Published : 02 Nov 2015 10:54 AM
Last Updated : 02 Nov 2015 10:54 AM
பண்டிகைக் காலம் தொடங்கி விட்டாலே கொண்டாட்டம்தான். நமக்கல்ல... வியாபாரிகளுக்கு... வியாபார நிறுவனங்களுக்கு இந்த நாட்கள்தான் சுறுசுறுப்பாக இயங்கு வதற்கான வாய்ப்பு. வீடுகளுக்கான அடிப்படை மளிகைப் பொருட்கள் முதல், புது டிவி, மிக்ஸி, போன் என தொடங்கி புது உடைகளில் வந்து நிற்கும் நுகர்வோரின் தேவைகள். ஆண்டிறுதி நாட்களில் அமைந்துவிடும் தொடர்ச்சியான பண்டிகைக் காலம் என்பது பெரியவர்களுக்கு மகிழ்ச்சி கொண்டு வருகிறதோ இல்லையோ ஏகப்பட்ட செலவுகளை கொண்டுவந்துவிடும்.
பொதுவாக பண்டிகை நாட்களில் நாம் மட்டும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. நமது குடும்பத்தினர், உறவினர்கள், சுற்றத்தினர், நண்பர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றே விரும்புவோம். இதற்காக செலவு செய்வதும் நமக்கு கூடுதல் மகிழ்ச்சி தரும்.
பண்டிகைகளின் உண்மையான மகிழ்ச்சி இப்படி பகிர்ந்து கொள் வதில்தான் அடங்கியுள்ளது. ஆனால் இப்படி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதில் காலங்காலமாக ஒரு தவறு செய்து வருகிறோமே என்பதை உணர்த்துவதே இந்த கட்டுரையின் நோக்கம். பிற பண்டிகை நாட்களில் இதைக் குறிப்பிடுவதைவிட... இந்த தீபாவளி நேரத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
தீபாவளிக்கு முன்போ அல்லது அடுத்த நாளோ உங்களது நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாருடைய வீட்டுக்காவது சென்றி ருக்கிறீர்களா... அப்படியே செல்வதாக இருந்தாலும் வெறுங்கையுடன் செல்ல மாட்டீர்கள் என்பதும் உண்மை. கையில் இனிப்பு, பழம், பட்டாசு என பெரும் பார்சலுடன்தான் செல்வோம். அங்கு ஏற்கெனவே அதுபோல பல பார்சல்களை தீபாவளிக்கு முன்பிருந்தே வாங்கி வைத்திருப்பார்கள். அதையும் வேடிக்கையாக பார்த்துவிட்டுதான் திரும்பி வருவோம். நமது வீட்டுக்கு வருபவர்களது பழக்கமும் இதுவாகத்தான் இருக்கும்.
இப்படி ஒவ்வொரு வீட்டிலும் தேவைக்கு அதிகமாக சேரும் உணவு பதார்த்தங்கள் வீணாகப் போகிறது என்கிறது ஒரு ஆய்வு. இப்படி சேரும் உணவு பொருட்களில் 30 சதவீதம் வரை வீணாகிறது என்கிறது. குறிப்பாக வீட்டு விசேஷங்களுக்கு தயாரிக்கப்படும் உணவுகள் இந்தியாவில் 30 சதவீதம் வரை வீணடிக்கப்படுவதாக திட்ட உருவாக்கம் மற்றும் புள்ளிவிவரங்கள் துறை அறிக்கை குறிப்பிடுகிறது.
பிறந்த நாள், திருமண நாள், அல்லது வேறு பண்டிகைகள் என எல்லா நாட்களுக்கும் பொதுவாக நமது அன்பை வெளிப்படுத்த ஒரே முறையையே காலங்காலமாக எல்லோரும் பயன்படுத்தி வருகிறோம். அதுவும் அந்த குறிப்பிட்ட ஒரு நாளில் கொடுத்துவிட வேண்டும் என்பதற் குத்தான் திட்டமிடுகிறோம். தீபாவளிக்கு அன்பளிப்பு கொடுத்து அதை தீபாவளி அன்றே பயன்படுத்திவிடுவார்கள் என்றும் யோசிக்கிறோம் இதனால் தான் உணவுப் பொருட்கள் வீணடிக்கப் படுகிறது என்கிறது அந்த புள்ளி விவரம்.
தீபாவளியை பொறுத்தவரை பட்டாசு பார்சல்களும் இந்த ரகம்தான். பட்டாசுகளில் ஆர்வம் இல்லாத வர்களுக்குகூட, ஆயிரக்கணக்கில் செலவு செய்து வாங்கிக் கொடுக்கும் பழக்கம் நமக்கு இருக்கத்தான் செய் கிறது
மாற்று வழிகள்
நமது வாழ்த்துகளையோ அன்பையோ தெரிவிக்க இப்படி வகை தொகையில்லாமல் ஒரே சமயத்தில் வாங்கி கொடுப்பதுதான் வழி என்று புரிந்து வைத்திருக்கிறோம். பத்து பேர் பார்க்க வருகிறார்கள் என்றால் பத்து பேரும் இனிப்பு பார்சலுடன் வந்தால் எத்தனை நாட்கள் வைத்திருந்து சாப்பிட முடியும். பரிசு பெறுபவர்களுக்கு என்ன வேண்டும் அல்லது என்ன தேவையாக இருக்கும் என்பதை யோசிக்க வேண்டும்.
