Published : 09 Nov 2015 11:50 AM
Last Updated : 09 Nov 2015 11:50 AM

உன்னால் முடியும்: வாய்ப்புகளை பயன்படுத்தத் தயாராக இருக்க வேண்டும்

கோயம்புத்தூரைச்சேர்ந்தவர் செந்தில்குமார். படிக்கும் காலத்திலேயே வேலைக்குச் சென்று தொழில் அனுபவம் பெற்று, படித்து முடித்ததும் தனியாக தொழில் தொடங்கியுள்ளார். சோலார் எனர்ஜி துறையில் தனி நிறுவனம் தொடங்கி வெற்றிகரமான தொழில்முனைவராக உருவெடுத்துள்ளார். இவரது இந்த வளர்ச்சிக்கு பின்னால் இருபது ஆண்டுகள் கடும் உழைப்பு உள்ளது. அந்த அனுபவத்தை இந்த வாரம் ``வணிகவீதி’’ வாசகர்களுக்காகப் பகிர்ந்து கொண்டார்.

படித்தது மெக்கானிக்கல் இன்ஜினீயரிங். படிக்கும் காலத்திலேயே வேலைக்குச் சென்றேன். அதன் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டுதான் படிப்பு செலவுகளை கவனித்துக் கொண்டேன். கூடவே தொழில் அனுபமும் கிடைத்தது. படித்து முடித்ததும் மோட்டார் பம்புகள் தயாரிக்கும் தொழில் தொடங்கினேன். கோயம்புத்தூரில் அதற்கு என்று நல்ல சந்தை இருந்தது.

தனியாக தொடங்கி தொழில் நிறுவனமாக வளர்த்து, வட இந்தியா வரை தனியாக சந்தை பிடிக்கும் அளவுக்கு வளர்ந்தேன். 1998-ம் ஆண்டில் கோவையில் ஏற்பட்ட சில அசம்பாவிதங்களால் மொத்தத் தொழி லும் பாதிக்கப்பட்டது.

இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தொழிலை முடக்கியது. கிட்டத் தட்ட இரண்டு ஆண்டுகள் தொழிலில் தாக்குபிடித்து இருக்க வேண்டிய நிலைமையில், வேறு தொழிலை செய் தால்தான் நிலைக்க முடியும் என்பதை தெரிந்து கொண்டேன். எனக்கு ஏற்கெனவே எலெக்ட்ரிக்கல் துறை சார்ந்த பொருள்கள் உற்பத்தி செய்யத் தெரியும் என்பதால் தொழிலை அப்படியே மாற்றிவிட்டேன்.

சிறு தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான தெர்மா மீட்டர்கள் உற்பத்தி செய்தேன். அப்போது தொழிலை மீண்டும் முதலிலிருந்தே தொடங்கிய நிலைமையில் இருந்தேன்.

இரண்டு பேர் மட்டும் வேலைக்கு இருந்தார்கள். வேலைகளை அவர்களுக்கு கற்றுக் கொடுத்துதான் வாங்க முடியும். தயாரித்த மீட்டரை எடுத்துக் கொண்டு சிறு தொழில் நிறுவனங்களுக்கு சென்று அதன் பயன்களை அவர்களுக்கு விளக்கி, பொருத்தி சோதனை செய்து காட்டி விற்பனை செய்ய வேண்டும். கிட்டத்தட்ட எல்லா வேலைகளையும் நான் ஒருவனே செய்தேன்.

இப்படி இரண்டு ஆண்டுகள் போராட் டங்களுக்கு பிறகு ஓரளவு வருமானம் வரத்தொடங்கியது. இதற்கிடையே வங்கி கடனுதவி கிடைக்கத்தொடங்க, தொழி லுக்கு பெரிய அளவிலும் முதலீடு செய்ய முடிந்தது. தொழில் முனைவோராக நம்பிக்கையும் வருமானமும் வரத் தொடங்கிய பிறகுதான் திருமணம் செய்து கொண்டேன்.

இதிலிருந்து அடுத்த கட்ட தொழில் வளர்ச்சியாக சோலார் உற்பத்தி துறையில் ஈடுபட ஆரம்பித்தேன். சோலார் மூலம் இயங்கும் பம்புகள், வாட்டர் ஹீட்டர், கூலிங் சிஸ்டம், சோலார் தெருவிளக்குகள் போன்றவற்றில் கவனம் செலுத்தினேன். குறிப்பாக சோலார் பேனல் மற்றும் சிறிய ரக காற்றாலை மூலம் வீட்டுக்கு தேவையான மின்சாரத்தை பெறும் ஹைபிரிட் சிஸ்டத்தை உருவாக்கித் தருவதில் கவனம் செலுத்தினேன். அப்போதுதான் தனி நிறுவனமாக தொடங்கினேன். ஆனால் காற்றாலை (விண்ட் எனர்ஜி) எல்லா பகுதிகளிலும் சாத்தியமாகவில்லை என்பதால், சோலார் பிளாண்ட் அமைப்பதற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வேலைபார்த்து வருகிறேன்.

தற்போது காட்டுக்குள் வன விலங்குகளின் நீர் தேவைக்காக தானியங்கி சோலார் பம்புகள் அமைத்து கொடுக்கும் வனத்துறையினருக்கு கருவிகள் தயாரித்து கொடுக்கிறேன்.

இதை முதலில் எனது சொந்த முயற்சியிலும், செலவிலும் உடுமலை அருகே புலிகள் சரணாலயத்தில் ஏற்படுத்திக் கொடுத்தேன். அதைப்பார்த்து வனத்துறையினரே ஆர்டர் கொடுத்தனர். இப்படி ஒவ்வொன்றையும் எனது முயற் சியின் மூலமே அடைந்து வருகிறேன் என்பதுதான் எனது கடந்த கால பாதையாக இருக்கிறது.

மின் தட்டுப்பாடு அதிகமாக இருந்த காலங்களில் நிறைய சோலார் எனர்ஜி நிறுவனங்கள் வந்தன. ஆனால் 45 சதவீத நிறுவனங்கள் நிலைக்கவில்லை. ஏனென்றால் இதற்கு அரசு உதவிகள் மிகவும் குறைவுதான். நான் ஏற்கெனவே அடிபட்ட ஆள் என்பதால் மிகக் கவனமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பேன். இப்படித்தான் சோலார் துறையில் நிற்க முடிகிறது.

தற்போது நேரடியாக 50 பேர் பணியாற்றி வருகின்றனர். இன்ஜினீயரிங் தொடர்பான வடிவமைப்பு சார்ந்த பயிற்சி மையத்தையும் நடத்தி வருகிறேன்.

நீண்ட கால திட்டத்தை யோசிக்கலாம் ஆனால் அதையே நீண்ட காலம் யோசிக்க கூடாது. வாய்ப்புகளை பயன்படுத்த எப்போதும் தயாராக இருக்க வேண்டும், விடாமுயற்சியும், நம்பிக்கையும் வேண்டும். இதுபோன்ற சில தன்னம்பிக்கை வார்த்தைகளே என்னை எப்போதும் இயக்கிக் கொண்டிருக்கிறது என்கிறார். இந்த எண்ணங்கள் எல்லா தொழில் முனைவோருக்கும் அவசியம் என்பதுதான் காலம் தரும் பாடம்.

தொடர்புக்கு: maheswaran.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x