Last Updated : 16 Nov, 2015 03:09 PM

 

Published : 16 Nov 2015 03:09 PM
Last Updated : 16 Nov 2015 03:09 PM

குறள் இனிது: கொஞ்சம் நடிங்க பாஸ்!

நீங்கள் தண்ணீர் இருக்கும் குளமோ, ஏரியோ, ஆறுகளைப் பார்த்து எவ்வளவு நாட்களாகிறது? அங்கு மீன்களைப் பார்த்து ரசித்திருக்கிருக் கிறீர்களா? அவைகளைப் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசைப்பட்டிருக்கிறீர்களா? தூண்டில் இல்லாமலே மீன் பிடிக்க என்றாவது முயன்றதுண்டா? நாம் கரையோரத்தில் அமர்ந்து காலை நனைக்கும் பொழுதும், தண்ணீரில் நிற்கும் பொழுதும், பல மீன்கள் அருகில் வந்தாலும், நம்மால் ஒன்றைக் கூட பிடிக்க முடியாது. நமது கால் விரல்களைக் கடிக்கும் மீன்கள் கூட, நாம் சிறிது அசைந்தாலும் உடனே ஓடி விடும். அப்படியிருக்க கொக்கு மட்டும் எப்படி அவற்றைப் பிடித்து விடுகிறது?

கொக்கு மீன் பிடிக்கும் முறை வித்தியாசமானது. மீனைத் தேடி, அது அங்கும் இங்குமாக நடக்காது. ஆடாமல் அசையாமல் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கும். நடிகர் திலகத்திற்கு ஒப்பான நடிப்பிருக்கும். அது சிலை போல நிற்பதால் மீன்கள் பயமின்றி அதனருகில் செல்லும். ஆனால், சிறிய மீன்களைக் கண்டும் காணாதது போல அது விட்டுவிடும். தனக்குத் தேவையான மீன் அருகில் வந்தவுடன் சட்டென அதனை ஒரே குத்தாகக் கொத்தி விடும். சிறிது தாமதித்தாலும், குறி தப்பினாலும் மீன் நழுவி ஓடி விடுமே!

காவல் துறையினர் இந்த மாதிரி பாவ்லா காட்டி பிடித்த குற்றவாளிகள் ஏராளம். சில மாதங்களுக்கு முன்பு வடமாநிலக் கொள்ளையரை சென்னைப் புறநகரில், கூண்டோடு பிடித்தது ஞாபகம் இருக்கும். சமீபத்தில் டெல் நிறுவனம் EMC2 நிறுவனத்தை வாங்குவதற்கு இரகசியமாக செயல்பட்டதையும், ஆனால் அதையும் மீறி அச்செய்தி கசிந்ததால், அவற்றின் பங்கு விலைகள் பாதிக்கப்பட்டதையும் படித்து இருப்பீர்கள். நாணயமில்லாத பணியாளர்களை வேலையிலிருந்து நீக்குவதற்கும் இந்த முறை மிகவும் உபயோகமானது.

வணிகமோ, அலுவலகமோ, போட்டியாளரை, எதிரியை வீழ்த்த வேண்டுமென்றால், ஒன்றும் செய்யாததுபோல் கொஞ்சம் நடிப்பதன் மூலம் அவரை அசர வைப்பது நன்று. அசிரத்தையாக இருப்பவரைத் தானே வெல்வது எளிது. ஆனால் எதிரி சுதாரிக்கும் முன்பே அவரைத் தாக்க வேண்டும். எதிர்பார்க்காத எதிரியிடமிருந்து, எதிர்பார்க்காத நேரத்தில் விழும் அடியில்தான் வலியும் அதிகம். பாதிப்பும் அதிகம். அத்துடன் என்ன நடக்கிறது என்பதை அவர் புரிந்து கொள்வதற்கு முன்பே, வேலையை முடித்துக் கொள்ள வேண்டும். உங்கள் தாக்குதலின் போது குறி தப்பக் கூடாது. மேலும் வேகமும், பலமும் இல்லையென்றால் மீன் வழுவுவது போல, எதிரியும் தப்பித்து விடுவார். நீங்கள் எடுக்கும் நடவடிக்கை, எதிரியை முழுவதுமாக முடிப்பதாக இருக்க வேண்டும். அப்புறம் என்ன? உங்களுக்கு வெற்றிதான்!!

காரியம் சாதிக்க நினைப்பவர்கள், சரியான காலம் வரும் வரை கொக்கைப்போல ஒடுங்கி இருக்க வேண்டும்; நேரம் வாய்க்கும் பொழுது, கொக்கு பாய்ந்து மீனை இரையாக்கிக் கொள்வது போல, விரைந்து செயல்பட வேண்டுமென்கிறார் வள்ளுவர்.

கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன்

குத்துஒக்க சீர்த்த இடத்து (குறள் 490)

somaiah.veerappan@gmail.com





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x