Published : 25 Jan 2021 10:13 AM
Last Updated : 25 Jan 2021 10:13 AM
somasmen@gmail.com
தமல் பாந்தோபாத்யாய் எழுதி, 2016-ம் ஆண்டு வெளியான ‘பந்தன்’ என்ற புத்தகம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஆயிரம் ரூபாய் கடன் வழங்குவதை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்பு, எவ்வாறு வங்கியாக மாறியது என்பதை சுவாரஸ்யமாக விவரிக்கிறது. பந்தன் வங்கியின் நிறுவனர் சந்திரசேகர் கோஷ் திரிபுரா மாநிலத்தில் மிகவும் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை இனிப்புக் கடை வைத்திருந்தார்.
சந்திரசேகர் கோஷ், வங்கதேசத்தில் உள்ள பல்கலைகழம் ஒன்றில் முதுகலைப் பட்டம் பெற்றார். தந்தைக்கு உதவுவதற்காக கல்லூரியில் படிக்கும் போது பகுதி நேர வேலை செய்து குடும்பத்திற்கு பண உதவி செய்தார். முதுகலை படிப்பை முடித்த பின்னர் வங்கதேசத்தின் கிராம முன்னேற்ற குழுவில் பணியாற்றத் தொடங்கினார். வறுமை ஒழிப்பு, ஏழைகளுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றிற்காக அர்ப்பணிக்கப்பட்ட அந்த அமைப்பில் பணியாற்றிய அனுபவம், பிற்காலத்தில் அவர் பந்தன் நிறுவனத்தை உருவாக்குவதற்கான அடித்தளத்தளமாக அமைந்தது.
சந்திரசேகர் கோஷ், தான் ஆரம்பகாலத்தில் வசித்தவந்த இடத்திற்கு அருகாமையில் உள்ள காய்கறிச் சந்தைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு நாள் சிவப்பு சட்டை அணிந்த ஒருவர் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிளைச் சந்தையின் நுழைவாயிலில் நிறுத்தியபோது, அரை டஜன் பெண்கள் அவரிடம் விரைந்து சென்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அந்த நபர் 500 ரூபாய் கொடுத்து 5 ரூபாயை வட்டியாக வசூலித்தார். மதியத்திற்குப் பிறகு நீல சட்டை அணிந்துகொண்டு அவர் வந்தபோது காய்கறியை விற்றுக் கொண்டிருந்த அந்தப் பெண்கள் அனைவரும் 500 ரூபாயை திருப்பிக்கொடுத்தனர்.
இதே நிகழ்வு தினந்தோறும் நடப்பதை சில நாட்கள் ஆர்வத்துடன் பார்த்தார். தினமும் காலையில் பக்கத்து ஊர்களிலிருந்து வரும் விவசாயிகளிடமிருந்து தக்காளி, கத்திரிக்காய் போன்ற காய்கறிகளை வாங்கவே அந்தப் பெண்கள் அவரிடம் 500 ரூபாய் வாங்குகின்றனர். விவசாயிகளிடமிருந்து வாங்கிய காய்கறிகளை சந்தையில் வியாபாரம் செய்துவிட்டு, வீடு திரும்பும் சமயத்தில், தாங்கள் காலையில் வாங்கிய 500 ரூபாயை அந்த மோட்டார் சைக்கிள் மனிதரிடம் அந்தப் பெண்கள் திருப்பி கொடுக்கின்றனர். அரை நாளுக்கு 1% வட்டி என்றால் ஆண்டுக்கு 730% வட்டி.
ஏன் இவ்வளவு வட்டி கொடுக்கிறீர்கள் என கோஷ் அந்தப் பெண்களிடம் கேட்டபோது அவர்கள் சொன்ன பதில் அவருக்கு புதிய திறப்பைத் தந்தது. ‘நாங்கள் அவருக்கு வட்டி எதுவும் தரவில்லை. அதற்கு பதிலாக அவருக்கு ஒரு கப் டீ வாங்கித் தருகிறோம் என நினைத்துக் கொள்கிறோம். இந்த தொகையை கொடுக்கும் அளவிற்கு எங்களுக்கு வருமானம் இருக்கிறது. தவிர, எந்த விதமான உத்தரவாதமும் ஆவணமும் இல்லாமல் வங்கி எங்களுக்கு பணம் தருமா ?அதோடு மட்டுமல்லாமல் இந்தப்பணம் நாங்கள் இருக்கும் இடத்திற்கு வருகிறது’என்றனர். பந்தன் அமைப்பிற்கான அடித்தளம் இப்படித்தான் நிகழ்ந்தது.
2001-ம் ஆண்டு, சுய உதவிகுழுக்கள் மூலம் மகளிருக்கு கடன் வழங்குவதற்கும் தொழில் முனைவோர்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு லாப நோக்கற்ற மைக்ரோ நிதி நிறுவனமாக, தனது பயணத்தைத் தொடங்கிய பந்தன், அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மிகப் பெரிய வங்கி சாரா மைக்ரோ நிதி நிறுவனமாக மாறியது.
இந்தச் சூழலில், மைக்ரோ நிதி நிறுவனம் என்ற தளத்திலிருந்து வங்கி என்ற தளத்தை நோக்கி நகர பந்தன் விரும்பியது. ரிசர்வ் வங்கியிடமிருந்து உரிமம் பெற்று 2015-ம் ஆண்டு வங்கியாக உருவெடுத்தது பந்தன். ஒரு மைக்ரோ நிதி நிறுவனமாக பந்தன் வெற்றிகரமாக செயல்பட்டபோதிலும் ஒரு வங்கியாக அது வெற்றிபெற முடியுமா என்பது போன்ற பல கேள்விகள் எழுந்தன.
மைக்ரோ நிதி நிறுவனமாக இருந்தபோது, ஆண்களுக்கு கடன் வழங்காமல் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மட்டுமே கடன் வழங்கி வந்து கொண்டிருந்து. வங்கியாக மாறிய பின்னர் அனைவருக்கும் கடன் கொடுக்க வேண்டும். இதுவரை கடன்களை மட்டுமே வழங்கிக்கொண்டிருந்த நிறுவனம் வைப்பு நிதிகளை சேகரிப்பதற்கு வேறு வகையான திறமை தேவைப்பட்டது.
சந்திர கோஷின் அனுபவங்கள் அதற்கு கைகொடுத்தன. பெரும் தொழிலதிபர்களுக்கு கடன் கொடுத்து கவிழ்ந்து போன வங்கிகளின் மத்தியில், சிறிய கடனாளிகளுக்கு கடன் வழங்கி லாபகரமாக செயல்பட்டுவரும் ஒரு வங்கியைப் பற்றிய இந்தப் புத்தகம், கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கால இந்திய வங்கித் தொழிலை அலசுகிறது. வங்கியில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமல்லாமல், தொழில் முனைவோராக முன்னேறத் துடிக்கும் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT