Published : 19 Oct 2015 11:48 AM
Last Updated : 19 Oct 2015 11:48 AM
கோவையைச் சேர்ந்தவர் அருணா முருகநாதன். குடும்பத் தலைவி யாக இருந்தவர் ஏதோ ஒரு ஆர்வத்தில் பொழுது போக்காக கற்றுக் கொண்ட பெயிண்டிங் மூலம் இன்று நிரந்தர வருமானத்தை உருவாக்கிக் கொண் டிருக்கிறார். கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இந்த தொழிலில் இருப்பதால் வாடிக்கையாளர்கள் தேடி வந்து வாங்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். தவிர எந்த கற்றல் பின்புலமும் இல்லாமல் பெயிண்டிங் துறையில் வந்துள்ள பல நவீன மாற்றங்களையும் உள்வாங்கி கோவை வட்டாரத்தில் இந்த துறையில் தொழில் முனைவோராக அடையாளம் பெற்றிருக்கிறார்.
இவரது தொழில் அனுபவத்தை இந்த வாரம் ``வணிகவீதி’’ பகுதியில் பகிர்ந்து கொண்டதிலிருந்து...
சொந்த ஊர் விழுப்புரம். பிளஸ் 2 வரைதான் வீட்டில் படிக்க வைத்தனர். அதுவே பெரிய விஷயம். திருமணத்துக்கு பிறகு கணவரது ஊரான கோவையிலேயே செட்டிலாகிவிட்டேன். திருமணத்துக்கு பிறகு எந்த வேலையும் இல்லாமல் வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை. அதனால் பக்கத்தில் இருந்த ஒரு பெயிண்டிங் வகுப்புக்கு பயிற்சிக்காக சென் றேன்.
வீட்டில் சும்மா இருக்கும் நேரங்களில் வீட்டை அலங்காரம் செய்ய இந்த பயிற்சி உதவும் என்றுதான் சென்றிருந்தேன். ஆனால் கற்றுக்கொண்டு வந்த பின்னர் அதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. அந்த நேரத்தில் குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டிய சூழல். இரண்டு குழந்தைகளுக்கு பிறகு, அவர்கள் ஓரளவுக்கு வளர்ந்து பள்ளி செல்ல தொடங்கிய பிறகு மீண்டும் பெயிண்டிங் ஆசை துளிர்விட்டது.
இப்போது ஏற்கெனவே கற்றுக்கொண்ட அனுபவத்திலிருந்து சின்ன சின்ன அளவில் ஓவியங்கள், கிளாஸ் பெயிண்டிங்குகள் என தொடங்கினேன். ஏற்கெனவே இதனை தொழிலாக எடுத்துச் செய்பவர்களிடமிருந்து பெயிண்டிங் வேலைகளை வாங்கினேன். அவர்களிடமிருந்தே இதற்கான பிரத்யேக மெட்டீரியல்கள் எங்கு கிடைக்கும் என தெரிந்து கொண்டேன்.
இதற்கு அடுத்து மெல்ல மெல்ல அடுத்தடுத்த பெயிண்டிங் முயற்சிகளில் இறங்கினேன். கொஞ்சம் பெரிய அளவிலான ஆயில் பெயிண்டிங் வேலைகளை, வரவேற்பறை அலங்கார போர்ட்ரைட் படங்கள் என செய்யத் தொடங்கினேன். தொழிலில் ஓரளவு அனுபவம் பிடிபட்டதால் அடுத்து தஞ்சாவூர் ஓவியங்கள் செய்வதற்கும் இறங்கினேன். தஞ்சாவூர் பெயிண்டிங் வகைகள் அதிக வேலைப்பாடுகள் மற்றும் நேரம் எடுத்துக் கொள்பவை. அதையும் எனது அனுபவத்திலேயே கற்றுக் கொண்டேன்.
பொதுவாக நான் எனது உறவினர்கள் வீடுகளுக்கோ அல்லது, திருமண நிகழ்வுகளுக்கோ சென்றால் அங்கு என்ன மாதிரியான அலங்காரங்கள் செய்தி ருக்கிறார்கள்; அலங்காரப் பொருட்கள், பெயிண்டிங்குகள் உள்ளன என்பதை கவனிப்பேன். பெயிண்டிங்குகளைப் பார்த்தால் அதை எந்த வகையில் உருவாக்கி யிருக்கிறார்கள், என்ன பொருட்களை பயன்படுத்தி இருக்கின்றனர் என்பதை கண்டுபிடித்துவிடுவேன். அதை வீட்டுக்கு வந்ததும் முயற்சி செய்து பார்ப்பேன். இப்படி நான்கைந்து ஆண்டுகள், புதிய முயற்சிகளும், வேறு நபர்களுக்காக செய்து கொடுத்தும் வந்தேன்.
ஒரு கட்டத்தில் எனது உறவினர்களில் சிலர் அவர்கள் வீட்டு குழந்தைகளுக்கு பெயிண்டிங் கற்று கொடுக்கச் சொல்லி கேட்டனர்.
அப்படி சொல்லிக் கொடுக்கத்தொடங்கி அது தனி தொழிலாக வளர்ந்து எனக்கு அடையாளம் கொடுத்தது. இதனிடையே தனியாக ஆர்டர்கள் வாங்கி விற்பனை செய்யவும் தொடங்கி விட்டேன்.
எனது நெருங்கிய தோழியை தொழி லுக்கு அழைத்துக் கொண்டேன். அவரும் ஆலோசனைகளை கொடுப்பார். ஆர்டர்கள் கிடைப்பதற்கு ஏற்ப என்னிடம் பெயிண்டிங் கற்றவர்கள் மற்றும் தொழில் முறையில் செய்பவர்களுக்கு வேலைகளை கொடுத்து வாங்குகிறேன். தற்போது நிரந்தரமாகவே ஏழு பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பு கொடுத்து வருகிறேன்.
ஓவியங்களுக்கான பிரேம்களை நிரந்தரமாக ஒருவர் செய்து தருகிறார். தஞ்சாவூர் ஓவியத்துக்கான பொருட்கள் சென்னையிலிருந்து வாங்கி வருகிறேன். எனது கணவர் ஏற்கெனவே மார்கெட்டிங் துறையில் இருப்பதல் இதற்கான மார்கெட்டிங் வேலைகளை பார்ப்பதும் எளிதாக இருந்தது. கோயமுத்தூரின் முக்கியமான பரிசுப் பொருள் விற்பனைக் கடைகள், ஷாப்பிங் மால்களில் உள்ள கடைகளுக்கு கிப்ட் பெயிண்டிங்குகளை சப்ளை செய்து வருகிறோம்.
அடுத்ததாக எங்களது பெயிண்டிங் குகளுக்கு என்று தனியாக விற்பனையகம் வைக்கும் முயற்சிகளில் உள்ளோம். ஏற்கெனவே இந்த முயற்சி எடுத்தோம் என்றாலும், உறவினர் ஒருவர் கொடுத்த தவறான வழிகாட்டுதலால் முடியாமல் போய்விட்டது. தற்போது வங்கிக் கடன் மூலம் அந்த முயற்சிகளில் ஈடுபட உள்ளோம் என்றார்.
ஆர்வத்தோடு தொழில் தொடங்கலாம். ஆர்வத்தோடு பார்க்கும் ஒன்றையே தொழிலாக தொடங்கி வெற்றி பெற்றவரது அனுபவம் என்பது ரசனைக்கானது அல்ல; முயற்சிக்கானது.
maheswaran.p@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT