதுவே முதன்முறை.

பெர்சிவரன்ஸ், செவ்வாய் கிரகத்தில் உள்ள ‘ஜெசெரோ’ (Jezero) என்ற பகுதியில் தரையிறங்கியது. அந்தப் பகுதியில் நீர் வளம் இருந்ததற்கான தடயமாக படுகை இருக்கிறது. இந்தப் பகுதியிலிருந்து செவ்வாய் கிரத்தின் காலநிலை, வானிலை ஆகியவற்றை பெர்சிவரன்ஸ் ஆராயும். பாறைகளிலிருந்து மாதிரிகளை சேகரிக்கும் 2026-ம் ஆண்டு ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் விண்கலம் ஒன்று பெர்சிவரன்ஸ் சேகரித்த மாதிரிகளை பூமிக்கு எடுத்துவரும்.

நாசாவின் முதல் ரோவர் ‘ஸோர்ஜனர்’ (Sojourner) 1997ல் செவ்வாயில் தரையிறங்கியது. 2004ல் ‘ஸ்பிரிட்’ மற்றும் ‘ஆப்பர்சுனிட்டி’ (Sprit and Opportunity) என்ற இரு ரோவர்களும், 2012ல் க்யூரியாசிட்டி (Curiosity) என்ற ரோவரும் செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கின. இந்நிலையில் ஐந்தாவது ரோவராக பெர்சிவரன்ஸ் சென்றுள்ளது.

1960 முதலே செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் பயணம் தொடங்கிவிட்டாலும், அமெரிக்காவின் நாசா, ரஷ்யாவின் ரோஸ்காஸ்மோஸ் (Roscosmos), ஐரோப்பிய விண்வெளி அமைப்பு (இஎஸ்ஏ), இஸ்ரோ ஆகிய நான்கு விண்வெளி ஆராய்ச்சி கழகங்களின் விண்கலன்கள் செவ்வாய் கிரகதத்தை வெற்றிகரமாக அடைந்துள்ளன. இதில் அமெரிக்காவின் நாசா மட்டும்தான் செவ்வாய் கிரகத்தில் ஒன்பது முறை வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. 2030-ல் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பவும் நாசா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு சவால் விடும் சீனா

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்காவின் விண்கலன்களைப் போலவே, சீனாவின் ‘தியான்வென்-1’, பிப்ரவரி மாதம் செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. அதில் பொருத்தப்பட்டிருந்த லேண்டர், மே மாதம் அந்த விண்கலத்திலிருந்து விடுபட்டு செவ்வாயில் ‘உடோபியா பிளானிடியா’ (Utopia Planitia) என்ற பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அந்த லேண்டரோடு பொருத்தப்பட்டிருந்த ‘சுரோங்’ என்ற ரோவர், லேண்டரிலிருந்து விடுபட்டு செவ்வாய் பரப்பில் தரையிறங்கி, நகரத் தொடங்கியுள்ளது.

இதுவரையில் செவ்வாய் கிரகத்தில் இரண்டு நாடுகளே தரையிறங்கியுள்ளன. ஒன்று அமெரிக்கா மற்றொன்று அப்போதைய சோவியத் யூனியன். இதில் சோவியத் யூனியனின் லேண்டர் நீண்ட நாள் நீடித்திருக்கவில்லை. சில வினாடிகளிலே செய
லிழந்து விட்டது. அந்த வகையில் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாதான் அதிக முறை செவ்வாய் கிரகத்துக்கு விண்கலங்களை அனுப்பியுள்ளது. நாசாவும் அவ்வளவு எளிதில்செவ்வாய் கிரத்தில் தரையிறங்கிவிடவில்லை. பல கட்ட தோல்விகளைச் சந்தித்து இருக்கிறது. ஆனால், சீனா இப்போதுதான் முதல் முறையாக செவ்வாய் கிரகத்தில் ரோவரை தரையிறக்குகிறது. முதல் முயற்சியிலே வெற்றி. இந்த வெற்றிதான் சீனாவை விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவுக்கு நிகரான நாடாக பார்க்கச் செய்கிறது.

அமெரிக்கா, ரஷ்யா இரண்டு நாடுகள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகுதான், அதாவது 2003ல் தான் சீனா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியது. ஆனால், இந்த 20 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் முதல் முயற்சியிலே ரோவாரை தரையிறக்கும் அளவுக்கு அது வளர்ந்துள்ளது. அந்த வகையில் பொருளாதாரத்தில் மட்டுமல்ல, தற்போது விண்வெளி ஆராய்ச்சிலும் சீனா அமெரிக்காவுக்கு சவால் விடும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

இந்தியாவின் மங்கள்யான்

தொழில்நுட்ப வளர்ச்சி ரீதியாக அமெரிக்கா, சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியா பின்தங்கியிருக்கும் நாடுதான் என்றாலும், விண்வெளி ஆராய்ச்சியில் குறிப்பிடத்தகுந்த முயற்சிகளை இந்தியாவும் மேற்கொண்டு வருகிறது. செவ்வாய் கிரகத்துக்கு குறைந்த செலவில் விண்கலனை அனுப்பிய பெருமை இந்தியாவுக்கு உண்டு. 2013ம் ஆண்டு இந்தியா செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் என்ற விண்கலத்தை அனுப்பியது. அந்தத் திட்டத்தின் மொத்த செலவு ரூ.450 கோடிதான். இது விண்வெளியைப் பற்றிய
ஹாலிவுட் படமான ‘கிராவிட்டி’யின் பட்ஜெட்டைவிடக் குறைவு.

விண்வெளிப் போர்

விண்வெளி ஆராய்ச்சி என்பது புதிய விஷயங்களை கண்டறிதலை நோக்கமாகக் கொண்டது என்றாலும், அதன் பின்னால், ஒரு நாடு தன் அறிவாற்றலை உலகுக்கு காட்டும் எண்ணமும் உண்டு. அந்த வகையில் கடந்த 40 ஆண்டுகளில் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சி, அரசியல் தளத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளன.

1990-களுக்குப் பிறகு விண்வெளி என்பது ராணுவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறத் தொடங்கியது. சீனா 2007ம் ஆண்டு தன்னுடைய செயற்கைக்கோளைத் தகர்த்து பரிசோதனை மேற்கொண்டது. 2019-ம் ஆண்டில் இந்தியாவும் தன்னுடைய செயற்கைக்கோள் ஒன்றை தகர்த்து, அதை செயலிழக்கச் செய்தது. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக செயற்கைகோள் தகர்ப்பு முயற்சியில் வெற்றிபெற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பிடித்தது. ராணுவ பயன்பாட்டுக்கான செயற்கைகோள்களின் எண்ணிக்கையை சீனா அதிகரித்து வருகிறது. 2019ம் ஆண்டில் சீனா 32 ராக்கெட்டுகளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. கடந்த மாதம் சீனா ஏவிய ராக்கெட்டின் பாகம் இந்தியப் பெருங்கடலில் விழுந்து கலவரத்தை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

ஸ்பேஸ் எக்ஸ்

செவ்வாய் கிரக ஆராய்ச்சில் அரசுகளின் விண்வெளி கழகங்கள் மட்டுமல்ல,எலான் மஸ்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ போன்ற தனியார் நிறுவனங்களும் களம் காணும் முயற்சியில்இறங்கியுள்ளன. 2026ல் மனிதனை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப ஸ்பேஸ் எக்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த வேகத்தில் போனால், எலான் மஸ்கின் வாக்குப் பலித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x