இப்படி மாற்று வழிகளை யோசிப் பதுதான் காலத்துக்கு ஏற்ப சிறந்த முறையாக இருக்கும். எல்லா வகை யிலும் கால மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது இந்த பண்டிகை கால மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் முறைகளுக்கும் மாற்று வழிகள் தேவையாகத்தான் இருக்கிறது.
இப்படி மாற்றி யோசிப்பதன் மூலம் உங்களது அன்பு தனித்தன்மையுடன் வெளிப்படும். தவிர அன்பளிப்பின் முழு பலனையும் பெறுபவர் பெற வேண்டும், குறிப்பிட்ட நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும் இல்லை யென்றால் வீணாகிவிடும் என்கிற எந்த நெருக்கடிகளும் இல்லாத அன்பளிப்பாக இருக்க வேண்டும். இப்படி யோசிப்பதுதான் காலத்துக்கு பொருத்தமானது.
கிப்ட் வவுச்சர்கள்
பண்டிகை நாட்களில் வாழ்த்தும் அன்றே நீங்கள் நினைத்த அன்பளிப்பை வழங்கலாம். அதை அன்பளிப்பு பெறுநர் தனது தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதுதான் கிப்ட் வவுச்சர்கள் வழங்கும் வசதி. இதன் மூலம் நாம் வழங்கும் அன்பளிப்பு அவரது தேவைகளில் ஒன்றாக மாறு கிறது.
நமக்கு பிடித்தமானதை கொடுப்பது ஒரு வகை அல்லது பெறுநருக்கு பிடித்தமானதை நாம் தேர்ந்தெடுப்பது ஒன்னொரு வகை. இது இரண்டும் இல்லாமல் அவருக்கு பிடித்தமானதை, அவரே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்குகின்றன கிப்ட் வவுச்சர்கள்.
இந்த அன்பளிப்பு வவுச்சர்களைப் பொறுத்தவரை இரண்டு வகைகளில் பயன்பாட்டில் உள்ளன. குறிப்பிட்ட தொகைக்கு என்று பொதுவான அன்பளிப்பு வவுச்சர்களாக வாங்குவது அல்லது குறிப்பிட்ட நிறுவனம் அல்லது பிராண்ட் வாங்க மட்டும் பயன்படுத்துவதுபோல இருக்கும். இது இரண்டாவது வகை. இது தவிர ஆன்லைனில் பொருட்களை வாங்கு வதற்கு, ஆன்லைன் மூலமாகவே கிப்ட் வவுச்சர்களை வாங்கி அனுப்பும் வசதிகளும் வந்துவிட்டன.
குறிப்பிட்ட தொகைக்கான வவுச் சர்களை பொறுத்தவரை பல பிராண்டுகள் விற்கும் பல்பொருள் அங்காடிகளில் பயன்படுத்திக் கொள்ள முடியும். தவிர கிப்ட் வவுச்சர்களை பெறும் வசதி கொண்ட வர்த்தகர்கள் வர்த்தக நிறுவனங்களில் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வகையிலான கிப்ட் வவுச்சர்கள் மூலம் அன்பளிப்பு பெறுபவர் தனது விருப்பத்திற்கு அல்லது தேவைக்கு ஏற்ப அதை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
குறிப்பிட்ட பிராண்டுக்கான வவுச்சர்களை பொறுத்தவரை இந்த பிராண்டு வாங்க செலவு செய்து கொள்ளுங்கள் என்று கொடுப்பதற்கு ஈடானது. குறிப்பாக குறிப்பிட்ட காலணி அல்லது உடைகள், சுற்றுலா பயணத்துகான கிப்ட் வவுச்சர்களைகூட அன்பளிப்பாக வழங்க முடியும்.
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இனிப்பு ஒரு கிலோ கொடுக்க வேண்டும் என்பதுதான் உங்களுக்கான ஆசை என்றால், அதை வாங்கி கிஃப்ட்டாக கொடுப்பதைவிட அதற்கான வவுச்சரைக் கொடுத்துவிடலாம். அன்பளிப்பு பெறுபவர் தனது நேரத்துக்கு ஏற்ப கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இனிப்பு வாங்கிக் கொள்வார்.
இந்த வவுச்சர்களை எங்கே வாங்குவது என்கிற எந்த குழப்பமும் அலைச்சலும் தேவையில்லை. கிப்ட் வவுச்சர்களை வழங்க பல இணைய வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. தவிர பல தனியார் வங்கிகளும் கிப்ட் கார்டுகளை வழங்குகின்றன. எல்லாமே ஆன்லைன் வடிவமாகிவிட்ட இந்த நாட்களில் இ-கிப்ட் வவுச்சர்கள் வாங்கி இமெயில் அனுப்பிவிடுவது இன்னும் எளிமையானது.
இப்படி நிகழ்கால வடிவங்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் காலத்தோடு பொருந்துகிறீர்கள். தவிர உங்களது அன்பளிப்பும் வித்தியாசமானதாக, பெறுபவரை மகிழ்ச்சியடையச் செய்யக் கூடியதாக இருக்கும் என்பதே உண்மை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT