Published : 01 Feb 2021 10:02 AM
Last Updated : 01 Feb 2021 10:02 AM
saravanan.j@hindutamil.co.in
கரோனா பேரழிவுக்குப் பின் பல்வேறு மாற்றங்களுக்கு உலகம் உள்ளாகியிருக்கிறது. முக்கியமாக மக்களின் செலவு முறைகள் கூட வெகுவாக மாறியிருக்கிறது. இத்தகைய சூழலில் பெரும்பாலானோரின் கவனம் தங்கத்தின் பக்கமும், பங்குச்சந்தையின் பக்கமும்தான் திரும்பியிருக்கிறது.
கரோனாவுக்குப் பிறகு வங்கி சேமிப்பு, ரியல் எஸ்டேட் போன்றவற்றின் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். தங்கமும் பங்குச்சந்தையும் தான் அவர்களின் தேர்வாக மாறியிருக்கிறது. இவை இரண்டையும் சரியாகக் கையாளத் தெரிந்தவர்கள் சிறப்பான பொருளாதார எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
காரணம் நிதி சார்ந்த நெருக்கடி வரும்போதெல்லாம் மக்களின் ஆபத்பாந்தவனாக மாறுவது தங்கம்தான். இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் முழுக்க இதுதான் நிலை. பங்குச்சந்தையின் மீதான ஆர்வத்துக்கு காரணம் இதில் நிகழ் நேரத்தில் அதிக லாபம் பார்க்கலாம் என்ற நம்பிக்கை. இவை இரண்டும் குறித்த அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். இல்லையெனில் இவற்றிலும் நஷ்டம்தான் மிஞ்சும்.
இந்தியா போன்ற நாடுகளில் ஆபரணங்களில் ஆர்வத்தைக் காட்டுகிறோம் என்றால் பிற நாடுகள் முதலீட்டுக்காக தங்கத்தை வாங்குகிறார்கள். ஆனால் முதலீட்டுக்காக தங்கத்தை வாங்குகிறவர்களைக் காட்டிலும் ஆசைக்கு வாங்குகிறவர்கள் அதிகம். சரியாக சொன்னால் ஆபரணங்கள் மீது மோகம் கொண்ட இந்தியாதான் தங்க நுகர்வில் முன்னணியில் இருக்கிறது. சொல்லப்போனால் இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடு. இந்தியாவுக்கு அடுத்து சீனா அதிக அளவில் தங்கத்தை நுகர்கிறது.
ஆனால் கரோனாவுக்குப் பின் ஒட்டுமொத்த சர்வதேச தங்க வர்த்தகமும் பாதிக்கப்பட்டதால் ஆபரணத் தங்கத்தின் விற்பனை குறைந்தது. இதனால் இந்தியா, சீனாவின் தங்க நுகர்வு குறைந்தது. மேலும் நிதி நெருக்கடியை சமாளிக்க பெரும்பாலானோர் தங்கத்தை அடகு வைக்கவும், விற்கவும் செய்துள்ளனர். இதனால் தங்கச் சந்தையில் பெரிய மாற்றங்கள் உண்டாகியிருக்கின்றன. நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கி சேகரிப்பதை குறைத்துள்ளன. இதனால் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஆனால் அப்போதும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் முதலீட்டுக்காக தங்கத்தை வாங்கியவர்கள் முன்பை விட அதிகமாக தங்கத்தை வாங்க தொடங்கியிருக்கிறார்கள். இந்தியாவில் தங்கத்தின் மீதான மோகத்தைத் தாண்டி திருமணக் கலாசாரத்தோடு கலந்திருக்கிறது. என்னதான் நவீன தலைமுறை பல மாற்றங்களுக்குப் பழகினாலும் தங்கம் குறித்த மனநிலையில் மாற்றம் காணவில்லை. தங்க வர்த்தகத்தையும், அதன் பயன்பாடுகளையும் தெளிவாகப் புரிந்துகொண்டால் தங்கம் லாபத்தைத் தரும் இல்லையெனில் தங்கம் நஷ்டத்தையே தரும்.
பங்குச்சந்தையில் இழப்பு தெளிவாகத் தெரியும் ஆனால் தங்கத்தினால் ஏற்படும் இழப்பு மறைமுகமானது. செய்கூலி, சேதாரம், வரி எனப் பல விஷயங்கள் தங்கத்தின் மறைமுகமான இழப்புக்கு காரணமாகின்றன. தேவையில்லாமல் தங்கத்தை வாங்குவது பின்னர் நெருக்கடியில் விற்பது பெரிய அளவில் இழப்புக்கு வழிவகுக்கும். பங்குச்சந்தையைப் பொருத்தவரை கரோனாவுக்குப் பின் வரலாறு காணாத உச்சங்களை எட்டியிருக்கின்றன. கடந்த மார்ச்சில் கண்ட இறக்கத்திலிருந்து 100 சதவீத ஏற்றம் கண்டிருக்கிறது. சென் செக்ஸ் 25 ஆயிரம் புள்ளிகளிலிருந்து 50 ஆயிரம் புள்ளிகளுக்கு ஏற்றம் கண்டது.
இந்த ஏற்றம் பலரின் கவனத்தை ஈர்த்து ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது. உள்நாட்டு முதலீட்டாளர்களின் ஈடுபாட்டை விட அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடு அபரிமிதமாக இருந்ததே இந்த ஏற்றத்துக்குக் காரணமாக உள்ளது. அதேசமயம் திடீர் இறக்கங்களுக்கும் உள்ளாகிறது. அப்போது பெரும் பதட்டத்துக்கும் குழப்பத்துக்கும் உள்ளாகிறார்கள். ஏற்ற இறக்கம் இல்லாமல் லாப, நஷ்டம் இல்லை.
ஆனால் பெரும்பாலானோர் சந்தையை சரியாகப் புரிந்துகொள்ளாததால் நஷ்டத்தைச் சந்திக்கிறார்கள். வர்த்தகத்தின் அடிப்படை குறைந்த விலையில் வாங்கி அதிக விலையில் விற்பது. ஆனால் பெரும்பாலானோருக்கு எது குறைந்த விலை எது அதிக விலை என்பது தெரியாது. அது தெரியாத நிலையில் பலரும் ஏற்றத்தின் போது சந்தைக்குள் நுழைகிறார்கள் விலை மதிப்பு உயர்வாக இருக்கும்போது பணத்தை போட்டுவிட்டு இறக்கத்தின் போது பதட்டத்தில் விற்றுவிடுகிறார்கள். இதனால் பெரிய அளவில் நஷ்டம் உண்டாகும்.
சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கு அப்பாற்பட்டு சரியான பங்குகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்தால் லாபம் உண்டு. அதிலும் காலம் முக்கிய அம்சமாக இருக்கிறது. எவ்வளவு காலம் வைத்திருக்கிறோமோ அதைப் பொறுத்து லாபமும் இருக்கும். ஆனால் தொடர்ந்து அதன் நிதிநிலை, துறைசார்ந்த செய்திகள், நிறுவனத்தின் நிர்வாக முடிவுகள் உள்ளிட்டவற்றை கவனிக்க வேண்டும்.
போர்ட்ஃபோலியோ அடிப்படையில் முதலீடு செய்பவர்கள் மிகக் குறைவு. சந்தையில் குறுகிய காலத்தில் பணம் பார்க்க விரும்புபவர்கள் அதிக வால்யூமில் வர்த்தகம் செய்ய வேண்டும். அதற்கேற்ப பணம் இல்லாதவர்கள், சேமிப்பதுபோலத்தான் சிறுக சிறுக பங்குகளில் பணத்தைப் போட வேண்டும். முதலீட்டின் கால அளவைப் பொருத்து லாபம் கிடைக்கும். ஆனால் ஒவ்வொரு முதலீட்டாளரும் தனித்துவமானவர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எனவே வேறொருவரின் முதலீட்டு முறைகள், லாபம் ஆகியவற்றைப் பார்த்து எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்ள கூடாது. நம்முடைய நிதி நிலை, இலக்கு, ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே முதலீடுகளைத் திட்டமிட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT